A+ A-

மட்டக்களப்பில் மு.கா. கட்டுப்பணம் செலுத்த தவறியது ஏன்?

மட்டக்களப்பு மாநகர சபை, கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபை, வாகரை பிரதேசசபை போன்வற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்த தவறிய காரணத்தினால் தற்போது சுயேட்சைக்குழுவில் போட்டியிடுகின்றது. இதற்காக புதன்கிழமை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் மு.கா. சார்பாக தேர்தல் முகவர் ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்காக, கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு விசேட உலங்கு வானூர்தி மூலம் மட்டக்களப்புக்கு நோக்கி விஜயம்மேற்கொண்டார். இதன்போது நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உலங்கு வானூர்தி குருநாகலில் 9.20 மணக்கு தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்வதற்கு காலநிலை இடம்கொடுக்காத காரணத்தினால், அங்கிருந்த மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷாவுடன் இணைந்து நிக்கவரெட்டிய பிரதேசபைக்கான வேட்புமனு தாக்கல்செய்யப்பட்டது.

அதன்பின்னர், விமானியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது விமானத்தில் பயணித்த கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் சமீம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க 10 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி உலங்கு வானூர்தி புறப்பட்டது. 10.20 மணவியளவில் சீகிரியா வரை சென்ற உலங்கு வானூர்தி சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்து பயணத்தை தொடரமுடியவில்லை.

கட்டுப்பணம் செலுத்துவதற்கு இன்னும் ஒன்றரை மணிநேரமே எஞ்சியுள்ள நிலையில், பிளீஸ் கெப்டன் எப்படியாவது அவசரமாக செல்லுங்கள் என்று நிசாம் காரியப்பர் விமானியிடம் கெஞ்சினார். மட்டக்களப்பு நோக்கி பயணிக்கமுடியாது என்று விமான கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து வந்த அறிவித்தலையும் தாண்டி, திருகோணமலை ஊடாக செல்வதற்கு விமானி முயற்சித்தார். இருப்பினும் சீரற்ற காலைநிலையினால் கிழக்கு நோக்கி பயணிக்கமுடியாமல் அவர்கள் சென்ற உலங்கு வானூர்தி, அங்கிருந்து கொழும்பு நோக்கி திரும்பிவந்தது.

இதன்பின்னர் குறிந்த 3 இடங்களிலும்; சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் தற்போது சுயேட்சைக்குழு மூலம் போட்டியிடவுள்ளனர்.