A+ A-

இராஜாங்க அமைச்சரானார் பியசேன கமகே


சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இன்று (28) ஜனாதிபதி இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய இரட்டை பிரஜா உரிமை காரணமாக தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த கீதா குமாரசிங்கவின் இடத்துக்கு நவம்பர் 10ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில், காலி மாவட்டத்தில் போட்டியிட்ட பியசேன கமகே 45,245 விருப்பு வாக்குகளை பெற்று 7ஆவது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலி மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். கீதா குமாரசிங்க 63,955 வாக்குகளையும், மொஹான் டி சில்வா 53,706 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.