
அரசியல் கட்சிகள் பிளவுபட்டு புதிய கட்சிகள் உருவாகுவதும் சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் புதிய கட்சிகளை உருவாக்குவதும் இலங்கை அரசியலுக்கு புதியதொரு விடயமல்ல. இந்த நிபந்தனைகளையெல்லாம் மீறி, சில கட்சிகள் தங்களது அரசியல் தேவைக்காக குறிப்பாக தேர்தல் காலங்களில் எதிரி கட்சியாக இருப்பினும் அவற்றுடன் சேர்ந்து பயணிப்பது இன்று, நேற்று வந்த நடந்துவரும் விடயமல்ல.
இந்த வரிசையில் தற்போது புதிதாக உருவாக்கப்படிருக்கும் கூட்டுதான் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு. இது உருவாக்கப்படவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது, இதன் பின்னணி என்ன, இதன் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி அமையப்போகின்றன என்பவற்றை இங்கு ஆராய்ந்து பார்ப்போம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெருவிருட்சத்திலிருந்து பிரிந்துசென்ற கிளைகள்தான் முஸ்லிம் அரசியலில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. மர்ஹூம் அஷ்ரஃப் காலத்தில் ரசூல் என்பவர் பிரிந்துசென்று முஸ்லிம் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அஷ்ரஃபின் மறைவையடுத்து ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக அதாஉல்லா தேசிய காங்கிரஸையும், றிஷாத் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் ஆரம்பித்தார்கள். கடைசியாக முஸ்லிம் காங்கிரஸுடன் முரண்பட்டுக்கொண்டு முன்னாள் செயலாளர் ஹஸன் அலி, முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத், அன்சில், தாஹிர், தாஜுதீன் உள்ளிட்ட குழுவினர் வெளியேறினர்.
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் நாங்கள் இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தனர். கட்சியை தூய்மைப்படுத்தப் போகிறோம் என்று பல கூட்டங்களை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். எனினும், அவை ஓரிரு கூட்டங்களுடன் பிசுபிசுத்துப்போய்விட்டன. முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுத்தளங்களில் கூட்டம் நடத்துவதற்கு பல சவால்கள் காணப்பட்டன. இதற்காக முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிரான கட்சிகளை நாடவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மறைமுக ஆதரவை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டம் நடாத்துவதற்கு இடவசதிகளை செய்துகொடுப்பதிலிருந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுவரை மக்கள் காங்கிரஸ் திரைமறைவில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கியதாக நம்பப்படுகிறது. இவர்கள் பல தடவைகள் இரகசிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், மக்கள் காங்கிரஸ் இதனை மறுத்துவந்தது.
இவ்வாறு சென்றுகொண்டிருந்து மு.கா. எதிரணி தனக்கான ஒரு அரசியல்தளத்தை உருவாக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸை எதிர்த்து மேடை போட்டு பேசுவதால் எந்தப் பலனுமில்லை. தாங்களும் அரசியல் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தனர். இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேரடியாக இணைந்துகொண்டால் இருக்கின்ற செல்வாக்கும் குறைந்துவிடும் என்பதை நன்கறிந்திருனர். இதனால் தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கிவந்தனர்.
பூச்சியத்திலிருந்து ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கு பெருமளவான நிதியுதவி தேவைப்பட்டது. இதற்காக அவர்கள் அரபு நாடுகளின் தூரகங்களை நாடினார்கள். முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை நன்கறிந்திருந்த தூதரகங்கள் அவர்களுக்கு அறிவுரைகூறி, முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டு அதிலிருந்து உங்கள் உரிமைகளுக்காக போராடுங்கள் என்று அறிவுரை கூறி வெறுங்கையோடு அனுப்பிவைத்தன.
கடைசியாக முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிரான கட்சிகளை இணைத்துக்கொண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி யோசித்தனர். இதில் பிரதானமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளை இணைத்துக்கொள்வதற்கு திட்டம்தீட்டப்பட்டது. இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நழுவிக்கொண்டது. றிஷாத் பதியுதீனுக்கும் அதாஉல்லாவுக்கும் இடையிலிருந்த தன்மானப் பிரச்சினை காரணமாக தேசிய காங்கிரஸ{ம் ஒதுங்கிக்கொண்டது.
இது முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான கூட்டமைப்பே தவிர, ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதல்ல என்று அதாஉல்லா அப்போதே பகிரங்கமாகவே கூறிவிட்டார். இரண்டு கட்சிகளும் ஒதுங்கிவிட்டதால் கூட்டமைப்பில் இணையும் சாத்தியப்பாடு இல்லையென றிஷாத் பதியுதீன் ஆரம்பத்தில் கூறிவந்தார். இருப்பினும் பசீர் சேகுதாவூத், ஹஸன் அலி ஆகியோர் அடிக்கடி றிஷாத் பதியுதீனுடன் கூட்டமைப்பு தொடர்பில் அடிக்கை பேச்சுவார்த்தை நடாத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், மு.கா. எதிரணி கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்பு எனும் கட்சியை பணம் கொடுத்து கொள்வனவு செய்துள்ளது. இந்த கட்சி யாரிடமிருந்தது, எப்படி கொள்வனவு செய்யப்பட்டது, இதன் நோக்கம் என்பவற்றை பற்றி விரிவாக ஆராய்வோம்.
கொழும்பு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் வைத்திருந்த கட்சி பலரிடம் கைமாறி இப்போது ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்பு என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கட்சி காதர் என்பவரை செயலாளராகக் கொண்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மிப்லார் மௌலவி ஐக்கிய சமாதான முன்னணி என்ற பெயரில் இக்கட்சியில் போட்டியிட்டு 14,379 வாக்குகளை பெற்றிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இந்தக் கட்சியை கொள்வனவு செய்வதற்கு முஸ்லிம் செல்வந்தர் ஒருவர் முன்வந்தபோது அந்த முயற்சி கைகூடவில்லை. பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இந்தக் கட்சியை கொள்வனவு செய்வதற்கு பேசிக்கொண்டிருந்தது. அதுவும் இழுபறி நிலையில் இருந்தபோது, தற்போது ந.தே.மு. தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டுள்ளதால் அதுவும் கைவிடப்பட்டுள்ளது.
கடைசியாக மு.கா. எதிரணி குறித்த கட்சியை கொள்வனவு செய்வதற்கு முஜிபுர் ரஹ்மானை நாடியுள்ளது. கௌரவமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கின்ற காரணத்தினால், அவர் நேரடியாக அந்தக் கட்சியை விற்பதற்கு இணங்கவில்லையென கூறப்படுகிறது. இதுபற்றி தனது சகாக்களுடன் பேசுமாறு கூறிவிட்டு, முஜிபுர் ரஹ்மான் ஒதுங்கிக்கொண்டார். பின்னர் அவரது சகாக்களுடன் பசீர் சேகுதாவூத் மற்றும் ஹஸன் அலி ஆகியோர் கட்சியை கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்தக் கட்சி கொள்வனவில் மு.கா. எதிரணி நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாலும் இதன் பின்னணியில் பல அரசியல் பெரும்புள்ளிகள் இருப்பதாக பேசப்படுகிறது. நிதி வழங்கல் மற்றும் பேரம்பேசலில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், முஸ்லிம் கட்சி தலைவர் ஒருவரும் இதன் பின்னாலிருந்து செயற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிப்படையாக சொன்னால், இந்தக் கட்சி கொள்வனவு செய்யப்பட்டதன் பிரதான நோக்கமே முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதுதான்.
வண்ணாத்திப்பூச்சி சின்னத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்பு என்ற இந்தக் கட்சியின் செயலாளாரக ஹஸன் அலியும், தவிசாளராக பசீர் சேகுதாவூதும் நியமனம் பெற்றுள்ளனர். இந்தக் கட்சி அண்மையில் றிஷாத் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸுடன் கூட்டணியொன்றை அமைத்துக்கொண்டுள்ளது. மு.கா. எதிரணி இவ்வளவு காலமும் யாரின் பின்னணியில் இயங்கி வந்துள்ளார்கள் என்பதை உணர்த்துவதற்கு இதைவிட பெரிய ஆதாரம் தேவைப்படாது என்று நினைக்கிறேன்.
இனி விடயத்துக்கு வருவோம். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பின் தலைவராக ஹஸன் அலியை நியமிப்பதாக றிஷாத் பதியுதீன் அறிவித்துள்ளார். மர்ஹூம் அஷ்ரஃபின் மறைவின் பின் முஸ்லிம் காங்கிரஸ் யாப்புகளை மாற்றி தலைவர் பக்கம் அதிகாரங்களை மையப்படுத்தியிருக்கின்ற காரணத்தினாலேயே றிஷாத் பதியுதீனுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஹஸன் அலி இதன்போது தெரிவித்திருந்தார்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்திலும் ஏனைய இடங்களில் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து ஐ.தே.க.வில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கூட்டமைப்பு எனும்போது பொதுச்சின்னத்தில் போட்டியிட முன்வந்திருக்கவேண்டும். பதுளையில் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டதுபோல பொதுவான சின்னத்தில் போட்டியிட வேண்டும் அல்லது வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு மு.கா. எதிரணி இணங்கியிருக்கவேண்டும்.
இதைவிடுத்து, மயில் சின்னத்தில் போட்டியிட முன்வந்ததன் மூலம் தங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவர்களாகவே வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்பு என்ற கட்சியை கொள்வனவு செய்தது மக்கள் காங்கிரஸுடனான உறவை மறைப்பதற்காகவே என்பதை அவர்களாகவே மக்கள் மன்றில் நிரூபித்துவிட்டார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் போல இந்தக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
போனால் போகட்டும் இந்தக் கூட்டமைப்பு மூலம் மு.கா. எதிரணிக்கு நன்மை இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறியே. மு.கா. எதிரணி தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்களுக்கான ஒரு தளத்தை தேடியுள்ளார்களே ஒழிய, இதன்மூலம் சமூகத்துக்கு எவ்வித நன்மைகளும் கிட்டப்போவதில்லை. அம்பாறை மாவட்டம் என்பது முஸ்லிம் காங்கிரஸின் வாக்குவங்கி அதிகமுள்ள மாவட்டம். அதனை உடைப்பதற்கு அதே கட்சியின் அதிருப்தியாளர்களை சிலரை மயில் சின்னத்தில் போட்டியிட வைப்பதன் மூலம் மக்கள் காங்கிரஸ் சரியான காய்நகர்த்தலை மேற்கொண்டுள்ளது.
இதனை அறியாமல் தனக்கு கூட்டமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து ஹஸன் அலி மனம்நெகிழந்து பேசியுள்ளார். புதிய கூட்டமைப்பில் தலைமைத்துவ சபை மாத்திரமே இருக்கும், அதிகாரம் பொருந்திய செயலாளர் இருப்பார் என்ற மேடைகளில் பேசிவந்த ஹஸன் அலி, ஏன் இன்று தலைவர் பதவியை பெருமனம்கொண்டு ஏற்றுக்கொண்டார் என்பது தெரியவில்லை. அதிகாரமில்லாத செயலாளர் பதவி தேவையில்லை என்றுதானே ரவூப் ஹக்கீமுடன் சண்டைபிடித்தார். இப்பொழுதும் அதிகாரமில்லாத தலைவர் பதவியைத்தானே அவர் பெருமனம்கொண்டு ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடுவதால் அதன் முழு அதிகாரமும் மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீனிடமே இருக்கும். தலைவர் றிஷாத் பதியுதீன் சொல்பவற்றைத்தான் அவர் செய்வார். ஆக மொத்தத்தில் தற்போது ஹஸன் அலிக்கு வழங்கப்பட்டுள்ள தலைவர் பதவி என்பது வெறும் பொம்மை என்பது அவருக்கே தெரியும். அது கௌரவத்துக்கான பதவியே தவிர, அதில் எவ்வித அதிகாரங்களும் இல்லை. ஹஸன் அலிக்கு அழகான தொப்பியொன்றை றிஷாத் பதியுதீன் அணிவித்திருக்கிறார்.
தற்போது புதிய முறையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலில், பட்டியலில் இருப்பவர்களில் உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற முழு அதிகாரமும் கட்சியின் செயலாளருக்கே இருக்கிறது. இதன்பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் பட்டியல் உறுப்பினர்களை மயில் கட்சியின் செயலாளர் சுபைர்தீனே தெரிவுசெய்வார். ஹஸன் அலி தலைவராக இருந்தாலும் அவரால் ஒருவரையும் தெரிவுசெய்யமுடியாது. இப்படியான சூழ்நிலையில் மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக வந்தவர்களுக்காக இருப்பவர்களை இழப்பதற்கு யாரும் விரும்பமாட்டார்கள்.
இதுதவிர, கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற இதே பெயரில் புதிய கூட்டமைப்பொன்று அப்போதே உருவாக்கப்பட்டிருந்தது. அதில் தலைவராக ஹுனைஸ் பாருக்கும் செயலாளராக எம்.ஐ. மொஹிதீனும் பொருளாளராக காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு காதர் மஸ்தான் வெற்றிபெற்றார்.
இந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தற்போது ஈ.பி.டி.பி. கட்சியுடன் இணைந்து வடக்கில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற பெயர் எங்களுக்கே உரித்தானது என்ற அதன் தற்போதைய செயலாளர் அறிக்கை விட்டுள்ளார். இதனால் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பு சட்டச்சிக்கலை எதிர்நோக்க நேரிடும். இதனால், புதிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் பழைய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்கப்போவததில்லை என்பது காலம் கற்றுத்தந்த வரலாறு. முஸ்லிம் காங்கிரஸை உடைப்பதற்காக உருவான இதன் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்துகொள்வார்கள். சமூக நலன்கருதி ஊவா மாகாணசபை தேர்தலில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை சாத்தியமாகாதபோது இது எம்மாத்திரம். மக்கள் ஆட்களை பார்ப்பதில்லை நோக்கங்களையே பார்க்கிறார்கள் என்பது தெரியவரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
✍ துருவன்