ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்ட வர்த்தக தூதுக்குழுவினருக்குமிடையிலான சந்திப்பு.
அரச மற்றும் தனியார் துறை கூட்டு முதலீட்டு முயற்சிகளில் அண்மைக்காலமாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதால், நகர திட்டமிடல், நீர் வழங்கல் கருத்திட்டங்களிலும் அதற்கு தாம் முக்கியத்துவம் அளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், தம்மை சந்தித்துக் கலந்துரையாடிய கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்ட வர்த்தக தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.
கனேடிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இங்கு வந்துள்ள உயர்மட்ட வர்த்தக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் அமைச்சர் ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புதன்கிழமை (25) முற்பகல் அவரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது அமைச்சர் மேலும் கூறியதாவது,
நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால் அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும், கிராமப்புறங்களுக்கான நீர் மூலங்களை கண்டறிந்து அவற்றை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதிலுள்ள சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு முதலீட்டாளர்களின் தேவைப்பாடும் அவர்களது பங்களிப்பும் இன்றியமையாதது.
அவ்வாறே, கழிவு நீரை சுத்திகரித்தல் மற்றும் திண்மக் கழிவகற்றல் என்பவற்றை பொறுத்தவரை தமது அமைச்சு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினூடாக பல்வேறு செயல்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளது.
கிராமப்புறங்களில் சுத்தமான தண்ணீரை பெற்றுக் கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் கனேடிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முதலீட்டாளர்களும் தொழில்முயற்சியாளர்களும் முன்னரைவிட பங்களிப்பைச் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அத்துடன், இளமையும், செயல்திறனும் மிக்க கனடா பிரதமர் அண்மைக்காலமாக சர்வதேச மட்டத்தில் சிறப்பான அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கின்றார் என்றார்.
கனேடிய பிரதிநிதிகள் அமைச்சரிடம் முதலீட்டு முயற்சிகளை ஒருங்கிணைப்பது பற்றி விபரித்துக் கூறினர்.