A+ A-

கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் வளர்முக நாடுகளுக்கு அத்தியவசியமானது.















ஒரு நாட்டின் சனத்தொகை அதிகரிக்கின்ற போது அந்த நாட்டின் வளங்களை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகின்றன. இதனால் குறித்த நாடுகளில் சிலபோதுகளில் வளப்பற்றாகுறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன. இவ்வாறான வளப்பற்றாகுறை ஏற்படுகின்ற போதுகளில் அவற்றை நிவர்த்திசெய்ய மாற்றுவழியினை கண்டு பிடிக்க வேண்டிய தேவை அந்த நாட்டு அரசுக்கு எழுகின்றது. இந்த பொதுப்படையான எண்ணக்கருவானது எல்லா வளங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் இந்த நூற்றாண்டில் உலகிலுள்ள அநேகமான நாடுகள் எதிர்நோக்குகின்ற பொதுப்பிரச்சினைதான்  மக்களின் பாவனைக்கு தேவையான போதியளவு நீர்வளம்  இன்மையாகும். 

வளர்ந்த நாடுகளான அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் கூட இந்த நீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க பல்வேறு மாற்று வழிகளை பிரயோகின்றன. அதில் மிக முக்கியமான முறைதான் கழிவு நீர் மீள்சுழற்சி(Recycle) செய்யப்படுவதாகும், அதாவது  கழிவு நீரானது(Waste water) பல்வேறு படிமுறைகளில் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நீர் மூலவளங்களுக்கு (Water source) அனுப்பப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்படுகின்றது. 

உலகில் பல நாடுகள் கழிவு நீரினை(Waste water) சுத்திகரித்து பயன்படுத்தி தமது நாட்டின் நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்கின்றன. அந்த வகையில் கழிவு நீர் முகாமைத்துவத்தில் (Waste water Management) முன்னணி வகிக்கின்ற ஆசிய நாடான சிங்கப்பூருக்கு சிறந்த கழிவு நீர் முகாமைத்துவ செயற்பாட்டிற்கான விருது இந்த ஆண்டில்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலகில் பல நாடுகளில் பிரதான தேவையான நீரின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை சர்வதேச ரீதியில் ஊக்குவிப்பதை நம்மால் உணர முடிகிறது.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் உள்ள பாவனையாளர்களுக்கு இந்த திட்டம் புதியதாகவும், அனுபவமற்றதாகவும் இருக்கலாம் ஆனால் சிறிய நிலப்பரப்பை கொண்ட  இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கு அனுகூலம் தரக்கூடிய சிறந்த  முறையே இந்த கழிவு நீர் முகாமைத்துவ திட்டமாகும். 

சிறிய நிலப்பரப்பில் செறிவாக மக்கள் வாழ்கின்ற போது அவர்களின் பாவனைக்கு அதிகளவிலான நீர் தேவைப்படுகின்றது, போதியளவு நீரேந்து பிரதேசங்களோ அல்லது நீர் மூல வளங்களோ இல்லாத போது தேவையான அளவிலான நீர் அங்கு கிடைப்பத்தில்லை. கிடைக்கின்ற நீரின் கொள்ளவை விடவும் அதிகமான நீரானது நுகரப்படுகின்றது அல்லது பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றது இந்த சிக்கலான நிலையில் இருந்து மீளும் ஒரு பிரதான செயற்திட்டமாகவே இந்த கழிவு நீர் முகாமைத்துவ (Waste water Management)திட்டத்தினை கொள்ள முடியும்.  

கழிவுநீர் முகாமைத்துவ (Waste water Management) திட்டம் நமது நாட்டுக்கு புதிய விடயமாகும் அதுதொடர்பிலான விளக்கமற்றவர்களாகவே அநேகமானவர்கள் இருக்கின்றார்கள். அதாவது நமது வீடுகளில் மலசலத்தை சேகரிக்க நிலத்தின் அடியில்  ஒரு குழியை(Drainage) நாம் தயார் செய்து வைத்திருப்போம் அவ்வாறே நமது வீட்டு பாவனைகளுக்காக நீரினை உபயோக்கின்ற போது உருவாகும் கழிவு நீரினை அகற்றவும் ஒரு நிலக்கீழ் குழி இருக்கும் பெரும்பாலும் நகர்புறத்தில் இவ்விரண்டு கழிவுநீர் வகைகளும் ஒரே குழியில் சேமிக்கப்படுவதை அவதானிக்க முடியும். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் சேமிக்கப்படுகின்ற மலசலக்கழிவு மற்றும்  கழிவு நீர் ஆகிவற்றை  நிலக்கீழ் குழாய் வழியாக பிரதான கழிவுநீர் மீள்சுழற்சி மையத்திற்கு கொண்டு சென்று அந்தக்கழிவினை பல்வேறு படிமுறைகளுக்கூடாக   இரசாயன கலவைகளின்  மூலம்  சுத்திகரித்து, தொற்று நீக்கி பகுப்பாய்வு செய்து, பாவனைக்குகந்த நீராக மாற்றி  பெரிய நீர் மூலவளங்களான ஆறு,குளம், ஏரி போன்றவற்றுக்கு குழாய்வழியாக கொண்டு செல்கின்ற செயல் முறைதான்  கழிவு நீர் முகாமைத்துவ திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் பாவிக்கப்பட்ட நீரானது மீண்டும் தமது உற்பத்தி புள்ளியை அடைகின்ற படிமுறையினை காணமுடியும்.இதன் மூலம் நீர்பற்றாக்குறை குறைவதோடு பாவனைக்கு தேவையான நீரினை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்களை குறித்த பிரதேசங்களில் தவிர்க்க முடியும்.    

இலங்கையில் முதன் முறையாக கழிவு நீர் சுத்திகரிப்பதற்கும், குழாய் வழியான தூய குடிநீரினை சுத்திகரிப்பதற்குமான பிராந்திய மத்திய நிலையம் குருநாகலையில் அமைக்கப்பட்டுள்ளது.  பூர்த்தி செய்யப்பட்ட  பாரிய குருநாகல் நீர்வழங்கல் மற்றும் கழிவு நீர் திட்டத்தின் மத்திய நிலையத்தை  நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரான ரவூப் ஹக்கீம்  குழுவினர் சனிக்கிழமை  (5)  களவிஜம் மேற்கொண்டு பார்வையிட்டனர். அமைச்சருடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமன சேகர, சபையின் பணி இயக்குனர் மகியலால்,  அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லாஹ், செயற்திட்ட முகாமையாளர் டி,வி.மெதவத்த உட்பட பலர் இந்த குழுவில் வந்திருந்தனர். பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம்  நீர் முகாமைத்துவம்(Water Management) மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம்(waste water Management)  தொடர்பில் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தார்.

மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களுக்கும், அதிகமாக மக்கள் கூடிக்கலைகின்ற இடங்களுக்கும், மக்களை ஒன்றிணைக்கின்ற மத்திய நிலையங்கள் மத ஸ்தானங்கள் ஆகியவற்றுக்கு இந்த கழிவு நீர் முகாமைத்துவ திட்டமானது அவசியமானதாகும். இந்த விடயம் தொடர்பில் மக்கள் பூரண விளக்கத்தினை பெறவேண்டும். அந்த விளக்கத்தினை ஊடகங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும்.  

படித்த சிலருக்கே இந்த திட்டத்திலுள்ள நன்மைகள் தொடர்பில் விளக்கமில்லாமல் இருக்கிறது. இந்த திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது பல படித்த மட்டத்தினர் இதனை நிறுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். அவர்களுக்கு இது தொடர்பில் போதிய அளவில் அறிவு இருக்கவில்லை. மலசலத்தை அகற்றி அதனை மீள் சுழற்சிக்குற்படுத்துகின்ற போது அதனால் சூழலில் துர்நாற்றம் எழும் என அவர்கள் கருதினார்கள். அவ்வாறே வீடுகளில் இருந்து குழாய்வழியாக பிரதான கழிவு நீர் முகாமைத்துவ சட்டகத்திக்கு அவற்றை நிலக்கீழ்வழியாக கொண்டுவரும் போது குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு சூழல் மாசடையும், அந்த பிரதேசமே துர்நாற்றம் வீசும் என அவர்கள் கருதினார்கள். ஆனால் அவ்வாறு இல்லை இலங்கையிலேயே உயர் தொழிநுட்பம் பிரயோகிக்கப்பட்ட ஒரு கழிவுநீர் சுத்திகரிக்கும் தலமாக இதனை ஆக்கியுள்ளோம்.

வெளிநாட்டு தொழிநுட்பம் முற்றுமுழுதாக பாவிக்கப்பட்டுள்ளமையினால் இந்த பிரதேசத்தில் துர்நாற்றம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை கழிவுகளை சுத்திகரிக்கின்றபோது வாயுவாக உருவாகும் துர்நாற்றமானது இரசாயன கலவைகளினால் சுத்திகரிக்கப்பட்டு வளிமண்டலத்திற்கு வெறும் வாயுவாகவே அதாவது கெட்ட வாசனையற்ற வாயுவாகவே அனுப்பப்படுகின்றது. இவற்றை மக்களுக்கு நாங்கள் தெளிவு படுத்தி வருகிறோம். வளர்ந்த நாடுகளில் வெற்றியளித்துள்ள இந்த திட்டத்தினை மக்கள் மயப்படுத்தி அவர்களின் சிந்தனையினை கவரவேண்டியுள்ளது. இது ஒரு நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டமே என்பனை மக்கள் மனங்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் நிலையான நீர் பஞ்சத்திலிருந்து எம்மை பாதுகாக்க உதவும்.

சட்டரீதியாக பெறப்பட்ட அனுமதியுடனேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அனுராதபுரம், யாழ்ப்பாணம், கதிர்காமம், காத்தான்குடி, கல்முனை,கண்டி போன்ற பல பிரதேசங்களுக்கு கழிவு நீர் மீள் சுழற்சி மையத்தை அமைப்பதற்கான திட்ட வரைபுகளை நாம் தயாரித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

இலங்கையில் கழிவுநீரினை அல்லது பாவித்த நீரினை சுத்திகரித்து மீள்பவனைக்கு உகந்த நீராக மாற்றும் நிலையங்கள் கொழும்பை அண்டிய சில பிரதேசங்களில் இருக்கின்றன. அவைகள் மட்டுப்படுத்தப்பட்ட தொழிநுட்ப வசதிகளுடன் இயங்கினாலும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வடமேல் மாகாணத்தின் வியாபார கேந்திர நிலையமான குருநாகல் நகராட்சி பகுதியானது அண்ணளவாக 150,000 மக்கள், குறைந்த நிலப்பரப்பில் செறிவாக வாழுகின்ற பிரதேசமாகும்.தமது தேவைகள் நிமித்தம் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குருநாகல் நகர எல்லைக்குள் வந்து செல்கின்றனர். துரித வர்த்தக மற்றும் தொழிற்துறை வளர்ச்சி, நகர மயமாக்களினால் கிராமத்து மக்கள் நகர்புரத்தை நோக்கிய இடப்பெயர்வு என்பன போதுமான நீர்வழங்கல் திட்டங்களை அமுல்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறே பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றும் முறைமை இல்லாமையினால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே குருநாகல் நகரத்தின் அபிவிருத்தி தொடர்பிலான நிகழ்ச்சி திட்டத்தில் பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் முறையான கழிவு நீர் அகற்றல் வசதிகளை பெற்றுக்கொள்வது மிக முக்கியமான விடயமாகும். இலங்கை அரசின் 3200 மில்லியன் ரூபாயும், சீன அரசாங்கத்தின் 77,3 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியும் இந்த செயற்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இலங்கை நாணயபடி 13,248 மில்லியன் ரூபாய் அண்ணளவாக இத்திட்டத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீரினை வழங்குதல் மற்றும் போதுமான சுகாதார வசதிகளை வழங்குவதோடு குருநாகல் நகரிலும் மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். 

இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் குருநாகல் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரமே குழாய்வழியிலான நீரினை வழங்க முடியும். மொத்தமாக 71,000 பயனாளிகள் இதன் மூலம் பயனடைவார்கள். அத்தோடு குருநாகல் போதனா வைத்தியசாலையில் 24 மணிநேர நீர்வழங்களும், நகர்புறத்தில் வசிக்கின்ற 35,000 பயனாளிகளுக்கும் மேலதிகமாக நீர்வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.குருநாகல் நகரத்தின் துரித வளச்சியில் இந்த திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கும். நகர மையங்கள், வர்த்தக நிலையங்கள், வீட்டுவசதிகள், சுற்றுலா விடுதிகள், மருத்துவ மனைகள்,பாடசாலைகள் என்பவற்றுக்கு இத்திட்டமானது பயனுள்ளதாக அமையும்.

குருநாகல் நகரை பொறுத்தமட்டில் கழிவு நீரினை அகற்ற எந்தவொரு முறையான கழிவு நீர்ப்பாசன முறையும் இதுவரையிலும் இல்லாத குறைபாடாகவே இருக்கிறது. நீர் மூலவளங்களை சுற்றி உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள், ஹோட்டல்களின் கழிவுகள் என்பன நேரடியாக நீர் ஏரிகளுக்கே செலுத்தப்படுகின்றன. இந்தநிலையானது சூழல் மாசடைவதற்கும் நீர் மாசடைவதற்கும் ஏதுவாக அமைகிறது. இதற்கான நிரந்தர தீர்வாக  பாரிய குருநாகல் நீர்வழங்கல் மற்றும் கழிவு நீர் திட்டமானது அமையும்.

 குருநாகல் போதனா வைத்தியசாலை உட்பட  நகர எல்லைக்குள் வாழ்கின்ற  43,000 மக்கள் பயனைடையும் வகையில் இக்கழிவு நீர் சுத்திகரிக்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்புறத்தில் ஏற்படுகின்ற அசுத்தமான சூழலினை சிறந்த சூழலாக மாற்றியமைக்க முடியும்.முதற்கட்டமாக 3500 வீடுகளை இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்குள் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்தி புதிய சுத்திகரிப்பு வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் வைத்திசாலை கழிவுகளை இலகுவில் அகற்ற எதுவாக இத்திட்டம் அமையும்.

கழிவு நீர் முகாமைத்துவத்தின் நன்மைகள்.பல உள்ளன அவற்றில் முக்கியமானதாக 
குருநாகல் நகர்ப்புற மக்களுக்கு நீடித்த கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை வழங்குதல். நிலத்தடி நீர்பரிவர்த்தனையை மேம்படுத்தல்,  நீர் மூலவளங்களை கழிவினால் மாசுபடாமல் பாதுகாத்தல், நிலையான வலையமைப்பின் மூலம் குருநாகல் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அகற்றுதல், மக்கள் அதிகம் கூடிக்கலையும் பொது இடங்களான சந்தை,போக்குவரத்து பஸ்கள் நிறுத்தும் இடம், அரச காரியாலயங்கள் ஆகிவற்றை தொடர்ச்சியாக சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். ஆகியவற்றை குறிப்பிட முடியும்.

இத்திட்டங்களை கொண்டுநடத்துவதில் இத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பங்களிப்பு நினைவு கூறத்தக்கதாக பாரிய குருநாகல் நீர்வழங்கல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின், திட்ட முகாமையாளர் விதந்துரைத்தார். அவ்வப்போது பௌதீக செயற்பாடுகளில் ஏற்பட்ட தொய்வு நிலைகளின் போது அமைச்சர் தேவையான ஆலோசனைகளை வழங்கி இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற வழிசமைத்தவர் அமைச்சர் என்பதை அவர் வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு நன்மை பயக்கின்ற இந்த திட்டமானது மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களில் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒத்துழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

-நாச்சியாதீவு பர்வீன்-