நாங்கள் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எமக்கும் அநியாயம் நடந்துள்ளது என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புத்தளம் நகர சபையில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (30) புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் பிரமாண்டமாக புத்தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுப்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்
அம்பாறையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,புத்தளத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் எம்மை ஏமாற்றியது. இதன் போது அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையிலும், புத்தள மாவட்டத்தில் புத்தள நகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எமக்கு உதவியது. அவ்வாறே அனுராதபுரத்தில் கஹடகஸ்திகிலிய பிரதேச சபையில் எமக்கு கிடைத்த ஒரு ஆசனத்தின் ஆதரவை அவர்கள் எம்மிடம் கேட்டார்கள். அவர்கள் எமக்கு வழங்கிய ஆதரவினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எமது ஆதரவினை அங்கு வழங்கினோம் ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்களால் தவிசாளரை பெற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் அவர்களின் ஒத்துழைப்போடு எமக்கு உபதவிசாளர் அங்கு கிடைத்துள்ளது.
நாங்கள் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எமக்கும் அநியாயம் நடந்துள்ளது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்தும் எம்மை புறக்கணித்துவிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒரு அமைச்சருக்கு ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. பணத்தை வைத்து அரசியல் செய்யும் ஒருவரோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியமைக்க சோரம் போயுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையில் ஆறு வட்டாரங்களை நாம் வென்றெடுத்த போதும் ஒரே ஒரு வட்டாரத்தை வென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நான்கு வருடங்களுக்கும் தவிசாளர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்த போதும் எம்மை புறக்கணித்துவிட்டு தமக்கு கிடைத்த தவிசாளர் பதவியை இன்னொருவருக்கு தாரைவார்த்து கொடுத்தது அக்கட்சி. இதனை எவ்வாறு நாங்கள் அர்த்தப்படுத்திக்கொள்வது, இதன் நோக்கம் என்ன? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை அழிப்பதற்கான ஏற்பாடா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது?
இந்த செயற்பாடுகள் ஆளும் கட்சியில் இருக்கின்ற எம்மை சிந்திக்க வைத்துள்ளது? கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ள பேசுபொருளாக இது மாறியுள்ளது? எங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கினை அவசரப்பட்டு நாங்கள் வீணாக்கிவிட மாட்டோம், தொலைநோக்கு சிந்தனையோடு நிதானமாக அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி நாங்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஆளும் கட்சியிலுள்ள எம்மை புறக்கணிக்கின்ற இந்த போக்கு தொடர்பில் நாங்கள் அதிருப்தியுடனேயே இருக்கிறோம்.