A+ A-

மு.கா. கனவு காணும் கட்சியல்ல, மக்கள் கனவை நனவாக்கும் கட்சி: அமைச்சர் ரவூப் ஹக்கீம்


பொத்துவில் பிரதேசத்திலிருந்து எம்மை விரட்டலாம் என்ற நோக்கில் சிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கனவு காணும் கட்சியல்ல, மக்கள் கனவை நனவாக்கும் கட்சி என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களை இன்று (04) திறந்துவைத்த பின்னர், உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப் 2000ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டபோது, நான் மாத்திரம் கண்டியில் மரச்சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றேன். வட, கிழக்குக்கு வெளியே மரச் சின்னத்தில் பாராளுமன்றம் சென்றவன் நான் மட்டும்தான். மரச் சின்னத்தின் மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியாமலில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1970களில் பாவித்த கை சின்னத்தில் இப்போது போட்டியிடுகிறது. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் காணாமல்போய் திரும்பி வந்துள்ளது. உதயசூரியன் சின்னம் பறிபோயுள்ளது. ஆனால், சின்னம் பறிபோனாலும் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியுடன்தான் இருக்கிறார்கள். சின்னம் மாறியதற்காக மக்கள் யாரும் கட்சி விட்டுப் போவகவில்லை.

சில கட்சிக்காரர்கள் அவர்களது சொந்த மாவட்டங்களில் யானைச் சின்னத்தில் கேட்பதை நியாயப்படுத்திக்கொண்டு, நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் யானையில் கேட்பதை விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றனர். அதேபோல், காணிப் பிரச்சினைகளுக்காக சம்பந்தப்பட்ட இடங்களில் எட்டியும் பார்க்காத இன்னொரு அமைச்சர் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்ததை விமர்சித்துக்கொண்டிக்கிறார்.

பொத்துவில் காணிப் பிரச்சினைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துக்கொண்டு நாங்கள் ஒவ்வொரு இடங்களாகச் சென்று ஆய்வுசெய்தோம். மக்களின் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துச்சொன்னோம். மாற்று இனத்தவர்கள் எங்களுடன் சண்டைக்கு வருகின்ற அளவுக்கு, அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டோம்.

தனியான கல்வி வலயம் அமைப்பதற்கு குறைந்தது 50 பாடசாலைகள் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையையும் தாண்டி, பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தை உருவாக்குவதற்கு நாங்கள் விடாப்பிடியாக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் இவை எல்லாவற்றுக்குமான நிரந்தரத் தீர்வை பெற்றுத்தரும்.

பொத்துவில் வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய செலவில் ஹெடஓயா திட்டத்தை அடுத்த வருடத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கையில் எங்குமில்லாதவாறு மிகப்பெரிய நீர்ப்பாசன, குடிநீர் திட்டத்தை இதன்மூலம் ஏற்படுத்தவுள்ளோம். எனது அமைச்சின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் இத்திட்டத்தை நாங்கள் பொத்துவில் மக்களுக்காக செய்துகொடுப்போம் என்றார்.

இதேவேளை, பொத்துவில்  261 குடும்பங்கள் வாழும் ஜெய்க்கா கிராமத்துக்கு அவரசரமாக குடிநீர்த்திட்டமொன்று இன்று திறந்துவைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் இடத்திலுள்ள தண்ணீரை பம்பி மூலம் எடுத்து வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கமுடியும்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அப்துல் மஜீத், முன்னாள் மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.