A+ A-

தெல்தோட்டை, முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (01) தமது ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை






தெல்தோட்டை, முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (01) தமது ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை

(தொகுப்பு: ஜெம்சாத் இக்பால்)

இந்த வருடம் செப்டம்பர் மாதம் தற்போது இருக்கின்ற மாகாண சபையும் பெரும்பாலும் கலைக்கப்பட்டுவிடும்,  மாகாண சபை தேர்தல்கள் பற்றிய பேச்சுக்கள் நடக்கின்றன. அந்தத் தேர்தலையும் புதிய தொகுதி அடிப்படையில் நடத்த வேண்டுமென்று பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தாலும், அந்த திருத்தம் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் ஆபத்தானது.

தேர்தல் தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு முஸ்லிம்களுக்கான தொகுதிகள் போதியளவு நிர்ணயிக்கப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை அறிந்தவர்களாக நாங்கள் அரசாங்கத்திற்கு பலத்த அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதை மாற்றியமைக்க வேண்டும் என்பது சம்பந்தமாக கடந்த வியாழக்கிழமை பிரதமரோடு நடந்த சந்திப்பில் நாங்கள் கடுமையாக வலியுறுத்தியிருக்கின்றோம். அதை வாபஸ் பெற்று பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்திய இப்தாருக்கு நானும் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவருடன்கூட இந்த விடயத்தை நான் சொல்லி அவருடைய கட்சியும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதோடு, இந்த புதிய தொகுதி முறையில் நிர்ணயம் என்பது முஸ்லிம் சமூகத்தை நாடுபூராகவும் பாதிக்கின்ற விடயமாக மாறியிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டிய போது தாராளமாக நாங்கள் அதை செய்தாக வேண்டுமென்றும் தனக்கும் இந்த புதிய முறையில் விருப்பமில்லை என்றும் சொன்னார்.

கடந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி கிடைத்திருந்தாலும், இந்த முறையின் மூலம் தலைவர்களை தெரிவு செய்வதிலும் ஆட்சியமைப்பதிலும் ஏற்பட்ட சிக்கல்களை வைத்துப்பார்க்கின்ற போது பழைய முறை இருந்திருந்தால் எவ்வளவோ மேல் என்பதை தானும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதோடு, மாகாண சபை தேர்தலில்கூட நடந்திருக்கின்ற இவ்வாறான முறைகேடுகளை நீக்கி பழைய தேர்தல் முறைக்கு திரும்பப்போவதற்கு தாமும் முழுமையான ஆதரவைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

ஜனாதிபதியையும் அடுத்த 4ஆம் திகதி சந்தித்து சிறுபான்மையினக் கட்சிகளின் சார்பில் பலமாக வலியுறுத்தி நாங்கள் பேசவிருக்கின்றோம். ஏற்கனவே ஐ.தே.கட்சியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்ற நிலையில் சிறுபான்மை கட்சிகள் என்ற அடிப்படையில் மலையகக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளுமாக சேர்ந்து கூட்டாக முடிவெடுத்து இந்த தேர்தல் முறையில் ஏற்பட்டிருக்கின்ற புதிய மாகாண சபைக்கான தொகுதிவாரியான எல்லைநிர்ணயம் மிகப் பாதகமானது என்பதை சுட்டிக்காட்டி இதை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதியும் ஒத்துழைக்க வேண்டும் என்று மிகவும் வலிமையாக நாங்கள் அவரை வேண்டிக் கொள்ள இருக்கின்றோம்.

இந்த புதிய தேர்தல் முறையிலும், பழைய தேர்தல் முறையிலும் சில சந்தர்ப்பங்களில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் வட்டார முறையில் தெரிவு நடக்கின்றபோது இந்த விடுத்தம் எங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றொரு அச்சம் இருந்தது.

ஆயினும், பல்வேறு கட்சிகளினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றது. இந்த புதிய தேர்தல் முறையிலும்கூட இந்த பகுதிக்கான உறுப்பினர்களை பெறுகின்ற வாய்ப்பு எங்களுக்கு கிட்டியுள்ளது. இருந்தபோதிலும், வட்டாரங்களை நாங்கள் நிர்ணயிக்கின்ற முறையில் எங்களுக்கான போதிய வட்டாரங்கள் கிடைக்காமையில் குறைபாடுகள் எங்களுக்கு இருந்து வந்திருக்கின்றது.

வட்டார அடிப்படையிலான  உறுப்பினர்களின் தெரிவு, பட்டியல் உறுப்பினர்களின் தெரிவை விடவும் முக்கியமானது என்ற அடிப்படையில் அது சம்பந்தமான குறைபாடுகள் இருந்து வருகின்றது. அந்த போராட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்துகொண்டிருகின்றோம். இது சம்பந்தமான மீண்டும் ஒரு மீள்நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

நான் நீதியமைச்சராக இருந்த போது இந்த பிரதேசத்திற்கு சுற்றுலா நீதிமன்றமொன்றை அமைத்தத்தருவதற்கு மிகவும் பிரயாசைப்பட்டு முயற்சி மேற்கொண்டேன். அதற்காக பத்தாம்பள்ளி பிரதேசத்தில் மூடப்பட்டிருக்கின்ற ஒரு பாடசாலையை மாகாண முதலமைச்சரின் அனுமதியோடு விடுவித்தெடுத்து அவ்விடத்தில் ஒரு சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தோம். அதை நான் நீதியமைச்சராகவிருந்த காலத்தில் செய்து முடிப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை. தற்போதைய நீதியமைச்சராக இருக்கின்ற தலதா அத்துகோரளவிடம் இதை வலியுறுத்தியிருக்கின்றேன். சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதன் மூலம் இங்கிருந்து கண்டிக்கு கிழமை தோறும் சென்றுவதிலுள்ள கஷ;டத்தை நீக்கமுடியும்.

அனுரடேனியல் வைத்தியசாலையில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற பிரச்சினையாகும். இது குறித்து நான் எனது கட்சியின் சுகாதாரப் பிரதியமைச்சராகவிருக்கின்ற பைசல் காசிமை அழைத்து வந்து இங்கிருக்கின்ற மகப்பேற்று விடுதி உட்பட சிறுவர்களுக்கான விடுதி மற்றும் ஆண், பெண்களுக்கான விடுதிகள் என்பன பற்றியும் அவற்றியுள்ள குறைபாடுகள் பற்றியும் கூறியுள்ளதோடு, சிறிய அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதோடு, நான்கு மாடிக் கட்டிடமொன்றையும் பெற்றுத்தருவதற்கு மத்திய அரசினூடாக ஒதுக்கீடுகளை செய்து, அதனை மாகாண அரசினூடாக நெறிப்படுத்த மத்திய மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளரைச் சந்தித்து முயற்சி செய்கின்றோம்.

இவ்வாறாக பின்தள்ளப்பட்டிருக்கின்ற அனுரடேனியல் வைத்தியசாலையை முன்னேற்றுவதநற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றோம்.

கடந்த பொதுத்தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இங்கு வந்திருந்த போது தெல்தோட்டை பஸ் நிலையம் மோசமான நிலையில் காணப்படுவதை அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, எனது அமைச்சின் நிதிஒதுக்கீட்டினூடாக அதற்கான செயல்திட்ட வரைபடத்தை தயாரித்து நகர அபிவிருத்தி அதிகாரசபையினூடாக அதனை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றேன்.

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியை விஸ்தரிக்கும் பணியை அதற்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சர் லக்ஷ;மன் கிரியல்லவுடன் கலந்தாலோசித்து விரைவுபடுத்தியிருந்த நிலையில், இப்பொழுது பெருந்தெருக்கள் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கபீர் ஹாசிமை சந்தித்துப் பேசி அதனை சிறப்பாக செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

தெல்தோட்டை பிரதேசத்திற்கு குடிநீர் திட்டம் நீண்டகாலத் தேவையாக இருந்து வருகின்றது. அது மிக விரைவில் நிறைவேறுகின்ற தறுவாயில் இருக்கின்றது. லூல்கந்துற நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று கலஹா, தெல்தோட்டை பிரதேசங்களுக்கு முழுமையான சுத்தமான குடிநீர் திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற போதிலும்கூட, துரதிர்ஷ;டவசமாக ஹங்குரங்கெத்த பிரதேசத்திலிருக்கின்ற விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக இது நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகின்றது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க விவசாயிகளுடன் பேசி அந்த சர்ச்சையை தீர்த்தத்தருவதாக எனக்கு ஒரு பொருத்தத்தைத் தந்தார். அவரின் உத்தரவாதத்தோடு இந்த செயல்திட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று, ஆஸ்திரிய அரசாங்கத்தின் 12 மில்லியன் ஐரோப்பிய யூனியன் டொலர்கள் பெறுமதியான கடனுதவியை திரைசேரி பெற்றுத்தந்துள்ளது. இந்த செயற்;திட்டத்திற்கான கேள்விப்பத்திர விவகாரங்கள் மிக வேகமாக கையாளப்பட்டு வருகின்றன.