கபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணத்துக்காக புத்தளம் மக்கள், தங்களின் சுயகெளரவம், தன்மானம் என்பவற்றை இழக்கமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்துவார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (19) புத்தளத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
ஐக்கிய தேசியக் கட்சி மீது இப்போது மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தனக்கென பணம் சம்பாதிக்காக தலைமைகள்தான் ஐ.தேம்.வில் இருந்துள்ளன. டட்லி சேனாநாயக்க மரணித்தபோது அவருடைய வங்கி கணக்கில் 1500 ரூபா மாத்திரமே இருந்தது என்று ஐ.தே.கட்சிக்காரர்கள் பெருமைப்படுகின்றனர். ஜே.ஆர். ஜயவர்தன தனது மரணத்தின் பின் அனைத்து சொத்துகளையும் பொதுத் தேவைக்காக எழுதிக்கொடுத்தார்.
இப்படியான கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள், இப்போது பணத்துக்காக புத்தளத்தில் கட்சியை குத்தகைக்கு விட்டுள்ளனர். புத்தளத்தில் எங்களுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு ஐ.தே.க. விரும்பியபோதும், அதன் உள்ளூர் தலைமைகள் விரும்பவில்லை. வன்னி அமைச்சரின் பணத்துக்காக இப்படி கட்சியை குத்தகைக்கு விட்டிருப்பதானது, அசல் ஐ.தே.க. காரர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
மக்களை விலைக்கு வாங்கும் வங்குரோத்து அரசியலுக்கு புத்தளம் மக்கள் ஒருபோதும் சோரம்போமாட்டார்கள் என்பதை இங்கு வந்திப்பவர்களே கட்டியம் கூறுகின்றனர். கபடத்தனமாக சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு புத்தளம் மக்களின் தன்மானத்தை பேரம்பேசுவது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது. சில ஆயிரம் வாக்குளை விலைக்கு வாங்கி, தன்னை தேசிய தலைவராக காட்டிக்கொள்ளும் கனவில் மிதந்துகொண்டிருக்கும் அரசியல்வாதியின் அட்டாகசம் முடிவுக்கு வரவேண்டுமா இல்லையா என்பதை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
நஞ்சுப் போத்தலை வைத்துக்கொண்டு பயம்காட்டி, அரசியலுக்கு வந்தவர்கள் இப்போது தம்பிமாரை வைத்து, மக்களை மாத்திரமின்றி ஏனைய கட்சி அரசியல்வாதிகளையும் விலைக்கு வாங்குகின்ற கேவலம் இந்த மண்ணில் நடந்துகொண்டிருக்கிறது. செல்கின்ற இடங்களில் எல்லாம் பணத்தை வாரியிறைத்து ஆசனங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கின்றனர். இவற்கு மக்கள் பதில் சொல்லவேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.
மறைந்த தலைவர் அஷ்ரஃபின் சகவாசமே இல்லாத வன்னி அமைச்சர், அவருடன் வாழ்ந்ததுபோல காட்டிக்கொண்டு, அவரின் படங்களையும் சேர்த்து பிரசுரங்களை வெளியிடுவது நகைப்புக்குரிய விடயம். அஷ்ரஃபின் மகோன்னத அரசியல் தெரியாத இவர்கள் மேடைகளில் ஏறிக்கொண்டு, அவரின் அரசியலைப் பற்றி ஏங்கி, ஏங்கி பேசித்திரிகின்றனர். இப்படியா பச்சோந்தி அரசியல்வாதிகளின் விலைபேசலுக்கு உண்மையான போராளிகள் யாரும் சோரம்போக மாட்டார்கள்.
புத்தளத்தில் பாரிய கழிவுநீர் முகாமைத்துவ தொகுதியை அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு, சீன வங்கியொன்றுடன் ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். புத்தளம் மற்றும் சிலாபத்தை உள்ளடக்கியதாக இந்த கழிவுநீர் முகாமைத்துவம் நடைமுறைப்படுத்தப்படும். இதனை அடுத்த வருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர், நீர்நிலைகளில் சேராத வகையில் அகற்றப்படும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 5ஆம் கட்ட நிதியுதவியின் கீழ் புத்தளத்தில் குடிநீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் 2 இலட்சம் பேர் சுத்தமான குடிநீரை குழாய் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 14,000 மில்லியன் ரூபாவை கடனுதவியாகப் பெற்று புத்தளம் தெற்கு நீர் வழங்கல் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம். இதன்மூலம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசம் வரை இந்த குடிநீர் திட்டத்தை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
கலா ஓயாவிலிருந்து 2 இலட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்படும் நிலையில், மேலதிகமாக இன்னும் 1.5 இலட்சம் பேருக்கு குடிநீரை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இந்த வருட நிதியொதுக்கீட்டில் புத்தளம் வடிகாலமைப்புக்கு பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல அபிவிருத்தி திட்டங்களை புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.