A+ A-

புரிந்துணர்வின் அடிப்பதிலேயே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுகிறோம்.






பேருவளை நகர சபைக்கு ஐ.தே.கட்சியோடு இணைந்து  போட்டியிடுகின்ற அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களுத்துறை மாவட்டத்தில் அதனுடைய முழு ஆதரவையும் ஐ.தே.கட்சிக்கு வழங்கும். நாம் ஐ.தே .கட்சியுடன்  புரிந்துணர்வின் அடிப்படையிலேயே  இணைந்து போட்டியிடுகிறோம். நாடு முழுவதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்கின்ற முடிவை எடுத்தாலும் சில மாவட்டங்களில்  ஐ.தே .கட்சியுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்,  ஐ.தே .கட்சியின் யானை  சின்னத்தில் போட்டியிடும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  வேட்பாளர்  சியான் முனவ்வரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் 

  இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஐ.தே.கட்சியின் தலைமைத்துவங்கள் எங்களுடைய கட்சியை அரவணைத்துக் கொண்டு இந்த உள்ளுராட்சி சபையின் ஆட்சியை கைப்பற்றி விடவேண்டும் எனும் முனைப்போடும் , திறந்த விட்டுக் கொடுப்போடும் ,புரிந்துணர்வோடும் எங்களுக்கு அந்தந்த சபைகளில் போட்டியிடுவதற்கான அந்தஸ்தைத் தந்துள்ளமையினால் ஐ.தே.கட்சியோடு சேர்ந்து போட்டியிடுகின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியின் சிநேக கட்சி என்ற அடிப்படையில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்துள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையிலும் ஐ.தே.கட்சி சின்னத்தில் கேட்டது கிடையாது. சில இடங்களில் ஐ.தே.கட்சிக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தது. எங்களுக்குரிய வட்டாரங்களைத் தராமல் அல்லது உரிய தொகுதிகளில் எங்களுக்கான உறுப்பினர்களை நிறுத்துவதற்கு அனுமதிக்காமல் சில இடங்களில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் நாங்கள் ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்திடம் சொல்லி விட்டு தனியாக சில இடங்களில் போட்டியிடுகின்றோம். 

 நாம் தனித்து போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்களில் ஐ .தே .கட்சிக்கு  சரிவினை  உண்டுபண்ணும் . அந்த இடங்களில்  தோல்வியுற்றதன் பின்புதான்  ஐ.தே.கட்சித் தலைமைத்துவம்  இதை புரிந்து கொள்ளும் என்று ஓட்டமாவாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில நான் சொன்ன கதையை திரிபுபடுத்தி , ஐ.தே.கட்சியை தோற்கடிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சொல்கின்றார் , எனவே நீங்கள் இங்கேயும் ஐ.தே.கட்சியை தோற்றகடிக்க வேண்டும் என்ற கதைகளை மக்கள் மத்தியில் சிலவிஷமிகள்  சொல்லிபோகின்றார்கள் என நான் கேள்விப்படுகின்றேன். இவ்வாறான விசமப்பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. ஏனென்றால் அதனை சொல்கின்றவர்கள் பற்றி மக்கள் தெளிவாக அறிவார்கள்.

கடந்த காலங்களில் இந்த சமூகத்திற்கு நடந்த மிக மோசமான வன்முறைகளுக்கு காரணமாகவிருந்த முன்னாள் ஜனாதிபதி தாமரை மொட்டுச் சின்னத்தில் நாடு முழுவதிலும் போட்டியிடுகின்றார். நாடு முழுவதிலுமுள்ள 94 சபைகளில் 83 சபைகளில் நாங்கள் தாமரை மொட்டில் கேட்கின்றோம் என்று அறிவித்து விட்டு. பேருவளையிலும், பண்டாரவளையிலும் சுயாதீனக் குழுவைப் போட்டிருக்கின்றோம் என்று பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அதன் ஊடகச் செயலாளர் அறிக்கை விட்டுள்ளார். ஆனால் அவர்கள் பேருவளை நகர சபையில் ஒரு சுயாதீனக் குழுவை நிறுத்தியிருக்கிறார்கள். இது மறைமுகமாக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

ஏனென்றால், அவருடைய கட்சிக்கு இங்கு முகம் காட்ட முடியாது. அக்கரைக்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது நளீம் ஹாஜியார் கலாசாலையில் எத்தனை பேர் அகதிகளாக இருந்தோம் என்பதை மறந்து விட முடியாது. எத்தனை நாட்கள் சொந்த வீடுகளுக்கு போக முடியாமல் பயத்திலும், பீதியிலும் வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதை மறந்து விட முடியாது. 

 தர்கா நகரில் மற்றும் அலுத்கம நகரில் நடந்த அட்டூழியங்களைப் பற்றி நாங்கள் மறந்து விட முடியாது.

 தமது  சொந்த சுயலாபத்திற்காக அன்று மக்களுக்கு அநியாயம் செய்தவர்கள்  இன்று சுயாதீன குழுவொன்றைப் போட்டு அதில் மறைமுகமாக இந்த மஹிந்த ராஜபக்ஷவின் கைகளில்  மீண்டும் இந்த பேருவளை நகரசபையின் அதிகாரத்தை வழங்கும்  முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். இதனை  தெளிவாக நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு இங்கு சின்னத்தை விற்க முடியாது. அத்தோடு இங்கு  ஐ.தே.கட்சி வெற்றி பெறுவது நிச்சயம். அதை முறியடிப்பதற்கு மறைமுகமாக இன்று பசுத்தோல்  போர்த்திய  புலிகளாக இவர்கள் உங்களுக்கு முன்பாக வருகின்றார்கள் என்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பிரதேசத்தின் ஆட்சி,  ஆட்சியிலிருக்கின்ற ஐ.தே.கட்சியின் கரங்களில் கொடுக்கப்பட வேண்டும். இங்குள்ள அமைச்சர்கள் மற்றும் நாங்கள் இணைந்து  இந்த பிரதேசத்தின் அபிவிருத்திற்கு எங்களாலான அனைத்து பணிகளையும் மக்களுக்காக  செய்வதற்கு தயாரா இருக்கின்றோம்.  எனவே ஆட்சியில் இருக்கின்ற கட்சியிடம் தான் இந்த அதிகாரம் போக வேண்டும். அதை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள்  தயாராக வேண்டும்.

பேருவளையில் குழாய் நீர் விநியோகத்திற்கு ஒரு நீர்த்தாங்கியே இருந்தது. நான் இந்த அமைச்சை பெறுப்பேற்ற பின்னர் ஜப்பான் ஜய்க்கா நிறுவனத்தின் பங்களிப்புடன் இன்னுமோர் நீர்த்தாங்கியை அமைத்துத்தருவதன் மூலம் இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நீர் விநியோகத் தடைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டுவதுடன் 24 மணி நேரமும் தடையின்றி நீர் கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவேன். அது மட்டுமல்ல 190 மில்லியன் செலவில் பேருவளை மற்றும் அலுத்கம பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை தற்பொழுது அமுல்படுத்த ஆரம்பித்துள்ளோம். அதனூடாக இந்த களுத்துறை மாவட்டத்தின் அதிகமான  பிரதேசங்களுக்கு 24 மணி நேரங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ஏற்பாடுகளும், அதேநேரம் வருடத்தில் இரண்டு தடவைகள் வறட்சி ஏற்படும் காலத்தில் கடல் நீர் ஆற்று நீருடன் கலக்காமல் தடுப்பதற்கு அணையொன்றை அமைக்கவுள்ளோம். இதற்காக சுமார் 2100 மில்லியன் ரூபா செலவிடப்படும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே இப் பிரச்சினையைத் தீர்க்க வழியேற்பட்டுள்ளது.
பேருவளை அபிவிருத்திக்கு மாநகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இதற்கான திட்டமொன்றை வகுத்து எதிர்காலத்தில் சிறந்த அபிவிருத்தியடைந்த நகரமாக இந்த பேருவளையை மாற்றியடைக்க தயாராவிருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த தேர்தலில் உள்ளுராட்சி சபையின் ஆட்சியை ஐ.தே.கட்சி கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஏனென்றால் மாற்றுக் கட்சி பிளவுபட்டிருக்கின்றது. ஆட்சியில் இருக்கின்ற கட்சியன் தயவில்; தான் உள்ளுராட்சி சபைகள் இயங்க வேண்டும். இந்த பேருவளை நகர சபையின் வெற்றி நிச்சயம் என்பதில் எந்த ஐயமும் கிடையாது என்றார்.

இக்கூட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.