கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (05) உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு உலங்கு வானூர்தியை நாடினார். எனினும், அது கிடைக்காத காரணத்தினால் நேற்று பிற்பகல் 4 மணியளவில் தரை மார்க்கமாக கண்டியை சென்றடைந்தார்.
சம்பவ இடங்களுக்கு நேரில் செல்வது உங்களுக்கு பாதுகாப்பில்லை. அதனால் உள்ளே செல்லவேண்டாம் என்று கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார். எனினும், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது அமைச்சர் சம்பவ இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
பிற்பகல் 4 மணி தொடக்கம் நள்ளிரவு 2 மணிவரை சம்பவ இடங்களில் இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்கிருந்தவாறே அங்கிருந்தவாறே ஜனாதிபதி மற்றும் பிரதமரை மீண்டும் தொடர்புகொண்டு களநிலவரங்களை எடுத்துக்கூறி பாதுகாப்பை பலப்படுத்தி, உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். இதேவேளை, வெளிநாட்டு தூதரகங்களுடனும கண்டி நிலவரத்தை எடுத்துக்கூறினார்.
திகன:
முதலில் திகன பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர், கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்தவாறே ஜனாதிபதியை தொடர்புகொண்டதன் மூலம் இராணுவத்தினர் சம்பவ இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களையும், பள்ளிவாசல் நிர்வாகிகளையும் நேரடியாக சந்தித்த அமைச்சர் கலநிலவரங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார். சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் பேணப்படாமையினால், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எங்களுக்கு அபிவிருத்திகள் தேவையில்லை, எங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அங்குள்ள பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் கதைத்து, முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் ஒவ்வொரு சந்திகளிலும பொலிஸாரை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் பள்ளிவாசல்களை அண்டிய பகுதிகளில் இராணுவத்தினர் களமறிக்கப்பட்டனர்.
கட்டுகஸ்தோட்டை:
கலகக்காரர்களின் தாக்குதல் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் பரவியபோது, உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிலைமையை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்குள்ள முஸ்லிம்களின் சில வர்த்தக நிலையங்களும், வீடுகளும் தாக்கப்படும்குள் அதிரடியாக செயற்பட்டு, பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதனால், கலகக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
அமைச்சர் அங்கிருந்து வெளியேறிச் சென்ற பின்னர், குருநாகல் வீதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளிவாசல் கண்ணாடிகள் சிறு சேதமடைந்துள்ளன. இதனால், இரண்டாவது தடவையாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், பள்ளிவாசலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியதுடன், இராணுவத்தினரையும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தினார்.
மடவளை:
மடவளை பிரதேசத்திலும் தாக்குதல் நடைபெறுவதற்கான அச்சம் காணப்படுவதால், ஊருக்குள் நுழையும் பிரதேசங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடைபெறாதவாறு பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அக்குறணை:
அக்குறணை ஹஸனா பள்ளிவாசலுக்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலருடன் தற்போதைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.
அக்குறணை 9ஆம் கட்டையில் தாக்குதல் நடைபெறுவதாக வதந்தியொன்று பரவிய நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நள்ளிரவு நேரத்தில் அக்குறணை முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டார். எனினும், அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் அக்குறணையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
தென்னகும்புர:
தென்னகும்புர பகுதியில் தற்போது பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பள்ளிவாசலுக்கு பெற்றோல் போத்தல் ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.
அலதெனிய:
அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. உடனடியாத பள்ளிவாசலுக்கு முன்னால் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
ஹேதெனிய:
ஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கு கலகக்காரர்கள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர். வர்த்தக நிலையத்தின் மேல்பகுதி தீப்பிடித்துள்ள நிலையில், உடனடியாக களத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீயணைக்கும் படையினரை வரவழைத்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.