A+ A-

திசைமாறிச் செல்லும் சாய்ந்தமருது போராட்டம்


தனியான உள்ளூராட்சிமன்‌ற கோரிக்கையினால் சாய்ந்தமருது தற்போது அரசியல் அனாதையாக்கப்பட்ட ஊர்போல தோற்றம்பெற்றுள்ளது. சுமார் 30 வருடங்களாக உள்ளூராட்சிமன்றம் கோரிவந்த சாய்ந்தமருது, இன்று அரசியல் புறக்கணிப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. பல தடவைகள் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கமே இதற்கு பிரதான காரணமாகும்.

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்குவதில் சில அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள் அல்லது தாமதப்படுத்துகிறார்கள் என்‌ற தோற்றப்பாடு சாய்ந்தமருது மக்கள் மத்தியில் வேரூண்றியுள்ளது. இதற்கு பிரதான காரணமாக இருப்பது கல்முனை மக்களின் அழுத்தம் என்பதை இங்கு நிரூபிக்க வேண்டிய தேவையிருக்காது. கல்முனை தமிழர்களிடம் பறிபோய்விடும் என்ற அழுத்தம்தான் இதற்கெல்லாம் அச்சாணியாக இருக்கின்றது.

இந்த இடத்தில் சாய்ந்தமருதுக்கு அப்பால் நின்று நாம் ஒரு விடயத்தை யோசிக்கவேண்டும். ஒரு ஊருக்கு அதிகாரம் வழங்கும்போது, பக்கத்திலுள்ள ஊர்களின் ஆதரவுடன் அல்லது பக்கத்து ஊர்களின் எதிர்ப்பு இல்லாமலேயே வழங்கப்படும். ஆனால், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்ற வழங்கும் விடயத்தில் கல்முனை மாத்திரம் உடன்பாடில்லாது காணப்படுகிறது. ஏக காலத்தில் கல்முனையை நான்காக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இங்கு உண்மையான கலநிலவரத்தை சொல்லப்போனால், சாய்ந்தமருதுக்கு என்ன அரசியல் அதிகாரம் வேண்டுமானாலும் கொடுக்காலாம். ஆனால், இப்போது இருப்பதுபோல கல்முனை மாநகரசபையுடன் சாய்ந்தமருது இருக்கவேண்டும் என்பதுதான் கல்முனையிலுள்ள அனேக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருக்கின்ற ஒரேயொரு நகரசபையான கல்முனை, மாற்றான் கைக்கு செல்லாதவகையில் பிரிக்கப்படவேண்டும். ஆனால், சாய்ந்தமருது மக்கள் எங்களை நாங்களே ஆளவேண்டும் என்பதில் மட்டும் விடாப்பிடியாக இருக்கிறது.

சாய்ந்தமருதின் கோரிக்கை நியாயமானது என்பதை சகல அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை ஏன் வழங்குகிறார்கள் இல்லை என்பதுதான் சாய்ந்தமருது மக்களின் கேள்வி. இந்த இடத்தில் கல்முனையையும் பகைத்துக்கொள்ளாமல், சாய்ந்தமருதையும் பகைத்துக்கொள்ளாமல் அரசியல்வாதிகள் இருதலைக்கொள்ளி எறும்புகளாக இருக்கின்றனர். இப்படியான சூழலில் உடனடி தீர்வு வேண்டுமென சாய்ந்தமருது எதிர்பார்ப்பது நடைமுறைச்சாத்தியமற்ற விடயம்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படுமென கல்முனைக்கு பிரதமரை அழைத்துவந்து மு.கா. வாக்குறுதியளித்திருந்தது. பல சந்திப்புகள், பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபின்னர் உள்ளூராட்சி மன்றம் வழங்குவதற்கான காலம் கனிந்துவந்த நிலையில், ஒருசில அரசியல்வாதிகள் அதில் அரசியல் இலாபம் தேடப்போய், கல்முனை மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக அதுவும் கைவிடப்பட்டது. போதாக்குறைக்கு அமைச்சரை ஊருக்கு அழைத்துவந்து, நான்தான் உள்ளூராட்சிமன்றம் தருவேன் என்று விளம்பரம் செய்யப்போய் பிரச்சினை மேலும் சிக்கலானது மட்டும்தான் மிச்சம்.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளானாலும், கல்முனை மக்களின் எழுச்சியினாலும் தடைப்பட்டுவந்த உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். அஹிம்சை வழியில் ஆரம்பிப்பதாக கூறப்பட்டாலும், வீதிமறியல் மற்றும் மாட்டுவண்டி போராட்டம் என்பன முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. இப்போது அதே பேராட்டம் ஊருக்குள்ளேயே அடித்துக்கொள்கின்ற கலவரமாக மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பள்ளிவாசலினால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில், ஊருக்குள் அரசியல் கட்சிகளை அனுமதிப்பதில்லை எனவும் யாரும் ஆதரவு வழங்கக்கூடாது எனவும், அவ்வாறு ஆதரவளித்தால் துரோகிகள் என்றும் மிகக் கடுமையாக குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் மீறும்வகையில் இந்த பிரகடனங்கள் காணப்படுகின்றன. வாக்குரிமை என்பது அந்த நாட்டு பிரஜையின் அடிப்படை உரிமை. அதைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் யாருக்கும் கிடையாது.

உதாரணமாக மனைவி யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை கணவனால் தீர்மானிக்க முடியாது. இப்படியான நிலையில் ஒரு மதஸ்தானம் ஊர்மக்களின் வாக்குரிமையின் கைவைப்பது என்பது பாரதூரமான குற்றமாகும். அரசியல் கட்சிகளை ஆதரிக்காமல் மக்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்தாலும், அதை பிரகடனமாக வெளியிடமுடியாது. அதுவுமின்றி அதை ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் அறிவித்து அவற்றை பின்பற்ற வேண்டுமென கட்டாயப்படுத்தவும் முடியாது.

இப்படியான சூழலில், அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்ததை காரணம்காட்டி சுயேட்சை குழுவில் வேட்பாளர்களை களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த சுயேற்சைக் குழுவை பள்ளிவாசல் நிர்வாகமே கையாள்கிறது. சாய்ந்தமருது சார்பாக கல்முனை மாநகரசபை தேர்தலில் சுயேற்சைக்குழுவில் போட்டியிடுவதற்கு 45 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 6 பேர் தெரிவுசெய்யப்பட்டு 6 வட்டாரங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சுயேற்சைக்குழு வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கு பள்ளிவாசல் சார்பாக ஒரு தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து அவற்றிலிருந்து 6 வேட்பாளர்களை தெரிவுசெய்தனர். இந்த தெரிவு சுயாதீனமாக நடைபெற்றதாக காட்டப்பட்டாலும், பலரின் தலையீடுகள் இருந்ததாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, 21ஆம் வட்டாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பெண் சட்டத்தரணியின் இடத்துக்கு பல இழுபறிக்கு மத்தியில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் இப்போது பட்டியலில் போடப்பட்டுள்ளார்.

புதிதாக வேட்பாளர்களை தெரிவுசெய்யும்போது, அதுவும் கெளரவமிக்க பள்ளிவாசல் தெரிவுசெய்யும்போது பல விடயங்களை கவனத்தில் எடுத்திருக்கவேண்டும். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை களமிறக்குவதில்லை என்று கூறிய பள்ளிவாசல் இப்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களையே களமிறக்கியுள்ளது. பள்ளிவாசல் சுயேட்சைக்குழு வேட்பாளர்களில் ஓரிருவரைத் தவிர, ஏனையவர்கள் அனைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு காத்திருந்தவர்களே. இப்போது என்ன, கட்சிதான் மாறியிருக்கிறதே தவிர, ஆட்கள் மாறவில்லை.

இது ஒருபுறமிருக்க, சமூகத்தில் செல்வாக்குமிகுந்த, சிறந்த கல்வியறிவுள்ள, சமூக சேவையாளர்களை பள்ளிவாசல் களத்தில் நிறுத்தியிருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே. ஒரு சிலரைத் தவிர சமூகத்துக்கு பரீட்சயமில்லாதவர்களையும், வெளிநாடுகளில் தொழில்புரிவோரையும், சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத வியாபாரிகளையுமே பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவுசெய்திருக்கிறது. வேட்பாளர் தெரிவில் சாய்ந்தமருது மக்களுக்கு 100% திருப்தி இல்லாவிட்டாலும், பள்ளிவாசலின் கோரிக்கை ஒன்றுக்காகவே வாக்களிக்கவேண்டும்.

இப்படியான சூழலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை மாநகரசபை தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக எந்தவொரு வேட்பாளர்களை களமிறக்குவதில்லை எனவும், சுயேட்சைக்குழுவுக்கே ஆதரவளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. உரிமைக்காக போராடும் நோக்கில் களமிறங்கியுள்ள சுயேட்‌சைக்குழுவுக்கு ஆதரவளிப்பதன் மூலம், அ.இ.ம.கா. சாய்ந்தமருதிலுள்ள தனக்கான சூட்டை தணிப்பதற்கு எத்தனிக்கிறது. தங்களது கட்சியில் போட்டியிடவிருந்த வேட்பாளர்களே பள்ளிவாசல் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதால் அந்தக் கட்சிக்கு இதுவொரு தேவையாக இல்லாதுபோகலாம்.

சாய்ந்தமருதில் வேட்பாளர்களை களமிறக்குவதில்லை என்று கூறிய அ.இ.ம.கா. பட்டியலில் சிராஸ் மீராசாஹிபின் பெயரை முதலில் போட்டுள்ளது. சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற போராட்டத்துக்கு உயிர்கொடுத்தவர் என்ற வகையில் அவருக்கென ஊரில் நல்லபெயர் உள்‌ளது. இப்படியிருக்கும்போது அமைச்சர் றிஷாத் பதியுதீனும், முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபும் சேர்ந்து இரட்டை விளையாட்டு ஆடுகிறார்களா என ஊர்மக்கள் விசனமடைந்துள்ளனர். சாய்ந்தமருதில் போட்டியிடுவதில்லை என்று கூறிவிட்டு, சிராஸின் பெயரை பட்டியலில் போட்டதன்மூலம் அவர்களது நாடகத்தை அவர்களாகவே காட்டிக்கொடுத்துள்ளார்கள்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்புபட்டு வருகிறது. சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்கவேண்டும் என்றாலோ அல்லது வழங்கப்படக்கூடாது என்றாலோ முஸ்லிம் காங்கிரஸின் அனுமதி தேவை என்பது சமகாலத்தில் நன்‌றாக உணரப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் காங்கிரஸ் மீது பள்ளிவாசல் சார்பாக கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

எனினும், ஒரு ஊரை மட்டும் திருப்திப்படுத்தாமல் கல்முனை, சாய்ந்தமருது என இரு ஊர்களும் திருப்தியடையும் வகையில் கல்முனையை நான்காக பிரிப்பதற்கான முஸ்தீபுகளை மு.கா. மேற்கொண்டு வருகிறது. அதற்கிடையில் எங்களுக்கு அவசரமாக உள்ளூராட்சிமன்றம் வழங்கப்படவேண்டுமென சாய்ந்தமருது ஒற்றைக்காலில் நிற்கிறது. ஆனால், தற்போது தெரிவுசெய்யப்படும் கல்முனை மாநகரசபையின் ஆட்சிக் காலத்துக்குள்தான் உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இந்த இரண்டுக்குக்குமான இடைவெளியே சாய்ந்தமருதில் சிலரின் அதிருப்திக்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில், கல்முனை மாநகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சாய்ந்தமருதில் மு.கா. சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் சாய்ந்தமருதுக்குள் அரசியல் செய்யமுடியாது என்ற பிரகடனத்தை காரணம்காட்டி மு.கா. வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய அமைதிப் பயணம் இப்போது வன்முறைப் பயணமாக மாறியுள்ளது.

கடந்த 24ஆம் திகதி அமைச்‌சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். அன்றையதினம் சாய்ந்தமருதில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களான பிர்தெளஸ் மற்றும் யஹியாகான் என்பவர்களின் வீடுகளுக்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த சிலரினால் சேதம் விளைவிக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்னுமொரு வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பெண்களை மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேலும் இரண்டு வேட்பாளர்களின் வீடுகளை தாக்குவதற்கு சென்றிருந்தவேளை, அங்கிருந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களால் விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளிவாசலின் தீர்மானத்தை காரணம்காட்டி, இவ்வாறு வீட்டுக்குவீடு சென்று தாக்குதல் நடத்துவதை பள்ளிவாசல் நிர்வாகமே கட்டுப்படுத்த வேண்டும்.

விடுதலைப்புலிகள் தங்களது அமைப்புக்கு பிள்ளைகளை அனுப்பாத வீடுகளில் துரோகி என முத்திரை குத்தினார்களே தவிர, அவர்களது வீடுகளை அடித்து நொறுக்கவில்லை. ஒரு மாற்று சமூகமே இப்படியானதொரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் நிலையில், அமைதியை போதிக்கும் மார்க்கத்தை பின்பற்றுகின்ற சாய்ந்தமருது மக்கள் மு.கா. வேட்பாளர்களை துரோகிகள் என்று முத்திரைகுத்தி, அவர்களின் வீடுகளுக்கு சென்று தாக்குதல் நடத்துவது எவ்வளவு கேவலமாக செயல். இது மனிதாபிமானத்துக்கும், ஜனநாயகத்துக்கு அடிக்கின்ற சாவுமணியாகும்.

வேட்பாளர்களின் வீடுகளை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், சி.சி.ரி.வி. காணொளி பதிவுகள் மூலம் 13 சந்தேகநபர்கள் கல்முனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் தவிர, ஊரின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தமை, அத்துமீறி அச்சுறுத்தியமை, பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை போன்று குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட 13 சந்தேகநபர்களும் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு பிணைகோரி 5 சட்டத்தரணிகள் ஆஜராகினர். எனினும், அன்றையதினம் பதில் நீதிபதியே கடமையில் இருந்ததால் பிணை வழங்கப்படவில்லை. பின்னர் அவர்கள் இடப்பற்றாக்குறை காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். மறுநாள் சந்தேகநபர்‌கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களில்  9 பேர் அரச உத்தியோகத்தர்கள் என்றும், ஒருவர் அ.இ.ம.கா. கட்சியைச் சேர்ந்த பள்ளிவாசலின் சுயேட்சைக்குழு வேட்பாளர் என்றும், 4 தொழிலதிபர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 14 சந்தேகநபர்களில் ஒருவர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை சமூகத்தின் போராளிகள் என்றும், ஹிஜாத் போரில் கலந்துகொண்டதுபோலவும் சிலர் பெருமையடித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பெருமையடித்துக்கொள்பவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டால் குற்றவாளிகளை தலையில் வைத்து கொண்டாடுவீர்களா? யார் செய்தாலும் குற்றம் குற்றமே.

வன்முறையில் சம்பந்தப்பட்டவர்களை அவற்றிலிருந்து தடுக்கவேண்டுமே தவிர, அவர்களை உசுப்பேற்றி வன்முறையே மேலும் மேலும் வளர்க்கக்கூடாது. சாய்ந்தமருது மக்களின் சுயேட்சைக்குழு போராட்டம் நியாயமானது. அதை ஆதரிப்பதும், ஆதரிக்காமல் விடுவதும் மக்களின் கைகளில் உள்ளது. அதுபோல, சுயேட்சைக்குழுவுக்கு வாக்களிக்காவிட்டால் துரோகி என்று முத்திரை குத்தவும் முடியாது. அதுபோல, ஏனைய வேட்பாளர்களை கட்டுப்படுத்துவதற்கான எந்த அதிகாரமும் பள்ளிவாசலிடமோ அல்லது ஊர் மக்களிடமோ வழங்கப்படவில்லை.

சாய்ந்தமருது போராட்டம் ஜனநாயக ரீதியானது என்றால், அதை ஜனநாயக ரீதியாகத்தான் எதிர்கொள்ளவேண்டும். உண்மையில் சாய்ந்தமருது மக்கள் பள்ளிவாசலின் பக்கம் நின்றால், சுயேட்சைக்குழு வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். அதற்காக மு.கா. வேட்பார்களை துரத்தவேண்டிய எந்த தேவையும் நமக்கு இல்லை. தீர்மானிக்கின்ற சக்தி ஒவ்வொரு மக்களிடமும் இருக்கவேண்டுமே தவிர, பள்ளிவாசலிடம் இருக்கமுடியாது.

போராட்டங்களை முன்னெடுக்கும்போது, பள்ளிவாசல் என்று சொல்லிக்கொண்டும் கலவரங்கள் வருகின்றபோது பொதுமக்கள்தான் செய்தார்கள் என்று சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் ஒருபோதும் ஒதுங்கிக்கொள்ள முடியாது. போனது போகட்டும், இனிமேலாவது எந்தவொரு பிரச்சினைகளும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தார்மீக கடமையாகும்.

முஸ்லிம்களாகிய நாங்கள் மாற்று மதத்தவர்களுக்கு உதாரணமாக இருப்போமே தவிர, அவர்கள் நம்மை வன்முறையாளர்களாக அடையாளம் காண்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. பள்ளிவாசல் வேட்பாளர்கள் நபிகளும் அல்ல, மு.கா. வேட்பாளர்கள் காபிர்களும் அல்ல. அற்ப அரசியலுக்காக நாம் பின்பற்றுகின்‌ற இஸ்லாத்தை உதறித்தள்ளிவிட்டு கலிமா சொன்ன முஸ்லிம்களாகிய நாங்கள் தங்களுக்கு அடித்துக்‌கொள்கிறோம். உயிர் அச்சுறுத்துல் விடுக்கின்றோம். மறுமையில் இந்த அரசியல் வாழ்வு நமக்கு ஒரு நன்மையைக்கூட கொண்டுவரப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்வோம்.

 துருவன்