A+ A-

நான் அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினி அறிவிப்பு


நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று ரஜினி இன்று (31) கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார்.  6ஆவது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது;

அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும்? நான் ஏதாவது பேசினால் உடனே விவாதமாகிவிடுகிறது.

இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஊடக நிருபர் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு தலை சுற்றிவிட்டது. நைஸ் நைஸ் என்றேன். சோ மீடியாவிடம் ஜாக்கிரதையா இருங்க என்று ஏற்கெனவே என்னிடம் கூறியிருக்கிறார். அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவர் பக்கத்தில் இருந்திருந்தால் 10 யானை பலமாக இருந்திருக்கும். அவர் ஆத்மா என்றும் என்னுடன் இருக்கும்.

நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை.

அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996இலேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படிவந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.

அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது.  ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.

சாதி,மத, பேதமற்ற ஆன்மிக அரசியல் செய்வதே என் இலக்கு. இது சாதாரண விஷயமில்லை. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது.

எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்களை கண்காணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம். என் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு.