இலங்கை வரலாற்றில் ஒரு தேர்தல் இவ்வளவு இழுபறிக்கு பின்னர் நடந்திருக்காது என்பதை இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் நன்றாகவே உணர்த்தியிருக்கிறது. தேர்தல் நடைபெறுமா, இல்லையா என்ற இழுபறியில் இருந்தநிலையில் தேர்தல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கிசுகிசுக்களும் ஒருமாதிரியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தேர்தல்கள் ஆணையாளர். இதன்பிரகாரம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல் பல கட்சிகளை நாடிபிடித்து பார்க்கவுள்ளது என்பது மட்டும் வெளிப்படையமான உண்மை.
மஹிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு எதிரியாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி உருவாக்கப்பட்டு அந்த தேர்தல் வியூகம் வெற்றியடைந்த நிலையில், அதே கூட்டணியை எதிர்காலத்திலும் தொடரவேண்டிய தேவைப்பாடு அக்கட்சிகளுக்கு ஏற்படவில்லை. இந்நிலையில் சுதந்திரக்கட்சி இரு அணிகளாக பிரிந்து மைத்திரி அணி கை சின்னத்திலும், மஹிந்த அணி பொதுஜன பெரமுன என்ற புதுக்கட்சியில் மொட்டு சின்னத்திலும் களமிறங்குகின்றன. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பதுபோல, ஐ.தே.க. இந்த இடத்தில் தனது பலத்தை நிரூபிப்பதற்கு வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது.
இதனால் ஐ.தே.க. தனது பலத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, சிறுபான்மை கட்சிகளுடன் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. முஸ்லிம் கட்சிகள் எனும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இங்கு பிரதானப்படுத்தப்படுகிறது. முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுத்தளங்கள் காணப்படும் மாவட்டங்களில் ஐ.தே.க. முஸ்லிம் கட்சிகள் மூலம் சவாரிசெய்கின்றது. பெரும்பான்மையின மக்கள் செறிந்துவாழும் மாவட்டங்களிலுள்ள சில முஸ்லிம் கிராமங்களில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கான இருப்பை தேடுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களை தெரிவுசெய்யும் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமே வழங்கப்பட்டிருந்தது. அதில் ஐ.தே.க. உறுப்பினர்களை போடுவதென்றால் கூட மு.கா.வின் அனுமதியே பெறப்பட்டிருந்தது. இதனால் திகாமடுல்ல மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஐ.தே.க.வுடன் இணைந்து மு.கா. போட்டியிடுகிறது. இதேபோன்று வேறு மாவட்டங்களிலும் மு.கா. தனக்கு தேவையான வட்டாரங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எத்தனித்தபோது, அதே வட்டாரங்களில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவேண்டுமென மக்கள் காங்கிரஸ் விடாப்படியாக இருந்தது. இதுதவிர, அங்குள்ள ஐ.தே.க. உறுப்பினர்களும் தங்களது ஆட்களை களமிறக்குவதற்கு அழுத்தங்களை பிரயோகித்து வந்தனர்.
திகாமடுல்ல மாவட்டத்துக்கு அப்பால், வேறு மாவட்டங்களில் மு.கா. கேட்ட வட்டாரங்கள் வழங்கப்படாமையினால் அந்த இடங்களில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. மு.கா. தனித்து போட்டியிடுவதையே கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் விரும்பி நிற்கின்றனர். இதேவேளையின் ஆட்சியின் பங்காளிக் கட்சியாக ஐ.தே.க. தலைமைத்துவத்தின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாத சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இதுதவிர, ஐ.தே.க. மூலம் தேவையான வட்டாரங்கள் வழங்கப்படாத மாவட்டங்களில் மு.கா. தனித்து போட்டியிடுகிறது.
இவைதவிர, அம்பாறை மாவட்டத்திலுள்ள சில சிங்கள பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுத்தளம் காணப்படுகிறது. உதாரணமாக தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் மாத்திரம் மு.கா.வின் 36 கிளைகள் காணப்படுகின்றன. இதனை முன்னிட்டு தெஹியத்தகண்டிய மற்றும் பதியத்தலாவ பிரதேசசபைகளில் மு.கா. தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. சிங்கள பிரதேசங்களில் முஸ்லிம் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பதில் காணப்படும் சிக்கல்களை கருத்திற்கொண்டு, ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) கட்சியில் இரட்டை இலைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகிறது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அந்தரங்கச் செயலாளர் நயீமுல்லாவின் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு (தராசு சின்னம்) கட்சி சார்பாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏறாவூர் பிரதேசசபை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலாவின் ஆட்கள் தராசு சின்னத்திலும், முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமதின் ஆட்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஏறாவூரில் போட்டியிடுகின்றனர். அத்துடன் பொலன்னறுவை மாவட்டத்தில் லங்காபுர பிரதேச சபையிலும், காத்தான்குடி நகரசபையிலும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கு விரும்பியிருந்தது. மூன்று நாட்களாக தொடர்ந்த இப்பேச்சுவார்த்தையின் பின்னர் மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் மன்னார் சென்றபோது, தமிழ்த்தரப்பு உரிய பதிலளிக்கவில்லை. மு.கா.வுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கடைசிவரை விருப்பம்கொண்டிருந்த தமிழ்தரப்பு அரசியல் தலையீடுகளினால் எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை மு.கா. காலக்கெடு வழங்கியுள்ள நிலையில் எவ்வித அறிவிப்புகளும் வராத காரணத்தினால் வடக்கில் தனித்து போட்டியிடுவதற்கு மு.கா. தீர்மானித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, முசலி பிரதேசசபை, நானட்டான் பிரதேசசபை, மாந்தை பிரதேசசபைகளில் மு.கா. மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது. வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரசபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேசசபை, வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேசசபை போன்வற்றிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசசபையிலும் மு.கா. மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேசசபை, கோரளைப்பற்று பிரதேசபை ஆகிய இடங்களில் மரச்சின்னத்திலும், காத்தான்குடி நகரசபையில் தராசு சின்னத்திலும், ஏறாவூர் பிரதேசபையில் யானைச் சின்னம் மற்றும் தராசு சின்னத்திலும், மட்டக்களப்பு மாநகரசபை, கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேசசபை, வாகரை பிரதேசசபைகளில் சுயேச்சைக்குழுவிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மட்டக்களப்பு, கோரளைப்பற்று மேற்கு, வாகரை போன்ற இடங்களில் உரிய நேரத்துக்கு கட்டுப்பணம் செலுத்த தவறிய காரணத்தினால் மு.கா. சுயேட்சையில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் கிண்ணியா பிரதேசசபை, தம்பலகாமம் பிரதேசசபை, பட்டிணமும் சூழலும் பிரதேசசபை, கிண்ணியா நகரசபை, மூதூர் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை, கந்தளாய் பிரதேசசபை ஆகியவற்றில் மு.கா. மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய நகரசபை, குளியாப்பிட்டிய பிரதேசசபை மற்றும் பொல்கஹவெல பிரதேசசபை போன்றவற்றில் மு.கா. யானைச் சின்னத்திலும், பண்டுவஸ்நுவர, நிக்கவரெட்டிய, கொபேகல, உபுமத்தாவ, ரதிகம, பன்னல பிரதேசசபைகளில் மரச்சின்னத்திலும் மு.கா. போட்டியிடுகின்றது.
அனுராதபுரம் மாவட்டத்தில் அனுராதபுரம் மாநகரசபை, திறப்பனை, மதவாச்சி, ரம்பேவ, கஹட்கஸ்திலிய, மத்தியம நுவரகம்பலாத்த, கெக்கிராவ, இப்பலோகம போன்ற பிரதேசசபைகளில் மரச்சின்னத்திலும், ஹொரவப்பொத்தானை பிரதேசசபை மற்றும் பலாகல பிரதேசசபைகளில் யானைச் சின்னத்திலும் மு.கா. போட்டியிடுகிறது.
என்றுமில்லாதவாறு ஐந்து முறைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. புதுமையான வியூகங்களை கையாண்டுவரும் முஸ்லிம் காங்கிரஸ் பல பிரதேசசபைகளை கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை உள்ளுராட்சி தேர்தலில் நேரடியாக களமிறக்கியுள்ளது. அதை கௌரவ குறைச்சலாக பார்க்காமல், சாணக்கிய முடிவாக ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேச சபைகளை கைப்பற்றுவதற்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
தற்போது உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த முறை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை வெற்றிகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை முன்னூறுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. பல பிரதேசங்களில் புதிய வேட்பாளர்கள் பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆளுமைமிக்க பெண் வேட்பாளர்களும் இம்முறை உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏனைய முஸ்லிம் கட்சிகளில் இல்லாதவாறு, இம்முறை மூவினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கட்சிகள் என்றவகையில் உள்ளுராட்சி தேர்தலில் முதல்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன தனித்து போட்டியிடுகின்றன. அத்துடன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்புடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ{டன் இணைந்து திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகிறது. இதேவேளை, முஸ்லிம்களின் ஏகத்துவ கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும், திருகோணமலை மாவட்டத்தில் தனித்தும் போட்டியிடுகிறது.
முஸ்லிம் வாக்குகளை பிரிப்பதற்காக பல முஸ்லிம் கட்சிகள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் நிலையில் கிழக்கு மாகாண தேர்தல்களம் இப்போது பரபரப்புமிக்கதாகவே காணப்படுகிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால், முஸ்லிம் காங்கிரஸின் வாக்குளை பறித்துக்கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் புதிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. புதிய கட்சிகளை மக்கள் ஆதரிப்பார்களா இல்லை, தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ{க்கு ஆதரவளிப்பார்களா என்பதை தெரிந்துகொள்ள தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால், கிடைக்கப்பட்ட புலனாய்வு தகவலின்படி, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துமென கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளது. சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் சார்பாக சுயேட்சைக்குழு களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியிலும் மு.கா. தங்களது பலமான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஆனால், மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என அறிவித்துள்ள நிலையில், பள்ளிவாசல் சுயேட்சைக்குழுவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. ஒரு உள்ளுராட்சி சபைக்குள் ஒரு ஊரை புறக்கணித்துவிட்டு வேட்பாளர்களை நியமிக்கமுடியாது. இதனால் மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதில் சில வேட்பாளர்களை பெயருக்காக நிறுத்தலாம்.
இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில், பள்ளிவாசல் சுயேட்சைக்குழு சார்பாக களமிறக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருசிலரை தவிர ஏனைய அனைவரும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். சிலர் இம்முறை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்கள். இப்படியானவர்களை பள்ளிவாசல் நிர்வாகம் கட்சிசாயம் பூசப்படாதவர்கள் எனக்கூறி, சுயாதீன வேட்பாளர்களாக அறிவித்துள்ளமையானது பள்ளிவாசலின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருது பள்ளிவாசலின் பின்னால் மக்கள் காங்கிரஸ் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுவந்த யூகம் இன்று உண்மையாகிவிட்டதோ என்ற சந்தேகம் இப்போது மேலாங்கியுள்ளது.
சாய்ந்தமருதில் போட்டியிடுவதற்கு 45 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை மட்டுப்படுத்துவதற்காக தலா ஒருவரிடம் 5,000 ரூபா பணம் அறவிட்டும் இந்தளவு விண்ணப்பங்கள் சேர்ந்துள்ளது. அவற்றிலிருந்து 6 வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கு பள்ளிவாசலினால் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. எனினும், வேட்பாளர் தெரிவில் சிலரின் தலையீடுகள் இருந்ததாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் தாண்டி தற்போது பள்ளிவாசலினால் நிறுத்தப்பட்ட பல வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பரீட்சயமில்லாதவர்கள். இவ்வாறான புதுமுகங்களை வைத்துக்கொண்டு, முஸ்லிம் கட்சிக்கு வாக்களித்து பழகிய மக்களை எப்படி சுயேட்சைக்குழுவுக்கு வாக்களிக்குமாறு தூண்டப் போகிறார்கள் என்பது பள்ளிவாசலின் முன்னாலுள்ள கேள்வி. அதையும்தாண்டி பள்ளிவாசல் சுயேட்சைக்குழுவை ஆதரிப்பது மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.
✍ துருவன்