A+ A-

ஜெரூசலம் விவகாரம்: ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தால் நிதியுதவி நிறுத்தப்படும்

ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கு ஆதரவுதரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில், சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம்தான் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மில்லியன் கணக்கான டொலர்கள் ஏன் பில்லியன் கணக்கான டொலர்களை எடுத்து கொண்ட பிறகும் எங்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என்று ஜெரூசலம் விவகாரத்தில் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளை சாடி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு எதிராக வாக்களிக்கட்டும். அதனால் எங்களுக்கு சேமிப்புதான். நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலம் அங்கீகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் டிரம்பின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் அமெரிக்காவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஜெரூசலம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ரத்துச்செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்மானத்துக்கு எதிராக எந்தெந்த நாடுகள் வாக்களித்துள்ளன என்பது குறித்த தகவலை ஜனாதிபதி டிரம்ப் தன்னிடம் கேட்டிருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே உறுப்பு நாடுகளுக்கு இன்று வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.