A+ A-

சாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வு.





இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை சாய்ந்தமருதில் மிக விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவிருப்பதுடன் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் நடைபெறவுள்ளன. ஆனால், சாய்ந்தமருதில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் நிகழ்வுகள் இலங்கையின் முழுக் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் மிக கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கின்றது. 

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பிக்குமுகமாக இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்படி நாணயத் தாளில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்த்தவம் ஆகிய நான்கு மதங்களையும் பிரதிபலிக்கும் மதத் தலங்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் இஸ்லாமிய மத தலத்தை பிரதிபலிக்கும் வண்ணம் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பொறிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாணயம் வெளியிட்டு சாய்ந்தமருது மண்ணை உயரிய கௌரவப்படுத்திய இலங்கை அரசிற்கு தங்களது உளப்பூர்வ நன்றிகளைத் தெரிவிக்கும் வண்ணம் சாய்ந்தமருது மக்கள் சுதந்திர தின நிகழ்வுகளை மிக விமர்சையாக கொண்டாட தயாராகி வருகின்றனர். 

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சமூகம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு சிவில் அமைப்புகள் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் காலை 08.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. அத்துடன் சாய்ந்தமருது பிரதான வீதி உட்பட உள்வீதிகளில் உள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் காரியாலங்கள், பாடசாலைகள் அத்துடன் சகல வீடுகளிலும் இலங்கையின் தேசியக் கொடியை பறக்கவிட்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கவென முழு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஊர்களுமே விழாக்கோலம் பூண ஏற்பாடுகளை மேற்படி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு இளைஞர்கள் அமைப்புகள் ஏற்பாடுகளைச் செய்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. 

கடந்த பல வருடங்களாக, இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை சாய்ந்தமருது வர்த்தகர் சங்கம் சிறப்பித்து சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருவதுடன் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.ஐ.சர்ஜுன்)