A+ A-

குடாநாட்டை சோகத்தில் ஆழ்த்திய 3 சம்பவங்கள்


யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் பலத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

அராலிவிபத்து 

மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் அராலி கோட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றது.

இதில் அராலி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய ரவிச்சந்திரன் ரஜீவன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய நபர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புங்கங்குளம் ரயில் விபத்து

ரயில் கடவை எச்சரிக்கை சமிக்ஞையை மீறி அசட்டையாக மோட்டார் சைக்கிளில் ரயில கடவையை கடந்த இளைஞனை யாழில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ரயில் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லத்துரை சசிகரராஜ் என்ற இளைஞன் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

புதுக்குடியிருப்பு

நேற்று பிற்பகல் முல்லைத்தீவு கள்ளியடி பகுதி குளத்தில் குளிக்கச் சென்ற ஏழு மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். புதுக்குடியிருப்பு சிவநகரைச் சேர்ந்த சிவராசா பகீரதன் மற்றும் தவம் கனிஸ்டன் ஆகிய 17 வயதையுடைய இரு இளையோர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர்.

மரணித்த இரு மாணவர்களும் குளிப்பதை செல்பி எடுப்பதற்காக பின் பக்கமாக நகர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில், மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட ஒரு குழியில் வீழ்ந்து மூழ்கியுள்ளனர். இவர்களை மீட்டு அப்பகுதி இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளனர்.