இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா?
ஜெரூசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ள காரணத்தினால் இலங்கைக்கு அமெரிக்காவின் வழங்கப்படும் நிதியுதவிகள் நிறுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவால் இலங்கைக்கு 22 மில்லியன் அமெரிக்க டொடல் வருடாந்தம் நேரடி மற்றும் மறைமுக நன்கொடையாக கிடைக்கின்றன. இந்த நிதி அமெரிக்க ஜனாதிபதியால் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததன் முலம் இலங்கை அமெரிக்காவின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை காலமும் அந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டு வந்த நேரடி மறைமுக நிதிகளை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு 128 ஆதரவாகவும், 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தமை அமெரிக்காவை அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது என கொழும்பு இராஜதந்திர வட்டாங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா.வின் தீர்மானத்திற்கு வாக்களித்தால் அமெரிக்காவால் வழங்கப்படும் நேரடி, மறைமுக நிதிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே மிரட்டியிருந்தார். இது குறித்து இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.