தேர்தலை புறக்கணிக்கும் மாத்தளை மக்கள்
மாத்தளை மாவட்டத்தில் தோட்டப்புற தமிழ் மக்களில் 90 வீதமானவர்கள் இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த தோட்டங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாவட்டத்தில் தோட்டப் பகுதிகள் மற்றும் நகர்புறங்களில் 50,000க்கும் மேற்பட்ட தமிழ் வாக்களர்கள் இருக்கும் நிலையில், தமிழ் தலைவர்களினால் அந்த மக்களுக்காக முறையான அபிவிருத்திகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையென தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இம்முறை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கமாட்டோம் எனவும் இதனால் யாரும் வாக்கு கேட்டு தமது தோட்டப் பகுதிகளுக்கு வந்துவிட வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குடிநீர் , கல்வி, சுகாதாரம், வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பான பிரச்சினைகள் பல நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருப்பதாகவும் ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குகேட்டு வரும்போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிச் செல்லும் தமிழ் தலைவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் பக்கமே வருவதில்லையெனவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.