ஆர்.கே. நகரில் சுயேட்சையாக வெற்றிபெற்ற தினகரன்
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் களத்தின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி சாதித்து காட்டியுள்ளார். இது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும், எதிர்க் கட்சியான தி.மு.க.வுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் அவரது திடீர் மரணத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் கடந்த 21ஆம் திகதி நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா விவகாரம் இந்த தேர்தலிலும் பூதாகரமாக எழுந்தது. ஆனால் அது தேர்தலுக்கு வேட்டு வைக்கவில்லை.
பிளவுபட்ட அ.தி.மு.க. அணிகள் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்) இணைந்து அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலையை மீட்டெடுத்தனர். வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று அ.தி.மு.க.வினர் கொக்கரித்தனர்.
அதேநேரத்தில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகரில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. இன்னொருவரும் (தினகரன்) தொப்பியை இழந்து தேர்தலில் நிற்கிறார். அ.தி.மு.க. வுக்கும், எங்களுக்கும் தான் போட்டி என்று கூறினார். இப்படி பலம் வாய்ந்த 2 பெரிய கட்சிகளுடன் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார்.
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டது. அதனால் வெற்றி நிச்சயம் என்று நம்பினார்கள் அ.தி.மு.க.வினர். அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவும், கூட்டணி கட்சிகளின் பலமும் நிச்சயம் தங்களை வெற்றி பெற செய்யும் என்று தி.மு.க.வினர் நம்பினர். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி மக்களோ மாற்றி யோசித்தனர். சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் விசில் அடித்து சாதித்து காட்டி உள்ளார்.
மக்களின் மனம் இப்படி முற்றிலுமாக மாறிப்போனது எப்படி? என்று கணிக்க முடியாமல் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் தவித்து வருகிறார்கள். இந்த 2 கட்சிகளும் போட்டது தப்பு கணக்காகவே மாறிப் போய் உள்ளது.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய புதிதில் இரட்டை இலை சின்னம் சுயேட்சையாக முதல் தேர்தலை சந்தித்தது. அப்போது நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத் தேவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அபார வெற்றியை ருசித்தார்.
அதுபோலவே இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் சுயேட்சை சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தினகரன் சாதித்துக் காட்டி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியல் களத்தில் புதிய தலைவராகவே தினகரன் அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.
ஏனென்றால் அ.தி.மு.க. அணிகள் பிளவுபட்டிருந்த போது சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி இயங்கியது. சசிகலா சிறை சென்ற நேரத்தில் அந்த அணியின் துணை பொதுச் செயலாளரானார் தினகரன். பின்னர் சசிகலா அணி எடப்பாடி அணியாக மாறி ஓ.பி.எஸ்.சுடன் கைகோர்த்தது. ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவானதால் தினகரன் முற்றிலுமாக ஓரம் கட்டப்படார். இதனால் இனி… அவர் அவ்வளவுதான் என்கிற பேச்சுக்களும் எழுந்தன.
கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போதே தினகரனுக்கு சோதனை காலம் தொடங்கியது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது… வருமான வரி சோதனை என அவர் மீது அம்புகள் பாய்ந்து கொண்டே இருந்தன. இதை யெல்லாம் அவர் தைரியமாகவே எதிர் கொண்டார். அதே துணிச்சலுடன் ஆர்.கே.நகர் தேர்தலிலும் களம் இறங்கினார்.
தினகரன் மீது தொடர்ச்சியாக தொடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு கணைகளை எல்லாம் தனது அசாத்திய தைரியம், துணிச்சலால் தவிடு பொடியாக்கி காட்டி உள்ளார் தினகரன். இந்த வெற்றி மூலம் இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்தியுள்ளார் அவர். அ.தி.மு.க. தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்கள் என்று தினகரன் தொடர்ந்து கூறி வந்தார். அதுவும் உண்மை தானோ? என்றும் எண்ணத்தோன்றுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நாள் முதல் தினகரன் ‘சிலீப்பர் செல்’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் எனக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ.க்கள் சிலீப்பர் செல்களாக உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் பக்கம் வருவார்கள் என்று கூறி இருந்தார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றிபெற்று சட்ட சபைக்குள் செல்வேன். அப்போது ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பாளர்கள் என்றும் கூறி இருந்தார்.
இதனால் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் நிகழுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் கூறியதுபோல, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரை ஆதரிக்க தொடங்கினால் அது நிச்சயம் அதிரடி மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.