A+ A-

பிரதமருடனான சந்திப்பில் பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
இந்த வருடம் செப்டம்பர் மாதம் தற்போது இருக்கின்ற மாகாண சபையும் பெரும்பாலும் கலைக்கப்பட்டுவிடும்,  மாகாண சபை தேர்தல்கள் பற்றிய பேச்சுக்கள் நடக்கின்றன. அந்தத் தேர்தலையும் புதிய தொகுதி அடிப்படையில் நடத்த வேண்டுமென்று பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தாலும், அந்த திருத்தம் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தெல்தோட்டை, முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (01) தமது ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்தாவது,

தேர்தல் தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு முஸ்லிம்களுக்கான தொகுதிகள் போதியளவு நிர்ணயிக்கப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை அறிந்தவர்களாக நாங்கள் அரசாங்கத்திற்கு பலத்த அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதை மாற்றியமைக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நேற்றும் (வியாழக்கிழமை) பிரதமரோடு நடந்த சந்திப்பில் நாங்கள் கடுமையாக வலியுறுத்தியிருக்கின்றோம். அதை வாபஸ் பெற்று பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம்.

இந்த புதிய தேர்தல் முறையிலும், பழைய தேர்தல் முறையிலும் சில சந்தர்ப்பங்களில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் வட்டார முறையில் தெரிவு நடக்கின்றபோது இந்த விடுத்தம் எங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றொரு அச்சம் இருந்தது.

ஆயினும், பல்வேறு கட்சிகளினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றது. இந்த புதிய தேர்தல் முறையிலும்கூட இந்த பகுதிக்கான உறுப்பினர்களை பெறுகின்ற வாய்ப்பு எங்களுக்கு கிட்டியுள்ளது. இருந்தபோதிலும், வட்டாரங்களை நாங்கள் நிர்ணயிக்கின்ற முறையில் எங்களுக்கான போதிய வட்டாரங்கள் கிடைக்காமையில் குறைபாடுகள் எங்களுக்கு இருந்து வந்திருக்கின்றது.

வட்டார அடிப்படையிலான  உறுப்பினர்களின் தெரிவு, பட்டியல் உறுப்பினர்களின் தெரிவை விடவும் முக்கியமானது என்ற அடிப்படையில் அது சம்பந்தமான குறைபாடுகள் இருந்து வருகின்றது. அந்த போராட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்துகொண்டிருகின்றோம். இது சம்பந்தமான மீண்டும் ஒரு மீள்நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தெல்தோட்டை பிரதேசத்திற்கு குடிநீர் திட்டம் நீண்டகாலத் தேவையாக இருந்து வருகின்றது. அது மிக விரைவில் நிறைவேறுகின்ற தறுவாயில் இருக்கின்றது. லூல்கந்துற நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று கலஹா, தெல்தோட்டை பிரதேசங்களுக்கு முழுமையான சுத்தமான குடிநீர் திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற போதிலும்கூட, துரதிர்ஷ;டவசமாக ஹங்குரங்கெத்த பிரதேசத்திலிருக்கின்ற விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக இது நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகின்றது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க விவசாயிகளுடன் பேசி அந்த சர்ச்சையை தீர்த்தத்தருவதாக எனக்கு ஒரு பொருத்தத்தைத் தந்தார். அவரின் உத்தரவாதத்தோடு இந்த செயல்திட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று, ஆஸ்திரிய அரசாங்கத்தின் 12 மில்லியன் ஐரோப்பிய யூனியன் டொலர்கள் பெறுமதியான கடனுதவியை திரைசேரி பெற்றுத்தந்துள்ளது. இந்த செயற்;திட்டத்திற்கான கேள்விப்பத்திர விவகாரங்கள் மிக வேகமாக கையாளப்பட்டு வருகின்றன என்றார்.

இந்நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் இல்லாஸ் மெலளவி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ், முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசல் தலைவர், அஷ;nஷய்க் இஹ்ஸான் (இஹ்ஸானி) உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர்.