A+ A-

வடக்கில் மேலும் 6000 வீடுகள் ஜனவரில் நிர்மாணம்


வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் கடந்த காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக மேலும் 6,000 வீடுகளை நிர்மாணிக்கவென அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 1 முதலாம் திகதி முதல் அமுல்படுத்தி 6 மாத காலப்பகுதிக்குள் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அதிகாரிகளை பணித்துள்ளார்.

இதுவிடயமாக நேற்று தேசிய (28) வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பவன்சூரிய தனது சபையின் சகல பிரதிப் பொதுமுகாமையாளர் சகிதம் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் 2017ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கென நிர்மாணிக்கப்படும் 25,000 வீடுகளையும் பரிசீலித்தார்.

இவ்விஜயத்தின்போது வடக்கிலுள்ள சகல மாவட்ட முகாமையாளர்களையும் சந்தித்ததுடன் 2017இல் ஒதுக்கப்பட்ட நிதியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணித்துள்ள வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினர் முன்னெடுத்துவரும் செமட்ட செவன வீடமைப்பு கிராமங்களையும் பார்வையி்ட்டார்கள்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் 2018ஆம் ஆண்டிலும் இதுபோன்ற உதாகம வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு மேலும் அரசின் நிதி பெற்று வடக்கின் விசேட வீடமைப்புக்கென 3,000 மில்லியன் ரூபாவினை ஒதுககியுள்ளார்.

இந்நிதியில் 150 உதாகம கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.