சுகாதாரத்தைப் பேணுவதற்காக மலசலக்கழிவு பவுசர் வண்டிகளும் மற்றும் வரட்சி நிலவும் பகுதிகளின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க நீர்தாங்கி பவுசர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் செவ்வாய்க்கிழமை (16) அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட டெங்கு உயிர்கொல்லி நோய் வேகமாகப்பரவி கிண்ணியா, மூதூர் முதலான பிரதேசங்களில் 15 உயிர்களுக்கு மேல் பலிகொண்ட நிலையில், இந்த மலசலக்கழிவு பவுசர் வண்டிகள் வழங்கப்பட்டன.
அங்கு சென்ற அமைச்சர் ஹக்கீம் அப்பிரதேசங்களில் மலசலக்கழிவற்றல் முறையாக முகாமைத்துவப்படுத்தப்படாமல் சுற்றாடல் சீரழிந்த நிலையை அவதானித்ததுடன், அப்பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு செவிமடுத்து இந்த மலசலக்கழிவு பவுசர்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இவை கிண்ணியா நகர சபை மற்றும் மூதூர் பிரதேச சபைகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. இதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு 40 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது.
அத்துடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஐந்து பிராந்திய சேவை நிலையங்களுக்கு குடிநீர் தாங்கி பவுசர்கள் கையளிக்கப்பட்டன.
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்திலும், ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்திலும், தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலும், மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திலும், மற்றும் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும், பயன்படுத்துவதற்காக இந்த குடிநீர் தாங்கி பவுசர்கள் வழங்கப்பட்டதுடன், அவை அடிக்கடி வரட்சி ஏற்படக்கூடிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கு பெரிதும் உதவும்.
ஊமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை, மொனராகலை, மாவட்ட மக்களுக்கு இவற்றின் உபயோகம் நன்மை பயப்பதாக அமையும் எனவும் அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.