A+ A-

விபசாரத்தின் மறுபக்கம்


இருள்சூழ்ந்த இடத்தில் நிற்கும் அவர்களை, இருட்டும் காட்டிக்கொடுக்கும். காரிருளும் சிவப்பைக் காட்டிக்கொடுக்கும் என்பது போல… அவர்களும் மனிதர்கள் என்பதை, சதைதிண்ணும் மனிதர்களும், சதையில் கிடைத்த வருமானத்தை சுரண்டித் திண்ணும் மனிதர்களும் ஏடெடுத்தும் பார்ப்பதில்லை.

(சிந்தனையில் மாற்றம் வேண்டும். இதைவிட சொல்லுவதற்கு ஒன்றுமே இல்ல)

'வயிரு எங்கே கேட்டுச்சு'

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற வெவ்வேறு ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, ஒவ்வொரு நிமிடங்களும் பல்வேறான போராட்டங்களை மனிதன் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதில், பாலியல் ரீதியான திருப்தியைப் பெற்றுக்கொள்வது ஒருவகையான ஆசையாகும். அந்த ஆசை, மானத்தையும் விற்றுவிடும் அளவுக்கு சிலருக்கு அமைந்துவிடுகின்றது.

அதனைதான் “பழைய தொழில்” என்பர். உலகிலேயே மிகவும் பழைய தொழிலான அந்தத் தொழிலைச் செய்கின்ற பெண்களைத் தேடி, ஆண்கள் செல்வதற்கும், அந்தத் தொழிலை, பெண்கள் தேடிக்கொள்வதற்கும் அல்லது ஈடுபடுவதற்கும் பல்வேறான காரணங்கள் இருக்கின்றன.

அதிலொரு காரணம் தான் தனித்திருத்தல், அதேபோல, தன்னுடைய ஜோடியைப் பிரிந்திருத்தல் அல்லது மரணமடைந்திருத்தல் அதன்பின்னர் ஏற்படுகின்ற பாலியல் ஆசைகளைத் திருப்திபடுத்திக் கொள்வதற்காக, பாலியல் தொழிலாளர்களை நாடுகின்றனர்.

தன்னுடைய ஜோடி, பாலியல் உறவுக்கு மறுகின்ற போதும், இவ்வாறான தொழிலாளர்களை, ஆண், பெண் என இருதரப்பினரும் நாடவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஜோடியின் 'சுயநலம் ' மற்றும் 'ஒடுக்குமுறை ' ஆகியனவை காரணமாகவும், இந்தத் தொழிலாளர்களை நாடவேண்டிய நிலைமை சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த ஆசையைக் கொண்ட ஆண்கள், தங்களுக்கு அருகில் வரும்போது, அவர்களை திருப்திப்படுத்துவதற்காக, பாலியல் தொழிலாளர்களான பெண்கள் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர்.

எனினும், அந்த ஆசையே, இறுதியில் சமூக நோய்களைக் காவிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடும் என்பதை யாரும் எளிதில் மறந்துவிடக்கூடாது. அதனால்தான், தேவையான, பாகாப்பான உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்வது உசித்தமானதென வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

பாலியல் தொழிலாளர்களை, இலகுவில் கண்டுகொள்ளலாம். இருள் சூழ்ந்த இடத்தில் நிற்கும் அவர்களை, இருட்டும் காட்டிக்கொடுக்கும். காரிருளும் சிவப்பைக் காட்டிக்கொடுக்கும் என்பது போல, அத்தொழிலாளர் இருக்கும் இடத்துக்கு,“ரெட் லைட் ஏரியா” என்பர்.

நாளாந்த செய்திகளைப் பார்க்கும் போது, பாலியல் தொழிலாளர்களை, கூவியழைக்கும் தொழிலாளர்கள், நடமாடும் தொழில்செய்வோர், குளிரூட்டப்பட்ட நன்கு திட்டமிட்ட, செல்வந்தர்கள் மட்டுமே சென்றுவருகின்ற இடங்கள், குடும்ப வறுமைக்காக, வீட்டுக்குள்ளேயே அத்தொழிலைச் செய்வோரென, இன்னுமின்னும் வகைப்படுத்திகொண்டே போகலாம்.

அத்தொழிலை, சிலர் நிர்ப்பந்தத்தின் பேரில் செய்கின்றனர். இன்னும் சிலர், அத்தொழிலுக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். குடும்ப சூழல், வறுமை, போதைக்கு அடிமையாகி, அதற்குப் பணத்தை திரட்டிக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறான காரணங்களால், அத்தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர்.

பாலியல் தொழிலாளர்களிடம் சென்றவர்கள், திருப்தியுற்றனரா அல்லது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை இழந்துவிட்டனரா அல்லது எதையாவது காவிக்கொண்டு (நோய்களை) வந்தனரா? என்பதற்கெல்லாம், அவர்களிடம் சென்றுவந்தவர்கள் மனந்திறந்தால் மட்டுமே அறிந்துகொள்ளமுடியும்.

எனினும், சதையை விற்றுப்பிழைக்கும் அப்பாவிப் பெண்களை, பாதுகாப்பு போர்வைக்குள் இருப்போர் உள்ளிட்டோர் சுரண்டாமலும் இல்லை.

கொழும்பு, காலி, அநுராதபுரம், குருநாகல் உள்ளிட்ட நகரங்களில், கூவியழைக்கும் பாலியல் தொழிலாளர்கள் பேசிக்கொள்வதையும், தரகுகாரர்கள் முணுமுணுப்பதையும் சாடைமாடையாகக் கேட்கையில், நமகே கூசும்.

அத பிஸ்னஸ் நே, (இன்று வியாபாரம் இல்லை), சின்ன பையன் ஒருத்தன் வந்தான், எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு அனுப்பிவிட்டேன் என்று பாலியல் தொழில் புரிவோரும்
அத ஒயாட்ட வாசி நேத, (இன்றைக்கு உனக்கு வருமானம் தானே) பொய் சொல்லாதே, நான் பார்த்துகிட்டுதான் இருக்கேன், காலையிலேயே ஐந்து பேருடன் போனாய், எனக்கு உரிய பங்கு எங்கே? என்று தரகுப்பணம் கேட்போர் பச்சைப் பச்சையாக கேட்பதும் உண்டு.

இவையாயும், ஒருவேளை சாப்பாட்டுக்கு மட்டுமே என்று கூறினால் அது சரியாகிவிடும். ஆனால், இன்னும் சிலர் போதையேற்றுவதற்கும், இந்தத் தொழிலை செய்கின்றனர் என, பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொழில்புரிவோரை, பல பெயர்களில் அழைப்பர். அவர்களும் மனிதர்கள் என்பதை, சதைதிண்ணும் மனிதர்களும், சதையில் கிடைத்த வருமானத்தை சுரண்டித் திண்ணும் மனிதர்களும் ஏடெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனால்,

“ஊரிருல்ல மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சி,
இள மனச கெடுத்துச்சி,
உசுர விட மானம் பெருசு, புத்திக்குத் தான் தெரிஞ்சிச்சு,
வயிரு எங்கே கேட்டுச்சு.
ஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்கிறேன்.
நான் எல்லாத்தையும் விக்கிறேன்”

“ஈசன்” என்ற தென்னிந்தியத் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகள், பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பரிதாப வாழ்க்கையை, நறுக்கென்று சொல்லியிருக்கும் வரிகள்.

இலங்கையில் அண்மைய காலங்களில் பாலியல் குறித்து வெளிவந்த செய்திகள், பலரையும் விழி பிதுங்க வைத்திருந்தன. இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள் அதிகரிப்பு, “SEX” (செக்ஸ்) என்ற வார்த்தையை கூகுலில் தேடிய முதலாவது நகரத்தை, இலங்கையின் ஹோமாகம நகரம் பிடித்துள்ளமை, ஆணுறையைப் (கொண்டம்) பெறுவதற்கான தன்னியங்கி பொருத்தப்பட்டமை உள்ளிட்ட செய்திகள் சிலவற்றை இதில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நாடளாவிய ரீதியில், விபசாரம் தொழில் செய்கின்ற பெண்கள், 35 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும், அவர்கள் நாளொன்றுக்கு மூன்று இலட்சம் ஆண்களுக்கு சேவை வழங்குகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வைத்திய ஆராய்ச்சியின் பிரகாரம், சமபாலுறவு சேவை வழங்குகின்ற இலங்கையரின் எண்ணிக்கை 7 இலட்சமாகும். எனினும், சமபாலுறவுச் சங்கத்தின் அறிக்கையின் பிரகாரம், 25 இலட்சம் சேவையாளர்கள் இருக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருட்டே உருவாகின்றனர் அல்லது உருவாக்கப்படுகின்றனர் எனக் கூறலாம். காரணம், பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள், அத்தொழிலுக்குத் தாம் பலவந்தமாகத் தள்ளப்பட்டனர் என்றே கூறுகின்றனர்.

இவர்களில், கிராமப்புறங்களிலிருந்து கஷ்டப்பட்ட குடுப்பங்களிலிருந்து, வீட்டு வேலைக்கென நகரங்களுக்கு அழைத்துவரப்படும் பெண்களே, பாலியல் தொழிலுக்கு பலவந்தமாகத் தள்ளப்பட்டுள்ளனரென, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டப் பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறுமிகள் இருவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பத்திரமாக மீட்கப்பட்டதை கேள்வியுற்றோம். இல்லையேல், அவர்களும் ஏமாற்றப்பட்டு, இவ்வாறான தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்.

படையினரின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போதும் இவ்விடயம் கையாளப்பட்டதாக, சர்வதேசத்தால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

பிரதான நகரங்களில் தனியே தவிக்கவிடப்படுச் செல்லப்படும் பெண்களும் இத்தொழிலுக்கு பலவந்தமாமாகத் தள்ளிவிடப்படுகின்றனர். தவிர, பலவந்தத்துக்கும் மேலாக ஒரு கட்டத்தில் விரும்பி பாலியல் தொழிலை ஏற்றுக்கொள்ளும் பெண்களும் இல்லாமலில்லை.

பாலியல் தொழில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட தொழிலாகக் காணப்படுகின்றது. எனவே, பாலியல் தொழில் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையக அறிக்கையில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றன. தடையையும் மீறி, சட்டவிரோதமாக பாலியல் தொழிலை மேற்கொள்ளக் கையாளப்படும் நுட்பங்கள் மிகவும் விசித்திரமளிக்கக் கூடியனவாகவே இருக்கின்றன.
மசாஜ் நிலையங்களையும் தாண்டி, முச்சக்கரவண்டிகள், வான் உள்ளிட்ட நடமாடும் வாகனங்களிலும் இச்சேவை வழங்கப்படுகின்றது என அறியக்கூடியதாய் இருக்கின்றது.

இது இவ்வாறிருக்க, 'SEX" என்ற வார்த்தையை, கூகுலில் தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் பங்களாதேஷ் நாடும், இரண்டாவதாக எத்தியோப்பியாவும், நான்காவது இடத்தில் நேபாளமும் உள்ளது. இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. அத்துடன், SEX" என்ற வார்த்தையை அதிகமாகத் தேடிய நகரங்களில் இலங்கையின் ஹோமாகம நகரம் முதலிடத்தில் உள்ளதுடன், சிட்டாகொங் இரண்டாவது இடத்திலும், டாக்டா, சென்னை என்பன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இலங்கையில் மாகாணங்கள் ரீதியில் பார்க்கும்போது, வடமத்திய மாகாணம் முதலிடத்திலும் மத்திய மாகாணம் இறுதி இடத்திலும் உள்ளன.

இதேவேளை, எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்கள் 2,600க்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமாகக் காணப்படுகின்ற மாகாணங்களில் முதலாவது இடத்தில் மேல் மாகாணமும் இரண்டாவது இடத்தில் வட மத்திய மாகாணமும் உள்ளது.

நடப்பாண்டில் வட மாகாணத்தில் 6 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் என பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என, யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவு தெரிவித்தள்ளது. அதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு பேரும், இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 63 வயதுடைய ஒருவரும், 50, 60 வயதுடைய இருவரும், 30 வயது முதல் 40 வயதுடைய மூவரும் இனங்காணப்பட்டுள்ளனர். அதில், 3 பெண்களும், 3 ஆண்களும் உள்ளடங்குகின்றார்கள்.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களும் அண்மையில் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும், 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் ஆண்கள், பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வயதுக்கிடைப்பட்டவர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டமும் அண்மைக்காலத்தில் மும்முரப்படுத்தப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது.

எனவே, தொற்றுக்கள் பல வகையிலும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவும், எமது எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் இன்றே பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்பது மிக மிக அவசியம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

இலங்கையில் ஆணுறைகளை பெற்றுக் கொள்வதற்காக முதல் தடவையாக தானியங்கி இயந்திரமொன்று (condom vending machine), கொழும்பு 7, புலர்ஸ் (டொரிங்டன்) வீதி ஓரத்தில், கடந்த மாதம் பொருத்தப்பட்டது.

சில ஆண்களும் பெண்களும் மருந்தகங்களில் சென்று ஆணுறைகளைப் பெற்றுக்கொள்வதை அசௌகரியமாக கருதும் காரணத்தால் இவ்வாறு ஆணுறைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆணுறை விநியோக தானியங்கி இயந்திரம் பொருத்தப்படுவதாக, இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தன்னியங்கி சேவைகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 அல்லது 4 மணி வரை இச்சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிப்பு எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

தெரிந்தோ அல்லது தெரியாமலே, அத்தொழில் ஈடுபடுகின்ற பெண்கள், தம்மை நாடிவரும் ஆண்களுக்கு, நோய்த்தொற்றைக் கொடுக்காமல் திருப்திப்படுத்தவேண்டும். அதேபோல, வாடிக்கையாளர்களான ஆண்களும், நோயைத் தொற்றிக்கொள்ளாமல் தற்காத்துக்கொள்ளவேண்டும்.

ஏனெனில், பாலியல் தொழிலாளர்கள் இருப்பதனால்தான், இளம்பெண்களின் கற்புகள் பாதுகாக்கப்படுவதாக, பரவலாக தெரிவிக்கப்பட்டது. இது எவ்வளவு தூரத்துக்கு உண்மையானது என்பதற்கு பதிலளிப்பதற்கு, அக்கேள்வியை இந்த சமூகத்திடம் பகிரங்கமாகவே விட்டுவிடுகின்றேன்.

எவ்வாறாயினும், பாலியல் தொழிலாளர்கள் மனிதாபிமானமாகப் பார்க்கப்படுகின்றனரா என்ற கேள்விக்கெல்லாம், அத்தொழில் ஈடுபடுவர்களிடமே பதிலிருக்கும். அதற்கான விடையை கட்டுரையாளர் என்ற வகையில், நான் தேடுவது இலகுவான காரியமல்ல.

என்றாலும், இலங்கையில் இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, உத்தியோகபூர்வமான சங்கமொன்று உருவாக்கப்பட்டதாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதியன்று செய்தி வெளியாகியிருந்தது.

சிவில் சமூக அமைப்பைச் சேர்ந்த சிலர் இணைந்து உருவாக்கியிருந்த அவ்வமைப்பு, “பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மத்திய நிலையம்” என்றே பெயரிடப்பட்டிருந்தது.

ஆசையைத் தீர்க்கும், அவ்வாறான தொழிலாளர்களை இல்லாத நாடு என்றொன்றில்லை. அத்தொழிலை முற்றாக ஒழித்த நாடு, என்ற பெயர்பட்டியலிலும் ஒரு நாடேனும் இல்லை. எனினும், அந்தத் தொழிலுக்குத் தள்ளிவிடுபவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஏதோவொரு காரணத்துக்காக அத்தொழிலை தேர்ந்தெடுத்தவர்கள், அதிலிலிருந்து விடுபடவேண்டும். இதேவேளை, வாடிக்கையாளர்களும் தங்களுடைய "அந்தச் சிந்தனையில்" மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான், பழையதொழில், ஒழியும். இல்லையேல், ஏதோவொரு காரணத்துக்காக, அத்தொழிலில் ஈடுபடுவோரும், அவர்களை நாடுகின்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

ஆகமொத்ததில், ஆறறிவு படைத்தவர்களான மனிதர்கள், மனிதர்களை மனிதர்களாக மதித்தால், யாருக்கும், எந்தவிதமான, பாலியல் ரீதியான தொற்று நோய்களும் தொற்றாது. அதை, இந்த சமூகத்தில் இருக்கின்ற பலரும் புரிந்துகொள்வதில்லை.

 பிறின்சியா டிக்சி