A+ A-

இஸ்ரேல் - பலஸ்தீன் சமாதானத்தின் இதயத்தில் ஒரு குத்து

அமெரிக்க ஜனாதிபதியொருவர் இ்ஸ்ரேலிய – பலஸ்தீன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரமொன்றில் இஸ்ரேலுக்கு ஆதரவான தீர்மானத்தை எடுப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. பலஸ்தீனப் பிராந்தியங்கள் மற்றும் கிழக்கு ஜெரூசலேத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நெடுகவும் அமெரிக்கா பெரும்பாலும் ஆதரித்தே வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலை பாதுகாத்துவந்திருக்கும் அமெரிக்கா நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அதன் உதவிக்கு வந்திருக்கிறது; நவீன ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் அணுவாயுதங்களைக் குவித்துக்கொண்டிருந்தபோது கூட அமெரிக்கா பாராமுகமாக இருந்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் பிரதியுபகாரமாக இஸ்ரேல் மேற்காசியாவில் அமெரிக்காவின் நெருக்கமான நேசநாடாக மாறியிருக்கிறது.

இத்தகைய விசேடமான உறவுகளுக்கு மத்தியிலும், ஜெரூசலேம் மீதான இஸ்ரேலின் உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடனேயே முன்னைய அமெரிக்க ஜனாதிபதிகள் செயற்பட்டுவந்திருக்கிறார்கள். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவீவில் இருந்து ஜெரூசலேத்துக்கு இடமாற்றுமாறு நிருவாகத்தை வலியுறுத்தும் ‘ஜெரூசலேம் தூதரகச் சட்டத்தை’ அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியிருந்த போதிலும், அதனால் ஏற்படக்கூடிய சர்வதேச பொது அபிப்பிராயத்தையும் அரசியல் மற்றும் நெறிமுறை அடிப்படையிலான பிரச்சினைகளையும் கருத்திலெடுத்து அமெரிக்க ஜனாதிபதிகள் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை பின்போட்டுக்கொண்டேவந்தனர்.இவ்வாறாக முன்னைய ஜனாதிபதிகள் கடைப்பிடித்துவந்த கருத்தொருமிப்பு நிலைப்பாட்டையே இப்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலேத்தை அங்கீகரித்திருப்பதன் மூலமாக மீறியிருக்கிறார்.

நீண்ட நாள் வாக்குறுதியொன்றின் அடிப்படையிலேயே ட்ரம்ப் செயற்பட்டிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.ஜெரூசலேம் இத்தகையதொரு தீர்மானத்தை அவர் எடுத்திருந்தாலும் சமாதான முயற்சிகள் மீது பற்றுதிகொண்டதாகவே வாஷிங்டன் தொடர்ந்தும் இருக்கிறது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான சமாதான முயற்சிகளில் இடைத்தரகராகச் செயற்படும்போது தன்னால் தீர்க்கமான முடிவுகளை எடுக்கமுடியும் என்பதை உலகிற்கு ட்ரம்ப் வெளிக்காட்டியிருக்கிறார் என்றும் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இஸ்ரேல் — பாலஸ்தீன நெருக்கடிக்கான தீர்வு என்றுவரும்போது ஜெரூசலேம் அதன் மையமாக விளங்குகிறது என்பதை இந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் மிகவும் வசதியாகவே மறந்துவிடுகிறார்கள். அந்த நகரம் மீதான இஸ்ரேலின் உரிமை கோரலை அங்கீகரித்ததன் மூலமாக அமெரிக்க ஜனாதிபதி அந்த மையத்திற்குள் கத்தியைச் செலுத்திவிட்டார். மத்திய கிழக்கு நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கு ‘முழுநிறைவான இணக்கப்பாடொன்றை ‘ ஏற்படுத்தப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு ஜனாதிபதி சாமாதான முயற்சிகளுக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இது இராஜதந்திரமல்ல. நன்கு ஆராய்ந்து வகுக்கப்பட்ட இராஜதந்திரத் தீர்வுத் திட்டமொன்றின் ஒரு அங்கமாக இந்த நகர்வு இருக்குமானால், அமெரிக்கா இரு தரப்புகளுடனும் பேசி விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவைத்து சமாதான முயற்சிகளை ஒரு அடி முன்னோக்கி நகர்த்தியிருக்கும். அப்படியென்றால், ஜெரூசலேத்தின் எந்தப் பகுதியை இஸ்ரேலிய அதிகாரத்தின் அமைவிடம் என்று அங்கீகரிப்பதாக ட்ரம்ப் கூறியிருப்பார்.அத்துடன் பழைய நகரம் உட்பட கிழக்கு ஜெரூசலேம் மீதான பாலஸ்தீனரின் உரிமைக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பார். மாறாக, அவர் இஸ்ரேலுக்கு பெரிய சலுகையைச் செய்யும் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்திருக்கிறார். ஒஸ்லோ சமாதான முயற்சிகளுக்குப் பிறகு ( பிரதியுபகாரமாக எந்தவொரு உறுதிமொழியையும் பெற்றுக்கொள்ளாமல் ) இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பாரிய சலுகை என்று இதை வர்ணிக்கமுடியும். ட்ரம்பின் நடவடிக்கை எதிர்காலப் பாலஸ்தீனத்துக்கு ஜெரூசலேத்தின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டைக்கொண்ட இஸ்ரேலிய வலதுசாரிகளை மாத்திரமே பலப்படுத்தும்.
ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை.

வரலாறு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு போன்றவர்களின் பக்கத்தில் இல்லை. ஜெரூசலேம் ஒருபோதுமே இஸ்ரேலின் தலைநகராக சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை.சுதந்திரமான யூத அரசாகவும் அரபு அரசாகவும் பாலஸ்தீனத்தைக் கூறுபோடுவதற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூலமுதல் திட்டத்தில் ஜெரூசலேம் ஒரு சர்வதேச நகராகவே கருதப்பட்டது. அத் திட்டம் ஐ.நா. வினால் நடைமுறைப்படுத்தப்படும்வரை சியோனிஸ்டுகள் காத்திருக்கவில்லை. 1948 ஆம் ஆண்டில் அவர்கள் இஸ்ரேலிய அரசைப் பிரகடனம் செய்ததுடன் அதைத் தொடர்ந்து மூண்ட அரபு — இஸ்ரேல் போரில் ஐ.நா.வினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தில் பிரேரிக்கப்பட்டிருந்ததையும் விட 23 சதவீதம் கூடுதலான நிலப் பிராந்தியத்தை சியோனிஸ்டுகள் கைப்பற்றினார்கள்.அப் பிராந்தியத்தில் ஜெரூசலேத்தின் மேற்கு அரைப்பகுதியும் அடங்கும்.1967 போரின்போது ஜோர்தானிடமிருந்து கிழக்கு ஜெரூசலேத்தைக் கைப்பற்றிய இஸ்ரேல் பின்னர் அதையும் இணைத்துக் கொண்டது.அதற்குப் பிறகு நகரின் கழக்கு பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றங்களை இஸ்ரேல் ஊக்குவித்துக்கொண்டேயிருந்தது.பாலஸ்தீனர்கள் தங்களது வரலாற்று ரீதியான அயல் பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலிய வலதுசாரிகள் ஜெரூசலேம் நகரம் முழுவதும் மீதும் எப்போதும் உரிமைகோரிவந்திருக்கிறார்கள். 1980 ஆம் ஆண்டில் லிகுட் கட்சி அரசாங்கம் பதவியில் இருந்தபோது ‘ ஐக்கியப்பட்டதும் முற்றுமுழுதானதுமான ‘ ஜெரூசலேம் தனது தலைகர் என்று பிரகடனம் செய்யும் அடிப்படைச் சட்டமொன்றை இஸ்ரேலிய பாராளுமன்றம் நிறைவேற்றியது. அதை அமெரிக்கா உட்பட உலக வல்லரசுகள் கடுமையாகக் கண்டனம் செய்தன.அந்தச் சட்டம் செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்த ஐ.நா.பாதுகாப்பு சபை புனித நகரில் இருந்து இராஜதந்திர தூதரகங்களை வாபஸ்பெறுமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.இஸ்ரேலின் அதிகார அமைவிடமாக மேற்கு ஜெரூசலேம் பல தசாப்தங்களாக இருந்து வருகின்றபோதிலும் சகல நாடுகளுமே அவற்றின் தூதரகங்களை டெல் அவீவில் வைத்திருப்பதற்கு இதுவே காரணமாகும்.சர்வதேல விதிமுறைகளையும் ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானங்களையும் இஸ்ரேல் மீறிநடப்பதென்பது ஒன்றும் புதியதல்ல, ஆனால் இஸ்ரேலின் சட்டவிரோதமான உரிமை கோரல்களை அமெரிக்கா பகிரங்கமாக அங்கீகரிப்பதென்பது முன்னென்றுமில்லாத வகையிலானதாகும்.

உண்மையிலேயே அமெரிக்கா ஒரு நடுநிலையான அதிகாரத் தரகராக இருந்திருந்தால், இஸ்லே் மீது நெருக்குதலைப் பிரயோகித்து பாலஸ்தீனர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரச்செய்திருக்கவேண்டும்.பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான சூழ்நிலைகள் இப்போது பாலஸ்தீனப் பக்கத்தில் முன்னரைக் காட்டிலும் சிறப்பாக இருக்கின்றன.காஸா பள்ளத்தாக்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமியவாத இயக்கமான ஹமாஸ் புதிய அரசியல் சாசனம் ஒன்றை அண்மையில் முன்வைத்திருக்கிறது.இஸ்ரேலுடன் விவகாரங்களைக் கையாளுவதற்கான விருப்பத்துக்கான சமிக்ஞையையும் 1967 எல்லையை எதிர்கால பாலஸ்தீன அரசுக்கானதாக ஏற்றுக்கொள்வதற்கான சமிக்ஞையையும் இந்தச் சாசனம் காட்டியிருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் கடந்த கால கடுமையான யூத எதிர்ப்பு பேச்சுக்களுடனும் நிலைப்பாடுகளுடனும் ஒப்பிடும்போது இது ஒரு பெரிய விட்டுக்கொடுப்பாகும்.ஹமாஸும் மேற்கு ஆற்றங்கரையின் பகுதிகளை ஆட்சி செய்கின்ற பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸின் கட்சியான பதாஹும் அண்மையில் நல்லிணக்க உடன்படிக்கையொன்றையும் செய்துகொண்டுள்ளன.சமாதான முயற்சிகளில் ஏற்பட்டிருக்கின்ற முட்டுக்கட்டைகளை அகற்ற இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கமுடியும்.நெருக்குதல் கொடுக்கப்படாத பட்சத்தில் இஸ்ரேல் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இணங்கப்போவதில்லை என்பதை அந்த நாட்டின் வரலாறு நிரூபித்துநிற்கிறது.சர்வதேச சமூகம் திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்தபோதிலும் கூட அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பிராந்தியங்களில் சட்டவிரோத குடியேற்றங்களை தொடர்ச்சியாக செய்துவருகின்றது.உண்மையிலேயே இஸ்ரேலுக்கு சமாதானத்தில் அக்கறை இருந்திருக்குமானால், குடியேற்றத் திட்டங்களை நிறுத்தி பாலஸ்தீனர்களுடன் பேச்சுவார்த்தைக்ககு இணங்கியிருக்கும்.

அமெரிக்க தூண்டுதல்கள்

இஸ்ரேல் மீது உருப்படியான நெருக்குதல்களைப் பிரயோகிக்கக்கூடிய ஒரே நாடு என்றால் அது அமெரிக்கா தான்.அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கமான தோழமைக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் கடந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் நெருக்குதல்களைப் பிரயோகித்திருக்கிறார்கள்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜிம்மி கார்ட்டர்.இஸ்ரேலின் வலதுசாரி பிரதமரான மெனாச்செம் பெகினின் ‘ கையை முறுக்கி ‘ அவரை எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்துடனும் பாலஸ்தீனர்களுடனும் கூட பேச்சுவார்த்தைகளில் இணையச்செய்தவர் கார்ட்டர். (அந்த நேரத்தில் ஆக்கிரமிப்புப் பிராந்தியங்கள் மீதான பாலஸ்தீனர்களின் உரிமை கோரிக்கை இஸ்ரேலிய வலதுசாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூட இல்லை).இறுதியாக சதாத்தும் பெகினும் காம்ப் டேவிட் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டபோது கார்ட்டர் தனது முயற்சியில் வெற்றிபெற்றமை நிரூபிக்கப்பட்டது. இஸ்ரேலின் எஹுட் பராக்கிற்கும் இடையிலான 2000 காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி பில் கிளின்டன் முக்கிய பாத்திரத்தை வகித்தார்.ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் இணக்கப்பாடொன்றை எட்டமுடியாமல் போய்விட்டது.ஆனால், இரண்டாவது காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளின் தோல்விக்குப் பின்னர் பதவிக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் இஸ்ரேல் — பாலஸ்தீன நெருக்கடியில் பெருமளவுக்கு பாராமுகமாக இருந்துவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்.

ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் 2007 அனாபோலிஸ் மகாநாடு அவரின் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் புகைப்படமெடுக்கும் ஒரு சந்நர்ப்பம் என்பதற்கு அப்பால் எதையும் சாதிக்க முடியவில்லை.ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிருவாகம் ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவை வழங்கிய அதேவேளை, அவரின் கவனம் ஈரான் மீதே குவிந்திருந்தது.தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பைப் பொறுத்தவரை, சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பான சூழ்நிலை பாலஸ்தீனத் தரப்பில் காணப்படுவதை அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரேல் மீது நெருக்குதலைப் பிரயோகித்து விட்டுக்கொடுப்புக்களைச் செய்விக்கவேண்டுமென்பதில் அவருக்கு அக்கறை கிடையாது.அவருடைய உலகத்திலே அவருக்கு முக்கியமானது இஸ்ரேலுடனான அமெரிக்காவின் கலாசார மற்றும் இராணுவக் கூட்டணிதான்.

ஜனாதிபதி ட்ரம்பின் தீர்மானம் பாலஸ்தீன மக்கள் மீது ஏற்படுத்தப்போகின்ற தாக்கமே உண்மையான துன்பக் கதையாகும். இஸ்ரேலிப் பிரஜாவுரிமை கூட இல்லாமல் கிழக்கு ஜெரூசலேத்தில் வாழ்கின்ற இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் என்றைக்காவது ஒரு நாள் தாங்கள் விடுதலை பெறும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அதேபோன்றே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு ஆற்றங்கரையிலும் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் காஸா பள்ளத்தாக்கிலும் வாழுகின்ற பாலஸ்தீனர்கள் எதிர்கால பாலஸ்தீன அரசின் தலைநகராக கிழக்கு ஜெரூசலேத்தைக் காணும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைக்கும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது அமெரிக்கா.

முதலில் அவர்கள் தங்களது நகரை இழந்தார்கள். இப்போது அவர்கள் தங்களது உரிமைக் கோரிக்கையையும் கூட இழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனமுறிவும் ஏமாற்றமும் அதிகரிக்கவே இந்த நிகழ்வுப் போக்குகள் வழிவகுக்கும். ஆனால், ஜெரூசலேத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அந்த நகர் தொடர்பான தகராறு படைபலத்தின் மூலம் தீர்த்துவைக்கப்பட முடியாதது என்பதே அதுவாகும்.

சிலுவை யுத்தங்களின்போது கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கொடூரமான படைபலத்தின் மூலம் ஜெரூசலேத்தைக் கைப்பற்றினார்கள். ஒட்டோமன் (துருக்கிய) பேரரசு நாற்றாண்டுகளாக அந்த நகரை ஆட்சிசெய்து இறுதியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரிட்டிஷாரிடம் அதை இழந்தது. இரண்டாவது உலக மகாயுத்தத்துக்குப் பின்னரான இரு தசாப்தங்களில் ஜோர்தானியர்களும் இஸ்ரேலியர்களும் தங்களுக்குள் பிரித்துவைத்திருந்தார்கள். இப்போது சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு ஒராயிரம் வருடங்கள் கடந்த நிலையில் ஜெரூசலேத்தின் அந்தஸ்து இன்னமும் தகராறுக்குரியதாகவே இருக்கிறது. ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கை இஸரேலியர்களுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால், இறுதித் தீர்வு இன்னமும் வெகு தொலைவிலேயே இருக்கிறது.

 ஸ்ரான்லி ஜொனி
சென்னை த இந்து பத்திரிகையின் சர்வதேச விவகார ஆசிரியர்