A+ A-

தம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்







தம்பாளை அல்ஹிலால் மத்திய கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை அடையாளப்படுத்தி, நகர திட்டமிடல் அமைச்சின் ஊடாக திட்ட வரைபை தயாரித்து, தேவையான நிதியுதவிகளைப் பெற்று அவற்றை விரைவாக செய்துமுடிப்பதற்கு தன்னாலான முழு முயற்சிகளை மேற்கொள்வேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொலன்னறுவை, தம்பாளை அல்ஹிலால் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று சனிக்கிழமை (23) திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

எனது தந்தை இந்தக் கல்லூரியில் அதிபராக பணியாற்றியிருக்கிறார். இதன்போது, அதிபர் விடுதியில் எனது தாயாருடன் வசித்த நாட்கள் மிகவும் என்றும் பசுமையானவை. நானும் எனது சகோதரர்களும் இந்தக் கல்லூரியில்தான் கல்வி கற்றோம். அப்படியானதொரு பாடசாலையின் தேவைகளை பூர்த்திசெய்யவேண்டிய கடமைப்பாடு எனக்கு இருக்கிறது.

பாடசாலை மைதானத்தை அகலப்படுத்த வேண்டும். காலத்தின் தேவைகருதி பழைய வகுப்பறைக் கட்டிடங்களை அற்றிவிட்டு, புதிய வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. நூலகம், கேட்போர்கூடம் மற்றும் பாடசாலை மருங்கில் நடைபாதை போன்றவற்றையும் அமைக்கவேண்டும். இதற்கான திட்ட வரைபுகளை தயாரித்து எஞ்சியிருக்கின்ற காலப்பகுதிக்குள் முடியுமானளவு செய்துமுடிக்க வேண்டும் என்றார்.

அத்துடன், சிறுநீரக நோயினால் அதிகம் பாதிப்புக்குள்ளான பொலன்னறுவை மாவட்டத்தில் தம்பாளை, அல்ஹிலால்புர, ரிபாய்புர போன்ற இடங்களில் 22 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர் இதன்போது திறந்துவைத்தார். இதன்மூலம் 2000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள புலஸ்திஸ்கம, லங்காபுர ஆகிய பிரதேசங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் பியதர்ஷனராம தகம் பாடசாலை மற்றும் கேகலுகம ஸ்ரீ நாலந்தாராமய விகாரை ஆகியவற்றில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகளையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.