A+ A-

கலையும் அபாயத்தில் நல்லாட்சி அரசாங்கம்


நல்லாட்சி எனப்படும் தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தம் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் புதுப்பிக்க நடவடிக்கையெடுக்காவிட்டால், ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போதைய அமைச்சரவை கலையும் நிலைமை ஏற்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையிலேயே இந்த நிலைமை ஏற்படவுள்ளது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைய அரசாங்கத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐ விட அதிகரிக்கக்கூடாது என்பதுடன் பிரதி மற்றும் இராஜங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40விட அதிகரிக்கக்கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும்போது மாத்திரம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்கொள்ளக்கூடியவாறு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை 46ஆக காணப்படுகின்றது.

இதன்படி இரண்டு கட்சிகளும் கூட்டு அரசாங்கம் தொடர்பாக மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால் அதற்கு முன்னர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் ஜனவரி முதலாம் திகதி முதல் 19ஆவது அரசியலமைப்பு திருத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 30க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கொண்டிருக்க முடியாது.

இதனால் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டலோ அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்தாலோ தற்போதைய முழு அமைச்சரவையும் கலையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.