– கஹட்டோவிட்ட ரிஹ்மி –
அத்தனகல்ல பிரதேச சபை தேர்தல் 2018 இற்கான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் அஸாம் பாஸ் அவர்களது பிரச்சார அலுவலகம் நேற்றைய தினம் (19) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப தலைவரும், முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், உயர் பீட உறுப்பினர்களான அல் ஹாஜ் ஜவ்ஸி மற்றும் நாஸிக் அவர்களுடன் வேட்பாளர்கள் சிலரும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசினால் அண்மைக் காலத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நடந்து முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டன.
அத்துடன் கௌரவ ஷபீக் ரஜாப்தீன் அவர்களால் கம்பஹா, அத்தனகல்ல நீர் வழங்கல் திட்டம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. 23,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் 2019 இறுதியில் முடிவடையும். இதன் மூலம் கல் எளிய, கஹட்டோவிட்ட, அத்தனகல்ல, மினுவாங்கொட, பஸ்யால, கட்டான உள்ளடங்களான பல பிரதேசங்களுக்கு நீர் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.