A+ A-

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு சோரம் போரவரா?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் தலைமைப் பதவியை மர்ஹும் இஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர் ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்றார்.

தலைமைப்பதவியை பொறுப்பேடுத்த நாள் முதல் இன்று வரை பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்.

இந்தக்காலப்பகுதிகளுக்குள் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு தனது அமைச்சுப்பதவியைத் தக்க வைக்க வேண்டுமென்பதற்காக துதி பாடிய தலைவராகவும் இவர் இருக்கவில்லை.

சமூகப்பிரச்சனை என வரும் போது, பதவிகளைத்துறந்த வரலாறுகளும் இவருக்குண்டு. யுத்த காலப்பகுதிகளில் எதிர்க்கட்சியிலிருந்த காரணத்தினால் பாதுகாப்பு பறிக்கப்பட்டு உயிரச்சுருத்தல் நிலைமைகளிலும் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்தக்கட்சியில் முகவரி பெற்று, கட்சியைக்காட்டிக் கொடுத்து, அன்று தொடர்க்கம் இன்றுவரை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்களின் சூழ்ச்சிக்கு மத்தியிலும் தனது கடமை உணர்ந்து பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டவர்.

இன்று முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. புதிய தேர்தல் திருத்த முறைகளினால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக்கப்பட்டு, அரசியல் ரீதியாக பலமிழக்கப்படும் சந்தர்ப்பத்தில், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களை முடக்குவதற்கு பேரினவாதச் சதிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களை இவற்றுக்கு உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம்.

இவ்வாறு முஸ்லிம் சமூகம் நிர்க்கதியாக்கப்படும் நிலைமைகளில் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாது, நிதானமாக சமூகத்தை வழி நடாத்த வேண்டிய தார்மீகப்பொறுப்பு தலைமைகளுக்குண்டு. அதனை தன் சக்திற்கு உட்பட்டு இயன்றளவு ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னெடுத்தார்கள்.

இவ்வாறு சமூகத்திற்கெதிரான பிரச்சனைகள் வரும் போது, ஒரு சிலரால் அமைச்சுப்பதவியைத் தூக்கியெறிந்து விட்டு, அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என்ற கோசமும் எழுப்பப்படுவதுண்டு. அதனைச்செய்யாது விட்டால், தாறுமாறாக விமர்சிப்பதுமுண்டு.

நாம் ஒன்றைத்தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலைப்பாடுகளை தலைமைத்துவம் எடுக்க வேண்டுமே தவிர, தங்களின் அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் ஆதரவை இலக்கு வைத்து மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனஞ்செலுத்தாது, படம் காட்டும் அரசியலை முன்னெடுக்கக்கூடாது.

எதிர்க்கட்சி பலமாக இருக்குமானால், எதிர்க்கட்சியில் அமர்ந்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமென்றால் அல்லது முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை அரசாங்கம் தான் முன்னெடுக்கிறதென்பது தெளிவாகத் தெரிந்தால் எதிர்க்கட்சியில் அமர்வதில் நியாயமுள்ளது.

அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் நிதானமாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு தலைமைக்குண்டு. அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு அழுத்தங்களைக் கொடுக்கும் போது, அவை பிரயோசனமளிப்பது மட்டுமன்றி, அதிகளவான இழப்புகளைத் தடுக்கவும் முடியும்.

எதிர்க்கட்சி பலமில்லாத சந்தர்ப்பத்தில், எதிரணியில் இருந்து கொண்டு குரல் கொடுப்பது அரசாங்கத்தின் காதுகளில் கேட்காது பாரிய அழிவுகளுக்குப் பின்னால் என்ன நடந்ததென்று விசாரியுங்கள் என அரசாங்கத்தை வலியுறுத்தவும், வெளிநாடுகளைக்கோரவும் தான் முடியும்.

இவைகள் நமக்கு கடந்த கால சகோதர சமூகத்தின் அனுபவங்கள். இவைகளில் படிப்பினைகளுமுண்டு.

ஆளுங்கட்சிக்குள்ளிருந்து கொண்டு எதிர்க்கட்சியாகச் செயற்படும் திறன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குண்டு என்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் கண்டுள்ளோம்.

கடந்த அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்த போது ஏற்பட்ட அலுத்கம கலவரமாக இருந்தாலும் சரி, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த போதும் சரி, தன் சமூகம் பாதிக்கப்படுகிறதென்ற போது, அதனைப்பாதுகாக்க சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததையும் பார்க்கலாம்.

இவ்வாறு ரவூப் ஹக்கீம் அவர்கள் செயற்படும் போது, அரசாங்கத்திற்கு தங்களின் விசுவாசத்தைக்காட்டி தங்களின் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களுக்கு சவாலாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஓரங்கட்டவும் முயற்சி செய்பவர்கள் இவைகளை அரச மேல் மட்டங்களில் போட்டுக்கொடுத்து, அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக வலம் வருவதையும் பார்க்கலாம். இவ்வாறான எட்டப்பர்களை சமூகம் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு, எதிர்க்கட்சியில் அமர்வது தற்போதைய நிலையில் உசிதமல்ல. இவ்வாறு பிரச்சனைகள் தொடர்ந்தால், தலைமை, பதவிகளைத் துறந்து தீர்க்கமான முடிவுக்கு வரும் என்பதிலும் ஐயமில்லை.