அத்தனகல்ல பிரதேச சபைக்கு, வட்டார இலக்கம் 24 கஹட்டோவிட்டவிலிருந்து மணி சின்னம் சார்பாக மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிடும் இன்சாப் அவர்களை ஆதரித்து சென்ற 02 ஆம் திகதி ஓகொடபொல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் தொகுப்பு
நாங்கள் இங்கு வந்தது, பெப்ரவரி 10 நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக கஹட்டோவிட்ட வட்டாரத்திலிருந்து போட்டியிடும் சகோதரர் இன்சாப் அவர்களை அத்தனகல்ல பிரதேச சபைக்கு தெரிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதற்காகும். இங்குள்ளவர்கள் இதற்கு முன்னர் பல்வேறு தேர்தல்களில் வாக்களித்துள்ளவர்கள். அப்படித்தானே? 70 வருட இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்த மக்களுக்கு அரசியல் கசப்பானவொன்றாக மாறியிருக்கிறது. அதாவது, யார் வென்றாலும் ஒன்றுதான் என்ற மனநிலை. காரணம் கொள்ளை, ஏமாற்று அதில் மலிந்திருப்பதனால் ஆகும். ஜனாதிபதி அவர்கள் பதவியேற்கையில், தான் பதவியேற்று 5 வருடங்களில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதாகவும், அதன் பின்னர் ஓய்வு பெறுவதாகவும் சொன்னார்கள். தற்போது கேட்கிறார், தனக்கு இன்னொரு வருடம் இருக்க முடியுமா என்று. பிரதமர் அவர்கள் கள்வர்களைப் பிடிப்பதாக கூறி இன்று அவர்களைப் பாதுகாக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், திருட்டிலும் ஈடுபட்டார்கள். இன்று கொள்ளையர்கள் ஆட்சியாளர்களாகிறார்கள்.
இன்று மைத்திரி, ரணில், மஹிந்த என்று 3 கட்சிகள் உள்ளன. அது 3 கட்சிகள் அல்ல. மூன்றும் ஒன்றுதான். அண்மையில் சுசில் பிரேம ஜயந்த “நாங்கள் வெற்றி பெற்றால், மஹிந்த அணியுடன் இணைந்து ஆட்சியமைப்போம்” என்றார். அப்போது ஏன் பிரிந்து தேர்தல் கேட்க வேண்டும். இவர்கள் கசிப்பும் தண்ணீரும் போன்றவர்கள். இரண்டையும் இரண்டிலும் கலக்கலாம். பதும்கர ஆணைக்குழுவினது 5 மாத நட்டம், 1100 கோடிகள். இந்த அத்தனகல்லை பிரதேச சபையினது வருமானம் 14 கோடிகள். அந்த ஆணைக்குழுவின் நட்டமானது இந்த பிரதேச சபையின் 220 வருட வருமானமாகும். ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் 10 வருட நட்டம், 12 500 கோடிகளாகும். இது அத்தனகல்ல பிரதேச சபையின் 625 வருட வருமானமாகும். இ.போ.ச. இன் நட்டம் 500 கோடிகளாகும். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஓகஸ்டில் வெளியிடப்பட்ட டென்டர் ஒன்று 1400 கோடி நட்டத்தில் முடிந்தது. எமக்கு முன்னால் இருக்கும் பள்ளிவாசலின் பாதையை சீர் செய்ய 10 இலட்சம் ரூபா போதும். ஆனால் அங்கு டென்டர் நட்டம் கோடிகளில் முடிந்துள்ளது. இவை பொதுமக்களாகிய உங்களது பணமாகும்.
பஷில் ராஜபக்ச அவரது சகோதரர் ஜனாதிபதியான பின் அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்தார். இங்கு வியாபாரத்தை தொடங்கினார். மல்வானையில் பங்களா வைத்திருக்கிறார். கம்பஹா ஒருதொட வீதியில் வீடு, மாத்தறை கவுன்சிலில் காணி, அமெரிக்காவில் சிறிய வீடு இருக்கையில் பெரிய வீடு. இவர்களுக்கு வேறு கட்சியாம். அதற்கு “பொஹட்டுவ” என்கிறார்கள். அது பொஹட்டுவ அல்ல, “பாஸ்போட்டுவ”. இவர்கள் மக்களின் பணத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், கொள்ளையடித்தார்கள். அண்மையில் ரணில் வாங்கிய இரு வாகனங்களின் விலை 60 கோடிகள். அதாவது ஒரு வாகனம் இப்பிரதேச சபையின் ஈராண்டு வருமானமாகும். ஜனாதிபதி அவர்கள் பயணிப்பதற்கு இரு ஹெலிகொப்டர்கள் தேவைப்படுகிறது. ஏன்? வானில் செல்லும் போது ஒன்றில் கோளாறால் இன்னொன்றிற்கு மாறுவதற்கா? இல்லை. மக்கள் பணத்தை வீணடிக்கிறார்கள்.
இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் நாம் ஒன்றுபட வேண்டும். எங்களுக்கு சரியான வாழிடம் இல்லை, சிறந்த சுகாதார சேவை இல்லை, சிறந்த கல்வி இல்லை, சிறந்த தொழிலில்லை. ஆனால் இவை அனைத்தும் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. இங்கு இருப்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது ஐதேக, சுக, ஜேவிபி என்ற பேதமல்ல. மாறாக உயர் வகுப்பினர். கீழ் வகுப்பினர் என்ற இரு பிரிவினரே. அவர்கள் உயர் வகுப்பினர். நாம் தாழ் வகுப்பினர்.
பாடசாலையொன்றிலோ, அல்லது வைத்தியசாலையிலோ அல்லது பேரூந்திலோ கட்சி பேதம் பார்த்து யாரும் கவனிக்கப்படுவதில்லை. நாம் கட்சி, இன வேறுபாடுகளை மறந்து மேற்கூறிய உயர் வகுப்பினருக்கு எதிராக ஒன்றுபடுவோம். அவர்களை இந்த வகுப்பினருக்குக் கீழ் கொண்டு வர தீர்வொன்றைப் பெறவேண்டும். இனவாதங்களை நாம் வளர்க்கக்கூடாது. வடக்கில் தமிழ் கீழ் வகுப்பினருக்கு இனவாதம் ஊட்டப்பட்டது. தெற்கில்; சிங்கள கீழ் வகுப்பினருக்கு இனவாதம் ஊட்டப்பட்டது. கடைசியில் மாபெரும் யுத்தம் மூண்டது. கடைசியில் இறந்தது மேல் வகுப்பினரின் பிள்ளைகளா? இல்லை. அனைவரும் கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அங்கு சம்பந்தனினதும், சேனாதிராஜாவினதும் பிள்ளைகள் இறக்கவில்லை. இங்கு சந்திரிக்காவினதும், மஹிந்தவினதும் பிள்ளைகள் இறக்கவில்லை. அவர்களது பலம் என்றும் இருப்பது இனவாதத்திலாகும்.
இனவாதத்திற்கு எதிராக தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகள் உள்ளன. அவர்களுக்கு விரும்பிய மொழியில் கல்வி கற்கலாம். தமிழ் மொழியில் நீங்கள் ஒரு கடிதம் எழுதி நிட்டம்புவ பிரதேச செயலகத்திற்கு அனுப்பினால் பதில் எப்படி வரும்? பெரும்பாலும் வராது. வந்தாலும் தமிழில் வராது. பொலிசிலும் அதே பிரச்சினை. இரு மொழிகள் இருந்தால், அதனைப் பேசுபவர்களுக்கு அந்தந்த மொழிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட உரிமை உள்ளது. அந்த சமவுரிமையை ஏற்றுக்கொண்ட அரசியற்கொள்கை ஜேவிபியிடம் இருக்கிறது. அதன் மூலம் ஒற்றுமையை கொண்டு வர முடியும். எமது கலாச்சார விடயங்களில் நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டு வந்தோம். தைப்பொங்கள், புத்தாண்டு, ரமஸான்களில் மற்றைய மத நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வோம். இந்த ஒற்றுமையை அவர்கள் சிதைத்தார்கள். அதனை ஏற்றுக்கொள்வது ஜேவிபி கட்சி மாத்திரமே. அரசியல் தலைவர்கள் எம்மை பிரித்தார்கள். நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.
உங்களது பிரதேச சபையின் வருமானமானது நீங்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து கிடைக்கிறது. நீங்கள் ஏன் வரிப்பணம் செலுத்துகிறீர்கள்? அதன் மூலம் தான் மைதானம், வீதி, நூலகம், வடிகாலமைப்பு, வெளிச்சம் போன்ற பல உட்கட்டமைப்பு வேலைகளை பிரதேச சபை மூலம் அரசினால் செய்யக்கூடியதாகவிருக்கிறது. நீங்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பது தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவோ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைத் தீர்ப்பதற்காகவோ அல்ல. செலுத்தும் வரிப்பணத்திற்கு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக.
பிரதேச சபைகளுக்காக ஒதுக்கும் பணங்களில் கட்டிடங்கள் அதிகம் இங்கு கட்டப்படாததற்கான காரணம், அதில் ஊழல் செய்ய முடியாது. காரணம், சகல பொருட்களும் அதே முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அதிகமாக ஊழல் நடைபெறுவது பாதையமைப்பதிலாகும். ஒதுக்கப்படும் நிதி தவிசாளரிலிருந்து கொந்தராத்துக் காரர்கள் வரை மோசடி செய்யப்பட்டு எஞ்சிய நிதியில் பாதை போடப்படுகிறது. அது 4 அங்குலமாவிருந்தது 2 அங்குலமாகியிருக்கும். எமக்குக் கிடைக்கும் ஒதுக்கீட்டிலிருந்து பாதையமைத்தால், உங்களது பணம் சிறிதும் விரயமாகாமல், பலன் கிடைக்கும்.
எமக்கு சபையினைக் கைப்பற்றக்கிடைத்தால் சகல சபைகளையும் விட சிறந்த சபையாக முன்னேற்றிக் காட்டுவோம். முன்பு, நாம் கைப்பற்றிய திஸ்ஸமஹாராம சபை நாட்டிலே சிறந்த சபையாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
பெப்ரவரி 10 வாக்குப் பெட்டிகளில் மணி சின்னம் மீதான புள்ளடியினால் நிறைந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் சகோதரர் இன்ஸாப் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி வெற்றி பெற நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -