A+ A-

புதிய தேர்தல் முறைமையில் ஆசனப்பகிர்வும் சிறிய கட்சிகளின் பேரம் பேசலும்.




நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது புதிய முறையிலான கலப்புத் தேர்தலாக நடைபெறவுள்ளது. இதுவரைகாலமும் இருந்த விகிதாசார முறைமைக்குப் பதில் வட்டாரமும் விகிதாசாரமும் 60:40 என்ற விகிதத்தில் ஆசனப்பகிர்வு செய்யப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த தேர்தல் முறைமை தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவின்மை இருந்து வந்தது. தற்போதும் அந்த நிலைமை இருந்தாலும் வட்டார முறைமையில் வாக்காளர்களுக்கு ஓரளவு தெளிவு இருப்பதோடு, விகிதாசார முறைமையில் மயக்கநிலை அவர்களிடம் தொடர்வதினை அவதானிக்க முடியுமாகவிருக்கிறது.

அதனை இலகுவாக விளக்குவதற்கு நான் அத்தனகல்ல பிரதேச சபையினை உதாணத்திற்கு எடுத்துக்கொள்கிறேன். அங்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அண்ணளவாக 150 000 எனக்கொள்வோம். அங்குள்ள மொத்த பிரதேச சபை ஆசனங்கள் 50 பேர் ஆவர். 60:40 என்ற முறைப்படி 30 ஆசனங்கள் வட்டாரமுறைப்படியும் 20 ஆசனங்கள் விகிதாசாரப்படியும் பகிரப்படும். 

தேர்தலின் போது இங்கு 121 000 வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், 1000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கருதுவோம். அதன்படி இங்கு 120 000 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாகக் கொள்ளப்படும். 

விகிதாசார கணிப்பீட்டிற்கு முன்னர் கட்சிகள் வட்டாரங்கள் மூலம் பெற்ற ஆசனங்களைப் பார்ப்போம். இங்கு 25 வட்டாரங்கள் உள்ளன. அதில் 5 வட்டாரங்கள் இரட்டை அங்கத்தவர்கள் வட்டாரங்களாகும். 

இங்கு A,B,C,D,E,F,G ஆகிய 7 கட்சிகளும் சுயேட்சைக் குழுவும் போட்டியிடுவதாக கருதுவோம்.

கட்சி  A - பத்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் 2 இரட்டை அங்கத்தவர் வட்டாரங்களாகும். எனவே கட்சி  A 12 ஆசனங்களைப் பெற்றுக் கொள்கிறது.

கட்சி  B -  எட்டு இடங்களைக் கைப்பற்றியது. அதில் 2 இரட்டை அங்கத்தவர் இடங்களாகும். எனவே கட்சி B 10 ஆசனங்களைப் பெற்றுக் கொள்கிறது.

 கட்சி C - மூன்று இடங்களைக் கைப்பற்றியது. அதில் 1 இரட்டை அங்கத்தவர் இடமாகும். எனவே கட்சி C 4 இடங்களை வெல்கிறது.

கட்சி D - இரண்டு இடங்களைக் கைப்பற்றியது.

கட்சி E - இரண்டு இடங்களைக் கைப்பற்றியது.

கட்சி G - எந்த இடமும் வெல்லவில்லை

சுயேட்சைக்குழு  -  எந்த இடமும் வெல்லவில்லை 

A - 12, B - 10, C - 4, D - 2, E - 2
கட்சி G மற்றும் சுயேற்சை அணி Z என்பன ஆசனங்கள் எதுவும் வெல்லவில்லை..

60 வீதமான ஆசனங்கள் வட்டார முறையில் ஒதுக்கப்பட்டதன் பெறுபேறே மேலுள்ளது. இனிய எஞ்சிய 40 வீதமான ஆசனங்கள் எவ்வாறு பகிரப்படும் என்பதனைப் பார்ப்போமா? (வட்டார முறையில் 30 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 20 ஆசனங்களும் விகிதாசார முறைப்படி ஒதுக்கப்படும்)

செல்லுபடியான வாக்குகள் 120 000 ஆகும்.

மொத்த ஆசன எண்ணிக்கை 50 ஆகும். ஒரு உறுப்பினருக்கான சராசரி வாக்கு 120 000/50 = 2400 ஆகும். 

கட்சிகளின் மொத்தவாக்குகளை (எடுகோளுக்காக) உறுப்பினருக்கான வாக்குகளால் வகுக்க,

A கட்சி - 18 000 / 2400 = 7 ஆசனங்கள் + 1200 எஞ்சிய வாக்குகள்

B கட்சி - 15 000 / 2400 = 6 ஆசனங்கள் + 600 எஞ்சிய வாக்குகள்

C கட்சி - 10 000 / 2400 =  4 ஆசனங்கள் + 400 எஞ்சிய வாக்குகள்

D கட்சி - 5 000 / 2400   =  2 ஆசனங்கள் + 200 எஞ்சிய வாக்குகள்

E கட்சி - 1 700 - ஆசனம் பெறுவதற்கான போதிய வாக்குகளைப் பெறவில்லை

சுயேற்சைக் குழு -  ஆசனம் பெறுவதற்கான போதிய வாக்குகளைப் பெறவில்லை

மேலே பார்க்கும் போது விகிதாசார ரீதியாக ஒதுக்கப்பட வேண்டிய ஆசனங்கள் 20 இல் 19 ஒதுக்கப்பட்டுள்ளன. 1 ஆசனம் எஞ்சியுள்ளது. அதனை அதிகூடிய எஞ்சிய வாக்குகளைப்பெற்றுள்ள கட்சிக்கே வழங்கே வேண்டும். இங்கு  E கட்சி எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை. ஆயினும் ஏனைய கட்சிகளின் எஞ்சியுள்ள வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதால் அந்தக் கட்சி வட்டார முறையில் தோல்வியடைந்திருந்தாலும் ஆசனமொன்றைக் கைப்பற்றுகிறது. 

சுயேற்சைக் குழு வட்டாரத்திலும் வெற்றி பெறவில்லை. விகிதாசார ரீதியிலும் போதிய வாக்குகளைப் பெறாததால் பிரதேச சபை ஆசன வாய்ப்பை இழக்கிறது. 

இங்கு மற்றுமொரு முக்கியமான விடத்தைக் கவனிக்க வேண்டும். பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றுவதாக இருந்தால் அறுதிப்பெரும்பான்மையான ஆசனங்களை ஒரு அணி கைப்பற்ற வேண்டும். அதாவது மொத்த ஆசனங்களான 50 இல் குறைந்தது 26 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இந்நிலையில் எந்தவொரு அணியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத்தவறியுள்ளமையை இங்கு அவதானிக்கலாம். 

அதாவது ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற A கட்சி கூட 10 + 7 = 17  ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. 

B - 8 + 6 = 14 ஆசனங்கள்

C - 4 + 4 = 8 

D - 2 + 2 = 4

E - 2 + 0 = 2

சுயேற்சைக்குழு எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை. இனி தேர்தல்கள் ஆணையகம் பிரதேச சபையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளரை நியமிக்கும் படி கோரும். இந்த இடத்தில் யாரும் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், இரகசிய வாக்கெடுப்பு மூலம் தவிசாளர் மற்றும் பிரதித்தவிசாளர் தெரிவு செய்யப்படுவார். 

புதிய தேர்தல் முறைமையின் கீழ் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களில், எந்தவொரு அணியும் அறுதிப்பெரும்பான்மையை பெற முடியாத நிலைமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதை மேலுள்ள கணிப்பு மூலம் தெளிவாக உணரமுடிகிறது. இந்நிலைமை சிறிய கட்சிகளுக்கான பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கச் செய்யும். குறைந்தது சில சபைகளின் பிரதித் தவிசாளர் பதவியை சிறிய கட்சிகள் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -