A+ A-

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கஹட்டோவிட்டவில் ஆற்றிய உரையின் தொகுப்பு.

சென்ற 21 ஆம் திகதி அத்தனகல்ல பிரதேச சபைக்காக ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் , கஹட்டோவிட்ட வட்டாரத்தில் (வட்டார இலக்கம் 24) போட்டியிடும் ருஷ்தி ஹாஜியாரினை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் ஜனாதிபதியும், கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு

உங்களுடைய வேட்பாளர் ருஷ்தி ஹாஜியார் அவர்களே! சகோதரர் இக்ரமுல்லா அவர்களே! கௌரவ சஞ்சீவ அவர்களே! ஏனைய பிரமுகர்களே! கஹட்டோவிட்ட வாழ் மக்களே!
தற்போது இரவு 12 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது நீண்ட நேரமாக காத்திருந்து ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

விரிவாக பேச வேண்டிய அவசியமில்லை. அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் ஏனைய பிரமுகர்களால் பல விடயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன.

2015 ஜனவரி மாதம் 8 ஆம் நாள் இந்நாட்டு மக்கள் பாரிய தீர்மானம் ஒன்றை எடுத்தார்கள். அதுதான் ராஜபக்ச யுகத்தை முடிவுக்குக்கொண்டு வந்தது. முஸ்லிம் மக்களின் விசேட ஆதரவுடன் மக்களுக்காக வந்தது இந்த அரசாங்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டு, அவர்களுக்குப் பிரதமர் பதவியை வழங்கி இந்த அரசை அமைத்தது. இன்று மக்கள் பயமின்றி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேச்சுச் சுதந்திரம், தமது சமயத்தை பின்பற்றும் சுதந்திரம், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் சுதந்திரம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்ச காலத்தில் பள்ளிவாசல்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஊழல்வாதிகள் ஆட்சியின் பங்காளிகளாக இருந்தார்கள். ஆனால் எமது ஆட்சியில் ஊழல் ஏற்பட்ட போது அமைச்சர் ஒருவரினது பதவியையே இல்லாமல் செய்தோம். மத்திய வங்கியின் பிணை முறி ஊழலிலேயே இந்த நிலைமை ஏற்பட்டது

ராஜபக்ச காலத்தில் கொள்ளையிடப்பட்ட நிதியினால் ஏற்பட்ட பின்னடைவை ஈடுசெய்து நாம் எமது நாட்டினை கட்டியெழுப்புவோம். அத்தனகல்ல தொகுதியில் சகல வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக அத்தனகல்ல ஓயா குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதன் மூலம் உங்களது சகல வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கும்.

அதே போன்று வெயாங்கொட பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான கலாசார மண்டபம் ஒன்றை அமைத்து வருகிறோம். இது 15 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இடையில் சரண குணவர்தனவினால் நிறுத்தப்பட்டது.

அத்துடன் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெறாத மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுவருவதுடன், அது தகவல் தொழில் நுட்ப கற்கைகளுக்கு மட்டுமான நிறுவனமாக மாற்றப்படவிருக்கிறது. காரணம், தற்போது அத்துறையில் உள்ள பாரியளவு வேலைவாய்ப்புக்களாகும். அதே போன்று பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளன. அதில் பிரதானமான ஒன்று, அத்தனகல்லவில் பாடசாலைகள் 50 இனை முன்னேற்றும் திட்டமாகும். அதில் சிறந்த பாடசாலைகள் 5 இனைத் தெரிவு செய்தோம். அதில் ஒன்று உங்களது ஊர் பாடசாலையாகும். ஏனைய பாடசாலைகள் 45 இனையும் ஒவ்வொரு கட்டமாக அத்திட்டத்தில் உள்வாங்குவோம்.

இங்கு நாங்கள் பல்வேறு பாதைகள் அமைத்தோம். 40 தொழில்களை வழங்கியுள்ளோம். சரண குணவர்தன இருக்கும் போது ஏதாவது தொழில்களை வழங்கினாரா? நான் 7000 தொழில்களை வழங்கியுள்ளேன். ஆனால் ஏதும் செய்யாமல் முன்பு தவிசாளராக இருந்த உபுல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இன்று மீண்டும் உங்களிடம் வாக்குக்கேட்கிறார்கள். நான் அவ்வாறு இருந்திருந்தால் வெட்கத்தில் மறைந்துகொள்வேன். இன்று மறுபடியும் வாக்குக் கேட்கிறார்கள், அதே விடயத்தை செய்வதற்கு. மொட்டிற்கு வாக்களிக்க வேண்டாம். எமக்கு வாக்களித்து சக்தி மிக்க பிரதேச சபை உறுப்பினர்களை சபைக்கு அனுப்புங்கள். உங்களுக்கு சிறந்த அபேட்சகரை வழங்கியிருக்கிறோம் இருக்கிறார். மற்றைய அபேட்சகர்களும் இருக்கிறார்கள். 25 வட்டாரங்கள் இருக்கின்றன.

சிறந்த உறுப்பினர்கள் அமைவதற்கான பொறுப்பினை நான் ஏற்கிறேன். அத்தனகல்ல பிரதேசத்தை முன்னைய காலங்களைப் போன்று கீர்த்தி மிக்க பிரதேசமாக மாற்ற வேண்டும். இங்கு சிறந்த அரசியல்வாதிகள் உருவாகியிருக்கிறார்கள். வெளியில் இருக்கும் சில அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என்னிடம் கூறுகிறார்கள், இறந்த பின் மீண்டும் அத்தனகல்லையில் தான் பிறக்க வேண்டும் என்று அவர்களது பிரதேச மக்கள் கூறுகிறார்களாம். அவ்வளவு பெறுமதியான பிரதேசம் இது.

இறுதியில், ராஜபக்ச யுகத்தில் இதனை கப்பத்திற்கு பெயர் போன பிரதேசமாக மாற்றினார்கள். பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு கப்பம் கொடுக்காமல் வியாபாரம் செய்ய முடியாத நிலை இருந்தது. கொடுக்காவிட்டால் நள்ளிரவின் பின் அவர்களை கொலை செய்து விடும் நிலைமை இருந்தது.

இது போதாதென்று வீதியோரத்தில் ரம்புட்டான் விற்கும் மனிதர்களிடம் வெட்கமில்லாமல் 100 ரூபாய் கப்பம் வாங்கினார்கள். இன்று அவர்கள் மக்களிடம் வந்து தயவு செய்து என்னை பிரதேச சபைக்கு அனுப்புங்கள் என்று கெஞ்சுகின்றனர்.

பஷில் ராஜபக்ச எமது 6 நபர்களை அவர்களது கட்சியில் போட்டு வாக்குகளை உடைக்கப்பார்க்கிறார்கள். திஹா என்.எப்.ஜி.ஜி. என்ற முஸ்லிம் கட்சியில் 33 பேர்களை, எமது வாக்குகளை உடைப்பதற்காக இட்டுள்ளார்கள். இது எமக்கு செய்யப்பட்ட துரோகம்.
இப்பிரதேசத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவேன். (கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு) விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்ட பிறகு சிறுவர்களுக்கான மைதானத்தை அதனுள் அமைப்போம்.


– கஹட்டோவிட்ட ரிஹ்மி –