A+ A-

அக்கரைப்பற்று வேட்பாளர் செய்த அசிங்கம்: 4ஆம் திகதிவரை விளக்கமறியல்

தாங்கமுடியாத வலியை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் Tramadol மாத்திரையை, போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துவதினால் இவற்றை விற்பனை செய்வதில் இலங்கை அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் குறித்த மாத்திரைகளை மொத்தமாக கடத்திவந்துள்ளார். அம்பாறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த வேட்பாளர்  4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து அம்பாறைக்கு வந்த பேரூந்து ஒன்றில் Tramadol மாத்திரைகளை மொத்தமாக கடத்திவந்த வேட்பாளர், பஸ் சாரதிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பஸ் வந்துவிட்டதா, பார்சல் வந்துவிட்டதா என்று கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சாரதி பொதியை திறந்துபார்த்தபோது ஒரு தொகை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட  இந்த மாத்திரைகள் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டன.

Tramadol என்பது அதீதமான வலியை போக்கப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியாகும். இது Opium வகையை சேர்ந்தது. இதன் துஷ்பிரயோகம் போதை ஏற்புத்துவதோடு இந்த மருத்து பழக்கத்துக்கு அடிமையாக்கக்கூடியது. இதனால் ஐந்து வருடங்களாக இந்த மாத்திரைகளை விற்பனை செய்வதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி இல்லையென்ற பட்சத்தில் மாத்திரமே நோயாளிக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக வைத்தியரின் அனுமதியுடன் இந்த மாத்திரைகள் வழங்கப்படும்.

இந்த மாத்திரைகளை எந்தவொரு தனியார் மருந்தகங்களிலும் விற்பனை செய்ய முடியாது. அரச மருந்தகமான ஒசுசலவில் மாத்திரமே இது விற்பனைக்கு கிடைக்கும். விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரை சிட்டையைக் கொண்டு மாத்திரமே இம்மருந்தை பெற்றுக்கொள்ள முடியும். இம்மருந்தை தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்தல், விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரையின்றி வைத்திருத்தல், கொண்டுசெல்லல், பாவித்தல் போன்றன தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதுவும் 50 மில்லி கிராம் தொடக்கம் 100 மில்லி கிராம் அளவான மாத்திரைகளுக்கே இந்த கட்டுப்பாடு. ஆனால், தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது 225 மில்லி கிராம் அளவுடைய மாத்திரையாகும். இம்மாத்திரை ஒன்று கறுப்புச் சந்தையில் 100 முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த செய்தி ஊடகங்களில் வெளிவந்த பின்னர், அம்பாறை நகர் எங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. போதைப்பொருள் வியாபார முஸ்லிம்களிடமிருந்து சிங்கள இளைஞர்களை காப்பாற்றுவோம் என்ற தொனியில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவர் குறித்த மொத்தமாக கொள்வனவு செய்து விற்பனை செய்ய முயற்சித்தமையானது பலத்த சந்தேங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 நமது செய்தியாளர்