நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற சபைகளில் தமது கட்சி ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அதேவேளையில், சாய்தமருதுவில் அண்மையில் தாம் வழங்கிய வாக்குறுதிக்கு மதிப்பளித்தும், அங்குள்ள மக்களின் தெரிவுக்கு முக்கியத்துவமளித்தும், பள்ளிவாசல் நிர்வாகத்தை கௌரவித்தும் கல்முனை மாநகர சபையில் மேயர் பதவியுடன் ஆட்சியமைப்பதற்கு அங்கு சகல வட்டாரங்களிலும் வெற்றியீட்டியுள்ள சுயேற்சைக்குழுவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குமென கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள சூழ்நிலையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் உட்பட வடகிழக்கிற்கும், வெளியிலும் பன்னிரெண்டுக்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுள்ளதோடு, பொலநறுவை, அநுராதபுரம், குருணாகல், புத்தளம், கம்பஹா, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கண்டி, மாத்தளை, பதுளை போன்ற மாவட்டங்களில் தனித்தும், ஐ.தே.கட்சியுடன் இணைந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை ஊடகங்களுக்கு விடுத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திலும், எமது கட்சியின் சார்பில் வேறு சின்னங்களிலும், சுயேற்சைக்குழுக்களாகவும் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளோம். தெஹியத்தகண்டிய பிரதேச சபை மற்றும் அம்பாறை நகர சபை ஆகியவற்றில் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிங்கள சகோதரர்களும் வெற்றிபெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கட்சிப் போராளிகளுக்கும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கியவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பிலும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்ளவதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.