A+ A-

மக்களை ஏமாற்றும் அரசியல் மந்தைகள் .-மதியுகன்-


அரசியல் வாதிகள் தம்மை அறிவாளிகள் என்றும் மக்களை முட்டாள்கள்  என்றும் நினைத்து கதை சொல்லுகின்ற ஒரு கலாச்சாரம் அண்மைக்காலமாக வேகமாக பரவி வருகின்றது. இந்த பிற்போக்குத்தனமான கலாச்சாரமானது குறிப்பிட்ட அரசியல் வாதிகள் தொடர்பிலான சரியான பதிவையும்  எண்ணங்களை விதைக்க மக்களுக்கு உதவுகிறது எனலாம். பக்கத்தில் பத்து பேர் தமது மாமூலான அரசியல் அடிவருடிகள் இருக்கின்றார்கள் என்கின்ற தற்றுணிவில் அடுக்கடுக்காக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்குவதானது அரசியல் ரீதியாக அனுபம் இல்லாத அடிப்படை அரசியல் ஞானம் இல்லாத ஒரு தன்மை என்பதனை சுட்டமுடியும்.

தொடர்ச்சியாக ஒரே பொய்யை எல்லா மேடைகளிலும் அவிழ்த்து விடுவதானது மக்களை தொடர்ந்தும் முட்டாள்கள் என்று எடைபோட்டதன் பின்புலமே ஆகும். ஆனால் தாம் சொல்லுகின்ற பொய்களுக்காக பார்வையாளர்கள் மத்தியில் எழுகின்ற கரகோசத்தை காரணமாக வைத்து தம்மை மக்கள் நம்பிவிட்டார்கள் என்று நினைப்பதானது முட்டாள் தனத்தின் உயர்ந்த நிலையாகும். சரி இனி விடயத்திற்கு வருவோம் பொதுமக்களை ஏமாற்றும் இந்த அரசியல் வித்தைகளை கையாள்கின்றவர்கள் யார்? இவர்களின் உள்நோக்கம் என்ன? மக்கள் தமது பொய்யான கருத்துக்களை அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவற்றவர்களா? எனும் பல கேள்விகளை இந்த அரசியல் சூனியங்கள் தம்மை தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு இணைப்புக்கு ஆதரவளிப்பதாகவும், புதிய தீர்வுத்திட்டத்தை ஆதரித்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்வதாகவும், முஸ்லிம்களின் காணிகள் விடயத்தில் பாராமுகமாக இருப்பதாகவும், தலைகளை வைத்து அரசுடன் பேரம்பேசி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அண்மையில் அமைச்சர் கிழக்கு மாகாண தமது பிரச்சார மேடைகளில் கூறிவருகின்றார். ஒரு அரசியல் வாதிக்கு பலமே தனது பொய்களைக்கொண்டு மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதாகும். இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னணியில் திகழ்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பொதுப்படையாக சிந்திக்கின்ற அரசியல் கட்சி சாராத பொதுமகனுக்கு இந்தவிடயங்கள் மிகத்தெளிவாக புரிகின்ற விடயம்தான். அதுதான் அமைச்சர் றிஷாட்டின் பொய்கள்.  
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறந்த அல்லது மறந்து போல சொல்லுகின்ற சிலவிடயங்களை இங்கே ஞாபகப்படுத்துவது அவரது ஞாபகசக்தியை மீட்டுக்கொள்ள உதவியாக இருக்கும். கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 2012 ஆம் ஆண்டு புதிய உள்ளூராட்சி முறையை அறிமுகம் செய்தபோது அமைச்சர் ரிஷாட் அதற்க்கு பூரண ஆதரவினை வழங்கினார். அவ்வாறே அதே ஆண்டு முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்கள் வில்பத்து வனப்பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட போது அவற்றை பற்றி ஒருவார்த்தையேனும் அப்போது அமைச்சர் ரிஷாட் பேசவில்லை, 2017 ஆம் ஆண்டு புதிய எல்லை நிர்ணயமானது முஸ்லிம்களுக்கு பாதகம் என்று கூறும் அமைச்சர் ரிஷாட் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு தனதும் தனது கட்சி சார்ந்த மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒப்புதலை வழங்கி விட்டு இப்போது அமைச்சர் ஹக்கீம் ஆதரவு அளித்தமையினால் தான் நானும் அதற்க்கு ஆதரவு அளித்தேன் என்று புலம்புவது எந்தவகையில் நியாயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்கள் மத்தியில் விளக்கம் தரவேண்டும். 
குறிப்பாக இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வருகின்ற பிரேரணைகளை அதன் பாதகங்களை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக ஆதரவு அளித்த ஒரே ஒரு கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டுமே என்பது அரசியல் வரலாற்று ஆய்வாளர்களின் மேலான கருத்தாகும்.அரசியல் அமைப்புக்கான ஆலோசனைக் குழுவில் அமைச்சர் றிஷாத்தும் அங்கத்தவர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியல் ரீதியான திட்டங்களை எதிர்க்காமல் மவுனமாக இருந்து விட்டு இப்போது இதன் பழிபாவங்களை இன்னொருவர் மீது பலவந்தமாக திணிக்க முனைவதில்லை அர்த்தமில்லை. 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர் ஹக்கீம் பணம் வாங்கினார் என்று மேடைகளில் பகிரங்கமாக கூறும்  அமைச்சர் ரிஷாட் , அதே தேர்தலில் அமைச்சர் ரிஷாட் மைத்திரி அணியில் இணைய 50 மில்லியன் ரூபாய் வாங்கியதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுபைர் தொடர்ச்சியாக கூறிவருகின்றார். கடந்த 12.02.2016  சுடர் ஒளி பத்திரிகை இதனை பிரசுரித்திருந்ததோடு இன்னும் சில பத்திரிகைகளிலும் அநேகமான இணைய நாளிதழ்களிலும் இச்செய்தி  வெளியாகின. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை எப்போதும் எங்கேயும் மறுத்ததும் இல்லை மாகாண சபை உறுப்பினர் சுபைர் மீது எந்த நடவடிக்கையும் சட்ட ரீதியாக எடுக்கவும் இல்லை எனவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டினை முன்வைக்கும் ரிஷாட் பதியுதீன் முதலில் தன்மீதான குற்றச்சாட்டிலிருந்து வெளியேற வேண்டும். அப்படியில்லாமல் எப்போதும் அமைச்சர் ஹக்கீமின் மீதான இந்த வசைபாடலால் றிஷாதினால் எதனையும் சாதிக்க முடியாது. 

அமைச்சர் ஹக்கீமையும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அழித்து இல்லாமல் ஆக்குகின்ற முயற்சிகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முழுமையாக இறங்கியுள்ளமையும் கட்சியில் சிலரை பணம் கொடுத்தும் பதவி கொடுத்தும் வாங்கி முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான செயற்பாட்டாளர்களாக அவர்களை இயக்கிவருவதும் இவரின் தொடரான நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிவருவதாக மக்கள் கூறுகின்றனர். குமாரி குரே என்ற பெண்ணை வைத்து அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக செயற்பட்ட மங்கள -ரிஷாட் கூட்டணி தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகையாளர் லசந்தவின் நேர்காணல் மற்றும் பத்தி எழுத்து என்பன மக்கள் மத்தியில் ரிஷாத் பதியுதீன் எனும் தனிமனிதனின் பலவீனத்தை சரியாக படம்பிடித்து காட்டியது. அமைச்சர் ஹக்கீமின் மீதான காழ்ப்புணர்வின் பலனாகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது என்பதும் மக்களுக்கு வெளிச்சமான செய்தியாகும்.

அமைச்சர் ஹக்கீமுக்கு எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது, அவரது ஆளுமை கல்விப்புலமை தற்போதுள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் கிடையாது என்பது பொதுவான அபிப்பிராயம் ஆகும். இதனை மெய்ப்படுத்தும் பல ஆதாரங்களை அரசியல் ரீதியான பலநகர்வுகளில் ஹக்கீம் நிரூபித்துள்ளார். ஆனால் அமைச்சர் ரிஷாதுக்கு பக்கம் பக்கமாக இருப்பது பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களே, முசலியில் காணி அபகரிப்பு குற்றச்சாட்டு, இறக்குமதி செய்கின்ற பொருட்களில் கொமிசன் பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டு, நீதிமன்றத்திற்கு கல் இருந்ததாகவும் நீதிபதியை தொலைபேசியில் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு, அவரது சகோதரர்கள் கடத்தலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு இப்படி பலநூறு குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தநிலையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிக்கை விட்டுள்ளார் ஜனாதிபதியின் வாள் நேராக செயட்படுமானால் அதில் ரிஷாட் பதியுதீனும் அகப்படுவார் என்று. இதிலிருந்து அமைச்சர் ரிஷாட் குற்றமுள்ளவராகவே மக்கள் மன்றத்தில் கணிக்கப்படுகிறார்.

தன்மீதுள்ள குற்றங்களை மறைக்க பிரபல்யம் வாய்ந்த ஒருவர் மீது சேற்றினை அள்ளிப்பூசுவது நல்ல அரசியல் நடவடிக்கையாகாது. ஆனால் இந்த அழுக்கான செயலைத்தான் அமைச்சர் ரிஷாத் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்துவருகிறது. எப்போதெல்லாம் தேர்தல் வருகின்றதோ அப்போது பொதுபலசேனா விழித்து எழும்பிவிடும் அவர்கள் முற்றுமுழுதாக ஏசுவதும்,தாக்குவதும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மட்டும் தான். அவர்கள் ஒருபுறம் றிசாத்தை வசைபாட வவுனியா பிரதேசத்திலுள்ள விகாராதிபதி அவர்களுக்கெதிராகவும் அமைச்சர் றிஷாத்திற்கு ஆதரவாகவும் பேசத்தொடங்குவார். இது தேர்தல் காலங்களில் வாடிக்கையாகிவிட்ட செய்தியாகும். இதன் பின்னணி என்ன என்று நோக்கும் பொது தான் சில ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

பொதுபல சேனா அமைப்புக்கும் ஆசாத் சாலிக்கும் இடையில் ரகசியமான தொடர்பு உள்ளதாக நம்பப்படுகின்றது, அதாவது ஆசாத் சாலியின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகின்ற கூலிப்படையாக பொதுபல சேனா அமைப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகின்றது. அவ்வாறே ஆசாத் சாலிக்கும் அமைச்சர் ரிஷாதுக்குமான தொடர்பானது வெளிப்படையான ஒன்றாகும் எனவே அமைச்சர் ரிஷாட் பதியுதீனை முஸ்லிம்கள் மத்தியில் கதாநாயகனாக சித்தரிக்க எடுக்கின்ற சினிமாத்தனமான முயற்சியாகவே இதை பார்க்க முடிவதாக பேசப்படுகின்றது. மக்கள் எண்ணங்களில் உதித்த இந்த சந்தேகம் முற்றிலும் உண்மையாக இருக்கலாம் ஏனென்றால் இதுவரை காலமும் அமைதிகாத்து இனிமேல் முஸ்லிம்களின் காணிவிடயத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிய பொதுபல சேனா தேர்தல் அறிவித்தவுடன் அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட தொடங்கி விட்டன. எனவே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொதுபல சேனா ஆசாத் சாலி கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மன்றத்தில் அதிருப்தியே நிலவுகின்றது.
எனக்கு தலைமை ஆசை இல்லை என வீராப்புடன் கூறும் அமைச்சர் ரிஷாட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளரை அவர்களின் கூட்டமைப்புக்கு தலைவராக நியமித்துள்ளதாக கூறுகிறார். உண்மைதான் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மயில் சின்னத்தை பிரபல்யப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட கூட்டமைப்பில் கௌரவமாக இருந்த ஹசன் அலி அவர்களை டம்மி தலைவராக அமரவைத்து சின்னம் பிரபல்யப்படுத்தப்படுகிறது. இது  தன்னால் கடக்க முடியாத தடைகளை மாட்டுவண்டியில் ஏற்றியாவது கடக்க முயற்சிக்கும் ஒரு வகையான அரசியல் தந்திரமாகும். இந்த தந்திரமானது மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் என சொல்ல முடியாது. மரணம் வரைக்கும் மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டே இருப்பேன் எனக்கூறிய ஹசன் அலி இப்போது மயிலைகட்டிப்பிடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ளார்.இது ஹசன் அலிக்கு எஞ்சியிருந்த மத்திப்பையும் இல்லாமல் ஆக்கியுள்ளது எனலாம்.
திருகோணமலையில்  அப்துல்லாஹ் மஹ்ரூப் ,  சட்டத்தரணி ஹில்மி ஆகியோருக்கிடையிலான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அப்துல்லாஹ் மஹ்ரூப் தமது நெருக்கமான உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதோடு சட்டத்தரணி ஹில்மியின் கருத்துக்களுக்கோ அல்லது அவர் பிரேரித்தவர்களுக்கோ எந்தவிதமான முன்னுரிமையும் கொடுக்கவில்லை இதன் மூலம் ஹில்மிக்கு சார்பானவர்கள் மனக்கசப்புடன் உள்ளார்கள். உண்மையில் அப்துல்லாஹ் மஹ்ரூபை விடவும் சட்டத்தரணி ஹில்மிக்கு கிண்ணியாவில்  குறிப்பிட்ட சில வட்டாரங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இந்த முறுகல் நிலையினால் அப்துல்லாஹ் மஹ்ரூபின் குடும்ப அரசியலுக்கான அஸ்தமனம் இத்தேர்தலில் நிரூபிக்கப்படலாம்.  
யானைக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற றிசாத் பதியுதீனுடைய வாதமானது நகைமுரணானதாகும். இருந்தும் மக்கள் அவர் சொல்வதுபோன்றும் கேட்கத்தான்  வேண்டும் வன்னியிலும், புத்தளத்திலும், மட்டக்களப்பிலும், அனுராதபுரத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பானவர்கள் யானை சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளார்கள் எனவே றிஷாதின் கூற்றுப்படி இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் யானைக்கு வாக்களிக்காமல் இருப்பதன் மூலம்  றிஷாத்தின்  ஆதரவாளர்களுக்கு அவரின் மீதான அபிமானத்தை நிறூபிக்க கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். தம்மை சமூக காவலராக காட்டிக்கொள்கின்ற இவ்வாறானவர்களின் இரட்டைமுகம் இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது எனலாம்.
யானைக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லுகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் முடிந்தால் எதிர்வரும் காலங்களில் தமது மயில் சின்னத்தில் போட்டியிட்டு காட்டவேண்டும். ஏனெனில் இவர்கள் இருவருமே கடந்த பாராளுமன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவர்களே ஆனால் அமைச்சர் ஹக்கீம் தனது கட்சியின் சின்னமான மரச்சினத்தில் கண்டியில்,அம்பாறையில்,திருகோணமலையில் என்று தனித்து களமிறங்கி தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டினார். மக்களை ஏமாற்றும் இந்த அரசியல் மந்தைகளை மக்கள் புறக்கணிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது .