A+ A-

சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே: பாலமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்தங்களது அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்காக தவிசாளர் சங்கத்தை ஆரம்பித்தவர் இப்போது போய்ச் சேர்ந்திருக்கின்ற முகாமைமை பார்க்கின்றபோது அவர்களின் உண்மைமுகம் சரியாகத் தெரிகின்றது. மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று இவர்கள் பேசுவதின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவுமில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

கட்சியிலிருந்து பிரிந்துசென்று மயில் கட்சியில் தஞ்சமடைந்தவர்கள், அவர்களது தேர்தல் பிரசாரங்களில் என்னை நோக்கி சில கேள்விகளைத் தொடுத்துள்ளனர். அவற்றுக்கு நான் பதிலளித்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதற்காக, கூட்டத்தை குழப்பும் நோக்கில் கலவரங்களை ஏற்படுத்துகின்றனர். மின்சாரத்தை துண்டிக்கின்றனர். இவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துதான், பாலமுனையில் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற தேவையில்லை என்பதற்கு இங்கு திரண்டுவந்துள்ள ஆதரவாளர்களே சான்றுபகர்கின்றனர்.

பதவிகள் நிரந்தரமாக இருக்கவேண்டும். அதைவிட ஒருபடி மேலே செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது கிடைக்காது என்று தெரிகின்றபோது, தலைமையை தூசித்துக்கொண்டு கட்சிக்கு வெளியே நின்று தலைமை விரட்டுவோம் என்று கோசமிடுகின்றனர். இப்படியானவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தற்போது தஞ்சமடைந்திருக்கும் முகாம் எதுவென்பதை பார்க்கும்போது, இவர்களின் உண்மைமுகம் இப்போது தெரிகின்றது.

வட-கிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அதற்காக இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், புலம்பெயர் அமைப்புகளிடம் நிதிகளை பெற்றுக்கொண்டதாகவும் மிகப்பெரிய அபாண்டங்களை சுமத்துகின்றனர். புலம்பெயர் அமைப்புகளிடம் பணம் வாங்கியிருந்தால், வட-கிழக்கை இணைக்கக்கூடாது என்றுதான் நாங்கள் சொல்லவேண்டும். ஏனென்றால், புலம்பெயர் மக்கள் தங்களது இருப்புக்காக நாட்டில் பிரச்சினைகள் இருக்கவேண்டும் என்றதொரு சூழலையே எதிர்பார்க்கின்றனர்.

தெற்கிலுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகள் போன்று நாங்களும் தமிழர்களின் அபிலாசைகளில் மண்ணை அள்ளிப்போடவேண்டிய அவசியமில்லை. தற்போது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு விடயத்துக்காக, தமிழர்களின் ஏகாபித்த கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில்லை தேவையில்லாத விரிசலை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை.

இவ்வாறான எங்களது போக்கு தமிழ்த் தேசியத்துக்கு முழுமையான ஆதரவை கொடுத்துவிட்டதாக பொருள்படமாட்டாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இதனைச் சொல்கிறது. முஸ்லிம்களின் அனுமதியில்லாமல் ஒருபோதும் வட-கிழக்கு இணைக்கப்படாது என்று தெளிவாக சொல்கின்றனர். இதேநேரம் முஸ்லிம்களுக்கான தனி மாகாண கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை. புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் எங்களுடைய கோரிக்கையாக கரையோர மாவட்டம் சேர்க்கப்பட்ட விடயம் தெரியாமல் அதனையும் விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர். 

புதிய அரசியலமைப்பில் வட-கிழக்கு இணைப்பை எழுதிக்கொடுத்துவிட்டதாக இவர்கள் பேசித்திரிகின்றனர். இந்த இணைப்பில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் குறித்து நாங்கள் தமிழ்த் தரப்புடன் பேசியிருக்கிறோம், இப்போதும் பேசிவருகிறோம், இனியும் பேசுவோம். ஆனால், இவையெல்லாம் ஒரேநேரத்தில் போட்டுடைக்கப்படவேண்டும் என்ற இந்த வேண்டுகோள் அபத்தமானது. கட்சி இதே கொள்கையுடன்தான் அப்போதும் இருந்தது. கட்சிக்குள் இருந்துகொண்டு அப்போது மெளனம் காத்தவர்கள், இன்று வெளியில் இருந்துகொண்டு இதை விமர்சிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் தலைவர் எடுக்கின்ற முடிவுக்காக பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதாக இன்னுமொரு அபாண்டத்தை சொல்கின்றனர். சிறிகொத்தாவின் தேவைக்காக ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் பணம்‌ வாங்கியதாக குற்றம்சுமத்தினார்கள். அப்படிச் சொன்னவர்கள் இப்போது ஐ.தே.க. அமைச்சர்களாக இருக்கின்றனர். சிறமாவோ பண்டாரநாயக்க பணம் வாங்கியதாக சொன்னார்கள்.

இடதுசாரிக் கட்சிகளுக்கு கம்யூனிச நாடுகள் பணம் கொடுத்த கதையைத்தான் இவர்கள் நீண்டகாலமாக பேசிவருகின்றனர். கட்சித் தலைமைகளுக்கு அந்த நாடு காசுகொடுத்தது, இந்த நாடு காசுகொடுத்தது என்று சொல்லிவரும் குற்றச்சாட்டைத்தான் இப்போது என்னிடமும் சொல்கிறார்கள். ஆனால், சிலநேரம் கட்சியைப் பிரிப்பதற்காக சில உளவுப்பிரிவுகள் பணம்கொடுக்கின்றன. அதை மறுதலிப்பதற்காக நாங்கள் பணம்வாங்கியதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

மறைந்த தலைவர் அஷ்ரஃப், இந்திய அமைதிப்படையிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக சொன்னார்கள். கட்சிக்குள் இருந்துகொண்டே கிசுகிசுத்துப் பேசினார்கள். அவரின் அமைச்சின் பதவிகளில் இருந்துகொண்டே அவதூறுகளை சொன்னார்கள். இதுதவிர, மறைந்த தலைவரின் குடும்ப பிரச்சினைகளைக்கூட குஷியாக கதைப்பதில் அவர்களுக்கு ஆனந்தம். இதையெல்லாம் கேட்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன். தாருஸ்ஸலாம் கட்டிடத்தை அமைப்பதற்கு தலைவர் கோடிக்கணக்கான பணத்தை தலைவர் அஷ்ரஃப் செலவழித்தார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று கேட்பதற்க யாரும் தலைப்படவில்லை. 

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் கட்சியலிருந்த சிலர் தவிசாளர் சங்கம் என்ற அமைப்பை அமைத்தனர். இது கட்சியின் நலன்கருதி அமைக்கப்படவில்லை. மாறாக மாகாணசபை, பாராளுமன்றம் என்று அடுத்தடுத்த பதவிகளுக்கு செல்வதற்காகவே இதை ஆரம்பித்தனர். தங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு சவாலாக இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இவர்களின் பிரதான செயற்பாடாக இருந்தது. தனக்கான சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் தலைமைக்க அழுத்தம் கொடுப்பது, இல்லாவிட்டால் எல்லோரும் கட்சியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானித்திருந்தனர்.

இந்த தவிசாளர் சங்கத்திலிருந்த சிலர் இது ஆபத்து என்று விலகிக்கொண்டர். எஞ்சியிருந்த இருவர்தான் தற்போது வெளியேறிச் சென்றுள்ளனர். இவர்கள் வெளியில் இருந்துகொண்டு மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று பேசுவதின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவும் அல்ல. மற்றவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை கொண்டுவந்தால் நாங்கள் கட்டாயம் விசாரிப்போம். ஆனால், மற்றவர்கள் மீது அபாண்டங்களை சுமத்தி தன்னை நியாயப்படுத்தவதையே அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.

கல்முனையில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இளைஞர் விவகார திணைக்களம் போன்றவற்றை மீண்டும் கொண்டுவருவதற்கு பல நடவடிக்கைகளை நாங்கள் செய்திருக்கிறோம். அதற்கான காணிகளை பெற்றிருக்கிறோம். அமைச்சரின் அனுமதியைப் பெற்றிருக்கிறோம். வாடகை கட்டிடங்களில் இயங்கிவந்த அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்களை அமைப்பதற்கு அமைச்சர்களின் அனுதியை பெற்றிருக்கிறோம். விரைவில் நாங்கள் அவற்றை செய்துதருவோம்.

ஒலுவில் துறைமுகத்தில் மண்சேர்வது பெரியதொரு பிரச்சினையாக உள்ளது. 50 மில்லியன் ரூபா செலவில் ஒரு கப்பலை கொண்டுவந்து 40 நாட்கள் கரையிலுள்ள மண்ணை அள்ளிக்கொண்டு நடுக்கடலில் போட்டோம். ஆனால், இயற்கைக்கு எதிராக எங்களுடன் போராடமுடியவில்லை. கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள நீர்முறிப்பான் முழுக்க முழுக்க மாற்றமாக செய்யப்பட்டுள்ளது. அதை திருத்துவதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது.

சிலர் என்னிடம் வந்து கபடமாக கையொப்பம் வாங்கி, ஒலுவில் காணிகளை மாற்றி எழுதியதாக சொன்னார்கள். உடனே நான், அமைச்சரின் சென்று சம்பந்தப்பட்ட காணி அனுமதிப்பத்திரத்தை ரத்துச்செய்து, 23 ஏக்கர் காணியையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளோம். அவற்றை பொதுத் தேவைகளுக்காக ஒதுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சின்னப் பாலமுனை காணி உறுதிகளை செய்தருமாறு கோரிக்கை வந்தபோது, ஒரு வாரத்துக்குள் நாங்கள் அவற்றை செய்துகொடுத்தோம். இதைசெய்ததன் மூலம், ஊர் பிரச்சினைகளில் தலைவர் நேரடியாக தலையிட்டு தீர்க்கமுயல்கிறார் என்பது அவருக்கு புரிந்துவிட்டது. ஊரிலுள்ள பிரச்சினைகளை என்னிடம்கொண்டுவந்து தீர்த்துதருமாறு கோராத இவர்கள், பொறாமையினால் இப்படி பழிசொல்லிக்கொண்டு திரிகின்றனர்.

பிரிந்துபோனதை நியாயப்படுத்துவதற்கு போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்த கட்சியை அழிப்பதற்கு இவர்கள் எடுக்கின்ற முயற்சிக்கு போராளிகள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இருகரமேந்தி, நோன்புநோற்று கட்சியை வளர்த்த தாய்மார்கள் என்னிடம் அவர்களது ஆதங்கங்களை கொட்டினார்கள். கட்சியை அழிப்பதற்கு என்னதான் முயற்சிகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறிடியத்து, முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றும் என்றார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எம்.எச்.எம். சல்மான், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத், பாலமுனை அமைப்பாளர் அலியார், முன்னாள் மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.