A+ A-

8,356 உறுப்பினர்களுக்காக 50,000 வேட்பாளர்கள் போட்டி

பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் 5 மாவட்டங்களிலும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகளுக்காக 4,919 வட்டாரங்களிலிருந்து 5,092 உறுப்பினர்களும், விகிதாசார அடிப்படையில் 3,264 உறுப்பினர்களுமாக மொத்தமாக 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதன்படி 60 சதவீதமான உறுப்பினர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்த மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் இருக்க வேண்டுமென்பது கட்டாயமாகியுள்ளது.

இதன்படி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை அடிப்படையாக கொண்டு நாடு பூராகவும் 50,000ற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களினால் களமிறக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றதுது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சி ஒன்றினால் அல்லது சுயேட்சை குழுவினால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை விபரங்கள் வருமாறு;

மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 13 சபைகளுக்காக 582 வேட்பாளர்களும் , கம்பஹா மாவட்டத்தில் 19 சபைகளுக்காக 745 வேட்பாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 17 சபைகளுக்காக 508 வேட்பாளார்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் 22 சபைகளுக்காக 686 வேட்பாளர்களும் , மாத்தளை மாவட்டத்தில் 13 சபைகளுக்காக 293 வேட்பாளர்களும் , நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்காக 342 வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் 20 சபைகளுக்காக 507 வேட்பாளர்களும் , மாத்தறை மாவட்டத்தில் 14 சபைகளுக்காக 416 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 சபைகளுக்காக 298 வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 17 சபைகளுக்காக 453 வேட்பாளர்களும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 3 சபைகளுக்காக 75 வேட்பாளர்களும் , மன்னார் மாவட்டத்தில் 5 சபைகளுக்காக 103 வேட்பாளர்களும் , வவுனியா மாவட்டத்தில் 5 சபைகளுக்காக 118 வேட்பாளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 சபைகளுக்காக 79 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 சபைகளுக்காக 274 வேட்பாளர்களும், அம்பாறை மாவட்டத்தில் 20 சபைகளுக்காக 438 வேட்பாளர்களும் , திருகோணமலை மாவட்டத்தில் 13 சபைகளுக்காக 259 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் 21 சபைகளுக்காக 683 வேட்பாளர்களும், புத்தளம் மாவட்டத்தில் 12 சபைகளுக்காக 342 வேட்பாளர்களும் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் மாவட்டத்தில் 19 சபைகளுக்காக 429 வேட்பாளர்களும் , பொலனறுவை மாவட்டத்தில் 8 சபைகளுக்காக 209 வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 18 சபைகளுக்காக 445 வேட்பாளர்களும், மொனராகலை மாவட்டத்தில் 10 சபைகளுக்காக 228 வேட்பாளர்களும் , சபரகமுவ மாகாணத்தில் இரத்தினப்புரி மாவட்டத்தில் 17 சபைகளுக்காக 474 வேட்பாளர்களும், கேகாலை மாவட்டத்தில் 12 சபைகளுக்காக 393 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.