A+ A-

கல்முனை மாநகர சபையை ஆளப்போவது யார் ?
-மதியுகன் -

கல்முனை என்பது இலங்கை முஸ்லிம்களின் முகவெற்றிலை என்று சொல்வதுண்டு. அவ்வாறே கல்முனை வாழ் முஸ்லிம் சமூகமும் முஸ்லிம்களின் பாரம்பரியம்,கலாச்சாரம், பூர்வீகம் என்பவற்றில் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்டு வாழ்கின்றனர். இலங்கை முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஒரு தலைநகரான கல்முனை கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்து வந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஸ்ரப் அவர்களின் அர்ப்பணிப்பும், சமூகம் சார்ந்த தூர நோக்கும் முஸ்லிம் காங்கிரசை சக்தி வாய்ந்த மக்கள் இயக்கமாக பரிணமிக்க வைத்தது. அஸ்ரப் அவர்களின் தனித்துவமான முடிவுகள் கட்சியை பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவரின் முடிவுகள் பிடிக்காதவர்கள் அப்போது அவரையும், கட்சியையும் பலமாக விமர்ச்சித்தனர்.

ஆனால் அவர் யாரைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை தனது பணியில் உறுதியாகவும் தெரிவு செய்த பாதையில் தனித்துவமாகவும் பயணத்தை தொடர்ந்தார். அஸ்ரப் எனும் அரசியல் மாமேதையின் கண்டு பிடிப்புதான் தற்போதைய தலைவர் அமைச்சர் ஹக்கீம். ஹக்கீம் மீதான நம்பிக்கை ஸ்தாபக தலைவர் பலதடவைகள் நிறுவியுள்ளார். தலைவரின் எதிர்பாராத மறைவில் விக்கித்து போயிருந்த பேரியக்கத்தின் போராளிகளுக்கு அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆதர்சனமாக அமைச்சர் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டது ஆறுதலாக அமைந்தது எனலாம்.

அஷ்ரபின் அரசியல் பிரவேசமும்,அதன் பின்னரான தொடரான அரசியல் நகர்வும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசை ஒரு ஆதிக்க சக்தியாக நிறுவியது எனலாம். தலைவர் அஷ்ரபின் சமூகம் சார்பான தொடர்ச்சியான நகர்வுகள் முஸ்லிம் சமூகத்தை அவர் பக்கம் இழுத்தது. அது தலைவர் அஸ்ரப் அவர்களின் நுட்பமான அரசியல் வியூகத்தினால் விளைந்த விளைவே ஆகும். இதன் பின்னணியில் அடுத்த கட்ட தலைமை அஸ்ரப் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தது. அந்த ஆரம்பம் இலகுவில் கடந்து போகும் வகையில் அமையவில்லை.மாறாக காட்டிக்கொடுப்புக்கள்,கழுத்தறுப்புக்கள், தலைமைத்துவப் போட்டி என மீளமுடியாத சிக்கலுக்குள் அமைச்சர் ஹக்கீமை தள்ளியது. 

எல்லா சிக்கல்களையும் சமாளித்து சாணக்கிய அரசியல் தலைமையாக மிளிர்ந்த ஹக்கீம் அஸ்ரப் காலத்தில் கல்முனையை எவ்வாறு  தம் வசம் வைத்திருந்தாரோ அதனை விடவும் அதிகமான வாக்குவங்கியினை உருவாக்கி கல்முனையை முஸ்லிம் காங்கிரசின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றினார். இடையில் பலர் பிரிந்து சென்றனர். தலைமைத்துவத்திற்கு சவாலாக சிலர் தனியாக பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்தனர் ஆனால் கல்முனை மாநகரம் முஸ்லிம் காங்கிரசின் அசைக்க முடியாத தலமாக இருந்தது. முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருந்த கல்முனை மாநகர சபைக்கு மிகவும் சவாலான தேர்தலாக இந்த உள்ளூராட்சி சபை அமைந்தது துரதிஷ்டமே. அதற்கான நியாமான அல்லது நியாயமற்ற பல காரணங்களை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றார்கள். 

சாய்ந்தமருது மக்களின் தனியான பிரதேச சபைக்கான எண்ணக்கரு  கூர்மையடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த தனியான உள்ளூராட்சி சபையை தருவதில் தடைக்கல்லாக இருப்பதாக அந்த மக்கள் மத்தியில் பிழையான மனப்பதிவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான தரப்பினர் பரப்புரை செய்து வருகின்றனர். அதற்க்கு ஆதரவாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா செயற்படுவதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கடந்த 18.02.2018 வியாழக்கிழமை அன்று சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தை திறந்து வைத்து உரைநிகழ்த்தும் போது அவர் அங்கு தெரிவித்த கருத்துக்களின் மூலம் இதனை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அமைச்சர் ரிஷாத் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையினை வழங்க சொன்னதாகவும் அதனை இன்னொரு அரசியல் சக்தி தடுத்ததாகவும் அவ்வாறான அரசியல் சக்திகளை விரட்டி அடிக்குமாறும் அவரது கொச்சைத்தமிழில் செப்பிவிட்டு சென்றுவிட்டார். இவரின் இந்த உரையை தொடர்ந்து சாய்ந்தமருது மக்கள் முட்டாளர்களா? அல்லது முட்டாள்கள் போல நடிக்கின்றார்களா? அல்லது முட்டாள்களாக ஆக்கப்பட்டார்களா? என்று பல கேள்விகள் எழுகின்றன. கட்சிக்காரியாலயம் திறக்க வந்த அமைச்சர் பைசர் முஸ்தபா அதனை மட்டும் செய்யாமல் அமைச்சர் ரிஷாத்தை புகழ்ந்துவிட்டு இறைவனின் மீது சத்தியமிட்டு சாய்ந்தமருத்துக்கான தனியான உள்ளூராட்சி சபையை எப்படியாவது தருவதாக கூறியதை மந்தைகள் போல தலையாட்டி கேட்டார்களே தவிர இதுவரைக்கும் அவரால் ஏன் இதனை செய்ய முடியவில்லை எனும் கேள்வியை அவர்கள் அங்கு யாரும் கேற்கவில்லை. இதன் மூலம் அமைச்சர் ரிஷாத்  குழுவினர் திட்டமிட்டு மக்களை ஏமாற்றும் விடயம் புலனாகின்றது.

கடந்த சிலநாட்களாக கல்முனை பிரதேசம் குறிப்பாக சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவுகின்ற அசாதாரண நிலையை கவனத்தில் கொள்ளாத அமைச்சர் பைசர் முஸ்தபாக குறித்த துறைக்கான அமைச்சராக இருந்தபோதும் அமைச்சர் ரிஷாதின் செய்தியினை சரியாக மக்களுக்கு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனவே இதன் மூலம் பைசர் முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரச்சாரகராகவும் அமைச்சர் றிஷாத்தின் ஊது குழலாகவும் தன்னை வடிவமைத்துள்ளமை தெளிவாக புரிந்துள்ளதாக அங்குள்ள செய்திகள் கூறுகின்றன.

அமைச்சர் பைசர் முஸ்தாபா குறித்த விடயத்திற்கு பொறுப்பான  அமைச்சராவார். இருந்தாலும் சபை பிரிப்பு தொடர்பில்  அவர்க்கு தனியாக தீர்மானங்கள் எதுவும் எடுக்க முடியாது. உள்ளூராட்சி மன்றங்களின் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களை இணைப்பதற்கும் அல்லது பிரிப்பதற்க்கும் பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கவேண்டும். அந்த பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற வேண்டும். ஆனால் இவைகளின் அடிப்படை தெரியாமல் எதோ நினைத்தால் சாய்ந்தமருத்துக்கு உள்ளூராட்சி மன்றத்தினை வழங்கிட முடியும் என்ற பசப்பான வார்த்தைகளை சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு வந்துள்ளார். இது விடையதானங்களில் அவரது அறிவீனத்தை மிகத்தெளிவாக காட்டுகின்றதாக மக்கள் கூறுகின்றனர். 

இறைவன் மீது சாத்தியமிட்டு (வல்லாஹி) சாய்ந்தமருத்துக்கு தனியான பிரதேச சபை தருவேன் என்று எந்த நம்பிக்கையில் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்? அவருக்கு அந்த சக்தி இருக்குமானால் இத்தனை நாளும் ஏன் அவரினால் அது வழங்கப்படவில்லை எனும் நியாயமான கேள்விகளுக்கு அவரிடம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் இல்லை. எனவே ஏற்கனவே எறிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கும் வண்ணம் நடந்து கொண்டதோடு இரண்டு கிராமத்து மக்களை நிரந்தரமான பகையாளிகளாக மாற்றுகின்ற வேலையை செய்து முடித்துள்ளார் பைசர் முஸ்தபா.

சாய்ந்தமருது மக்கள் ஏன் இவ்வாறான பொய்யான அல்லது ஆளுமையற்றவர்களை நம்புகின்றார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும். பள்ளிவாசல் நிருவாக்கத்தினர் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்க்கு ஆதரவானவர்கள்  என்று தெரிந்திருந்தும் அவர்களால் சுயேட்சைக் குழுவில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளர்கள் என்று தெரிந்தும், இந்த எல்லாப்பிரச்சினைகளினதும் பின்புலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்தும் வேலைத்திட்டங்களே இடம்பெறுகின்றன என்பது வெளிப்படையாக தெரிந்திருந்தும், இதற்கான பல்வேறு திட்டமிடல்களை ரிஷாத் பதியுதீன்,பைசர் முஸ்தபா, ஜெமீல் குழுவினர் நாளாந்தம் செய்துவருவது நிரூபணமாகியுள்ள நிலையிலும்  தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் சண்டித்தனம் காட்டிக்கொண்டும்,முறுக்கிக்கொண்டும் திரிவதானது எதிர்காலத்தில் சாய்ந்தமருது மக்கள் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படும் சாத்தியம் நிறையவே இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரசை அழிப்பதாக நினைத்துக்கொண்டு ஒற்றுமையான இரண்டு கிராமங்களை கூறுபோட்டு அவர்களை நிரந்தரமான பகைவர்களாக மாற்றிய பெருமை  அமைச்சர் ரிஷாத் குழுவுக்கே சேரும்,  இந்த அருவருக்கத்தக்க விடயத்தின் பங்குதாரராக  இப்போது அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இணைந்திருப்பதானது அவரின் நடுநிலைத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது. 

கடந்தமுறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபையை தனியாக ஆட்சி செய்தது. அதிகமான முஸ்லிம் கிராமங்கள் இதன்மூலம் அதன் பலனை அனுபவித்தனர். ஆனால் இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தனித்து கல்முனை மாநகர சபையில் ஆட்சியை அமைக்க முடியுமா என்றால் அது வாக்காளர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது. வரட்டுப்பிடிவாதத்தினால் வெறும் அற்ப சலுகைக்காக காலாதிகாலமாக  முஸ்லீம்கள்   ஆண்டுவந்த  கல்முனை மண்ணை தாரைவார்த்துக்கொடுக்கின்ற விடயத்தை இதன் மூலம் அமைச்சர் ரிஷாத் செய்ய முயட்சி செய்கின்றார்.

கல்முனை மாநகர சபையானது 23 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் ஒருவட்டாரம் இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும். எனவே தேர்தலின் மூலம் 24 அங்கத்தவர்கள் கல்முனை மாநகர சபைக்கு தொகுதிகளை வெற்றிகொள்வதன் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். பட்டியலின் மூலம் 14 பேர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதில் இரட்டை அங்கத்தவர் தொகுதி உட்பட 15 தொகுதிகளில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பட்டியலின் மூலம் குறைந்தது 5 ஆசனங்கள் கிடைக்குமாக இருந்தால் இலகுவில் 21 ஆசனங்களை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது ஆட்சி அமைக்கும் வல்லமையை பெறும். இதற்க்கு மாற்றமாக சில தொகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடையுமானால் மொத்த ஆசன எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் அதாவது 21 ஆசனங்கள் எனும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான அளவிலான ஆசனங்கள் குறையும் போது தமிழ் கூட்டமைப்பினரோடு இணைந்து கல்முனை மாநகர சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் அமைக்க நேரிடும். இதன்மூலம் சாய்ந்தமருதில் ஆறுதொகுதிகளையும் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றாலும் ஒருநாளும் அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்க முடியாது. அவர்கள் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரைக்கும் எதிர் காட்சியில்தான் இருக்க வேண்டும் . இந்த கையறு நிலை சாய்ந்தமருத்துக்கு தேவையா என்பதனை அம்மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

கல்முனை மாநகர சபையை ஆளும் கனவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிதப்பதாக தெரிகிறது. சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியது போல கல்முனைக்குடி,மருதமுனை, நட்பிட்டிமுனை மக்களை ஏமாற்ற முடியாது என்பதாக அரசியல் ரீதியாக கருத்து சொல்பவர்கள் கூறுகின்றார்கள். சாய்ந்தமருதுவிலும் ஆறுவட்டாரங்களில் நாலு வட்டாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் ஏனெனில் முஸ்லிம் காங்கிரசை அழிக்க நினையாகின்ற வெளிச்சக்திகள் தொடர்பில் பெரும்பாலான மக்கள் இப்போது அறிந்தே வைத்துள்ளனர்.எனவே சுயேற்சைக்குழுவுக்கு முன்னர் இருந்த மவுசு இப்போது குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் சீர்தூக்கி பார்க்கும் போது தேர்தலின் போது மக்கள் முற்றுமுழுதாக இந்த மாயையில் இருந்து வெளியேறும் சாத்தியப்பாடுகள் அதிகமாக இருக்கிறது. அது சாய்ந்தமருதில் ஆறு வட்டாரங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்று அவர்களுக்கு உரிய மாநகர மேயரை கௌரவமாக பெற்றுக்கொள்ள வழிசமைப்பதோடு, தனியான உள்ளூராட்சி சபையினை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு இலகுவான பாதையினை துளம்பரமாக்கும்.