A+ A-

முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்புகள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதா?


கடந்த ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தீர்க்கமான முடிவொன்றுக்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம் சமூகம் முடிவெடுத்ததன் விளைவுகளை இன்று நாங்கள் உணர்கிறோம்.


முஸ்லிம் சமூகத்தின் வணக்கஸ்தலங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. பேருவளை, அலுத்கம கலவரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மஹிந்த அரசாங்கம் எடுக்கத்தவறியமை, முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்களுக்கு மறைமுகமாக மஹிந்த அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்படுகிறதென்ற நிலைப்பாட்டில் அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற நோக்கத்தில் எந்தவித நிபந்தனைகளுமின்றி, தங்களின் தலைவர்கள் முடிவெடுப்பதற்கு முன்னேரே முஸ்லிம் சமூகம் நல்லாட்சியை ஏற்படுத்தப்போகிறோம் என்ற அணியுடன் இணைந்து கொண்டது.

இவ்வாறு தங்களின் தலைமைத்துவங்களுக்குக் கட்டுப்படாது, அவசரம், ஆதங்கத்தில் முடிவெடுத்ததன் காரணத்தினால், எந்த நிபந்தனையுமின்றி தலைவர்களும் நல்லாட்சியுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தச்சந்தர்ப்பத்தில் அவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யுமளவுக்கு சமூகம் தங்களின் தலைமைகளுக்கு அவகாசம் கொடுக்காமல் இணைந்ததனால், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை நல்லாட்சியை ஏற்படுத்தச் செயற்பட்டவர்களிடம் முன்வைக்க முடியவில்லை. அவர்களைப் பொறுத்தளவில் முஸ்லிம் சமூகம் எங்களோடு வந்து விட்டது, அவர்களின் தலைவர்கள் வந்தாலும் சரி, வரா விட்டாலும் சரி என்ற நினைப்பிலிருந்தார்கள். ஈற்றில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இணைந்து கொண்டார்கள்.

இவ்வாறு முஸ்லிம் சமூகம் தலைமைகளுக்குக் கட்டுப்படாது, முடிவெடுத்ததன் விளைவுகளை இன்று அனுபவிக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தை விட இந்த ஆட்சிக்காலத்தில் தான் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச்செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் இந்த நல்லாட்சியில் நம்பிக்கையிழந்தவர்களாக முஸ்லிம்கள் காணப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ் சமூகத்தைப் பொறுத்தளவில் தங்களின் தலைமைகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுபவர்களாக இருந்ததன் காரணத்தினால், நல்லாட்சியை ஏற்படுத்த முன்னின்று செயற்பட்டவர்களுடன் சமூகம் சார்ந்த விடயங்களை முன்வைத்து பேரம் பேசினார்கள்.

தமிழர்களின் ஆதரவு தமிழ்த்தலைவர்களின் கோரிக்கையை ஏற்றால் தான் கிடைக்கும். அப்போது தான் வெற்றி பெற முடியுமென்ற நிலையில், அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது நிறைவேற்றப்படுகிறது. அதிலொரு விடயமாக இராணுவக்கட்டுப்பாட்டிலிருந்த தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதையும், இன்னோரன்ன செயற்பாடுகளையும் குறிப்பிடலாம்.

ஆனால், வழியே சென்று ஆதரவு வழங்கியதாலேயே முஸ்லிம்களின் பிரச்சனைகளை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களின் எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதாலேயே முஸ்லிம் சமூகம் அதிருப்தியடைந்திருக்கிறது.

அன்று முஸ்லிம் சமூகம் இவர்களை ஆதரிக்க மறுத்திருந்தால், இந்த நல்லாட்சி மலர்ந்திருக்க வாய்ப்பில்லை. அன்று மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதற்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு போதுமானதாகும். ஏனெனில், தமிழ் தரப்பு கடந்த தேர்தலில்களிலும் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு வழங்காத நிலையிலேயே முஸ்லிம்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருந்தார்.

பின்னர் மஹிந்த ராஜபக்ஸ சிங்கள தேசியவாதத்தினூடாக பெரும்பாண்மை மக்களின் ஆதரவோடு வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டதன் விளைவால், முஸ்லிம்களின் ஆதரவை இழக்க வேண்டிய நிலையேற்பட்டது. இதன் விளைவால் தான் ஆட்சியை இழந்தார்.

இன்று தனது தோல்விக்கான பிரதான காரணமாக முஸ்லிம் மக்களின் ஆதரவை இழந்தது தான் என்பதை உணர்ந்து, இன்று தங்களின் ஆட்சியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற கருத்தை முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ போன்றோரும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ போன்றவர்களும் கருத்துக்களை வெளியிடுவதையும் பார்க்கலாம்.

இன்று முஸ்லிம் சமூகம் இந்த ஆட்சியில் நம்பிக்கையிழந்து, மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நிலையிலிருப்பதாகவே தெரிகிறது.

முஸ்லிம் சமூகமே! கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினை பெற்ற சமூகமாக நாம் மாற வேண்டும். அல்லாது உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு, கடந்த காலத்தில் விட்ட தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.

முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் அரசியல் தலைவர்கள், மார்க்கத்தலைவர்கள் ஒன்றுபட்டு ஒரு தீர்க்கமான  முடிவின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானத்தை, சமூகம் என்ற அடிப்படையில் நாம் ஒற்றுமையாகப் பின்பற்ற வேண்டும்.

அப்போது தான் நாம் அதில் வெற்றி காண முடியும். மாறாக, சமூக வலைதளங்களில் காட்போட் வீரர்களாக வீர வசனங்களைப்பேசி நமது தலைமைகளை உதாசீனம் செய்து, அவர்களின் தூரநோக்கு சிந்தனை அடிப்படையிலான தீர்மானங்களைப் புறந்தள்ளி செயற்பட்டால், பாரிய இழப்புக்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடுமென்பதில் ஐயமில்லை.

எனவே தான், மார்க்க, அரசியல் தலைமைகள் தற்போது நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் நிலை குறித்தும், கடந்த ஆட்சியாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்பான சாதக, பாதகங்களை ஆய்வு செய்து எதிர்காலத்தில் யாருடைய ஆட்சி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமென்பதை நன்குணர்ந்து தக்க நேரத்தில் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தி, அதன் பால் முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்த முன்வர வேண்டும்.


எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
   ஓட்டமாவடி(கல்குடா).