A+ A-

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.










மாகாணசபையினூடாக கல்வி சம்பந்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் அநுராதபுரம் மாவட்டத்தின் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருதுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட கஹட்டகஸ்தெலிய, அக்கரபன்சிய, கெபத்திகொல்லாவ அல்லவௌ, முஸ்லிம் எடவீரவௌ அளுத்வத்த ஆகிய பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சத்திகரிப்பு நிலையங்களை கடந்த சனிக்கிழமை (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போது அநுராதபுர மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கணிசமான அளவு உள்ளுராட்சி சபையின் உறுப்பினர்களை மீண்டும் பெற்றுக் கொள்கின்ற ஒரு வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கின்றோம். அடுத்தபடியாக வரவிருக்கின்ற மாகாணசபை தேர்தலில் கட்சியை ஒரு காத்திரமான நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

இந்தக் கட்சி கடந்த காலங்களில் மாகாணசபை உறுப்பினர் ஒருவரை பெற்றிருந்தது. மாகாணசபையினூடாக கல்வி சம்பந்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற என்ற காரணத்தினால் இந்த மாவட்டத்துடைய கல்வி மறுமலர்ச்சி சரிவர வேண்டுமாகவிருந்தால் மாகாணசபையில் நாங்கள் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சரியான அணுகுமுறையுடன் அந்த விடயங்களை கையாளக்கூடிய ஒரு பிரதிநித்துவம் இல்லாமல் போனதன் துரதிஷ;டத்தின் விளைவாக இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியிலான கல்வி முன்னேற்றம் ஒரு தேக்கநிலையை அடைந்திருப்பதைப் போன்ற ஒரு நிலைமை உருவாகியிருக்கின்றது. அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் வடமத்திய மாகாணசபை உறுப்பினர் ஏ.சீ.ரவுத்தர் நெய்னார், மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.