A+ A-

நிர்பாயா மாணவியின் கதை: Anatomy of Violence

மெல்பனில் நடக்கும் இந்திய திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட அனட்டமி ஒஃப் வயலன்ஸ் என்ற திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. புதுடில்லியில் நிர்பாயா (Nirbhaya) என்ற மாணவியின்மீது ஆறு பேர் பாலியல் வன்முறை செய்ததால் அவள் மரணமடைந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இந்தியாவின் மனச்சாட்சியை உலுக்கியதாக  பேசப்படும் இச்சம்பவத்தைமீள்கொண்டு வரும்வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இது ஆங்கிலத்தில் டொக்கியோ ஃபில்ம் (Docufilm) என்ற வகைப்படும்

படத்தின் முடிவில் தண்டனைபெற்ற ஒருவனிடம், உன்னால் மரணம் சம்பவித்ததைப்பற்றி என்னநினைக்கிறாய் என்ற நிருபரது கேள்விக்கு ‘எல்லோரும் தானே மரணமடைகிறார்கள்’ என்றான். மேலும் பல கேள்விகளுக்கு ‘எல்லோரும்தானே உடலுறவு கொள்கிறார்கள். எந்த ஆண் உடலுறவு கொள்ளவில்லை. நாங்கள் பிடிபட்டோம். அதனால் தண்டனை.’ என முகத்தில் எதுவிதமான சலனமுமற்று பதில் சொல்கிறான்.

அவனுக்குக் கிடைத்த மரணதண்டனை பற்றிய கேள்விக்கு ‘எல்லோரும் எப்போதோ இறக்கிறார்கள். அதுபோல் நானும் இறப்பேன்’ என்கிறான்.

அல்பேட் காமுவின் (Albert Camus) த ஸ்ரேன்ஜர் (The Stranger) என்ற நாவலில் வரும் பிரான்சியக் கதாநாயகன் அல்ஜீரியாவில் கடற்கரைக்கு போகும்போது உள்ளுர்க்காரன் ஒருவனது கத்தியில் சூரிய ஒளிபட்டு வரும் வெளிச்சம் அவனது கண்ணில்படுகிறது. அதனால் எரிச்சலடைந்து அவனைச் சுட்டுக் கொல்கிறான். அப்பொழுது துப்பாக்கியிலிருந்த விசை தானாகவந்து அவனது உள்ளங்கையில் அடித்து துப்பாக்கியைச் சுடப்பண்ணுகிறது என காமுவால் எழுதப்படுகிறது. அதாவது கொலைக்கும் கொலை செய்தவனுக்கும் தொடர்பற்று விடுகிறது

இந்தக் கதாநாயகன் காதலியோடு எப்படிப் பழகுகிறான், தனது உத்தியோக உயர்வு, தாயின் மரணம் என்ற சந்தோசமான விடயங்களை அணுகும்போது சாதாரண மனிதர்களில் இருந்து அன்னியமாகியிருக்கிறான். தாயின் மரணத்திற்குப் போய் அங்கிருந்த பிரேதப்பெட்டியின் அழகை இரசிக்கிறான்.

நாம் பேசும் மனச்சாட்சி அல்லது சமூகத்தின் குறைந்தபட்சமான அறம் மற்றும் மனிதாபிமானத்தன்மையில் இருந்து வேறுபடுகிறான் என்பதையே அன்னியனாக காமு காட்டுகிறார். உடல் ரீதியான இன்பங்களை இரசிக்கும் அவன் மனரீதியான உணர்வுகள் அற்று இருக்கிறான். ஆனால், தனிமனிதனாக அவனது குறைபாடு அந்த நாவலில் காமுவால் காட்டப்படுகிறது.

தீபா மேத்தா இங்கு ஆறு குற்றவாளிகளில், பஸ் சாரதியைத் தவிர்ந்த மற்றைய ஐவரின் குற்றத்திற்கும் அந்த ஐவரது பின்புலத்தைக் காட்டி சமூகத்தை பொறுப்பக்குகிறார். வன்முறையின் தோற்றுவாய் இவர்கள் வளர்ந்த சமூகமே என்கிறார்.

தீபா மேத்தா கருத்தை ஏற்றால் இந்த வன்முறையின் பின்பாக சமூகத்தில் ஏற்பட்ட எழுச்சி அர்த்தமற்றதாக மாறுகிறது. இவர்கள் இந்தச் சமூகத்தால் தயாரிக்கப்பட்டவர்கள். இவர்கள் தண்டிக்கப்பட்டாலும் மீண்டும் தொடர்ந்து இப்படியானவர்கள் உருவாகுவார்கள் என்பது அர்த்தமாகிறது.

மேற்குநாடுகளில் பாலியல் வன்முறை நடக்கிறது. ஆனால் கூட்டுப் பலாத்காரமாக நடப்பதில்லை. இந்தியாவில் மற்றும் பாகிஸ்தான் ஏன் சமீபத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் (மூதூரில்) கூட்டுப்பலாத்காரம் நடந்திருக்கிறது. அதாவது தென்னாசியாவில் இப்படி நடப்பதன் காரணம் என்ன ?

தீபா மேத்தாவின் அனட்டமி ஒவ் வயலன்ஸ் படத்தில் இந்தக்குற்றவாளிகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களாக காட்டப்படுகிறார்கள். ஐந்து பேர்களில் ஒருவன் தனது மாமாவால் பலத்காரப்படுதப்படுகிறான். மற்றவன் தங்கையை வன்முறைக்கு உள்ளாக்க முயற்சித்தபோது அவனில் தங்கிவாழும் பெற்றோர் அவனைக் கண்டிக்கவில்லை. மற்றொருவன் மூளைவளர்ச்சியற்ற பெண்களை உடலுறவு கொள்ள முயற்சிக்கிறான்

இப்படி புதுடில்லி சேரிப்பகுதியில் நிலவும் வறுமை, வாழும் இடத்தின் இடநெருக்கடி, அதற்குமேல் இப்படியான இளைஞர்கள் மீது இளம்பெண்களின் புறக்கணிப்பு என்பன இதுபோன்ற வன்முறைகளுனக்கான காரணிகளாகிறது. இளைஞர்களின் மனிதாபிமானம் என்ற உணர்வை இவை சாகடித்துவிடுகிறதாகக் காட்டப்படுகிறது.

சமூகவிமர்சனமாக எடுத்த தீபா மேத்தாவின் இந்தப்படத்தில் கலைத்தன்மையற்று தெரிகிறது. ஐந்து இளைஞர்களது பழைய நடவடிக்கைகளைக் காட்டும்போது அவற்றில் கலைநயமான தன்மை இல்லாது தெரிகிறது. அழகிய பூந்தோட்டத்தை இரசிக்க நினைத்து போனால் மரங்களும் சருகுகளும் நிறைந்த இடமாக இருக்கிறது. மரணமடைந்த நிர்பாயா பல கனவுகளுடன் குடும்பத்திலும் தனது காதலனோடும் உலாவி வருமிடங்களில் அவளது உருவம் உறைவதாகப் பல முறை காட்டப்படுகிறது. அது அந்தப்பெண்ணின் கனவுகள் சிதைக்கப்படுவதன் அருபமான விடயமாகத் தெரிவது என் மனதில் பலகாலம் நிற்கும்.

இந்த சம்பவத்தின் பின்பு இந்திய மக்கள், அரசியல்வாதிகள் என்ன செய்வது எனத் தெரியது திகைத்தனர். இறுதியில் அந்த ஆறு பேரையும் குற்றவாளிகளாக தீர்ப்பளித்து மரணதண்டனை கொடுக்கவேண்டும் எனக் கொதித்தனர்.

தீபா மேத்தா இப்பொழுது வேறு குற்றவாளிகள் என இனம்காட்டுகிறார்.

 நடேசன்