ஒன்றிணைந்த பொதுஜன முன்னணி கட்சியின் தலைமை பொறுப்பை உத்தியோகபூர்மாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியின் மாநாட்டின்போது மகிந்த ராஜபக்ஷ இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான மகிந்த ராஜபக்ஷ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் மற்றும் போசகரகாவும் பதவி வகிக்கின்ற நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினதும் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினதும் தலைவராக உத்தியோகபூர்வமற்ற வகையில் பதவிவகித்து வருகின்றார்.
இந்நிலைமையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவளித்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் மகிந்த ஆதரவாளர்களிடையே இருக்கும் சந்தேகங்களை நிவர்த்திசெய்யும் நோக்கில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன என புதிய அணியை உருவாக்கி அதன் தலைமை பொறுப்பை மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மகிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பதவிகள் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும். அதனை செய்வதற்கு அவர் தயாராகியுள்ளதாகவே தெரிவிக்கிப்படுகின்றது. இது தொடர்பாகவும் அவர் 2ஆம் திகதி அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.