A+ A-

தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் தீர்வை நோக்கி ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்:



நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன்மூலமே, பெரும்பான்மை சமூகத்துடன் நல்லுறவைப் பேணிவரும் அதேவேளை தமிழ்பேசும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் தங்களது அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே ஆரோக்கியமானதொரு அரசியல் நகர்வை முன்கொண்டுசெல்ல முடியும். அண்மைக்காலமாக இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருசிலரினால் மேற்கொள்ளப்படும் இந்த சம்பவங்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

இரு சமூகத்தினரும் மொழியால் இணைந்திருந்தாலும் முஸ்லிம்கள் தனியானதொரு இனக்குழுமம் என்றும் அவர்களுக்கு தனியான கலாசாரம், அரசியல் அபிலாஷைகள் இருப்பதை இந்துக்களும், அதுபோல இந்துக்களுக்கு தனியான கலாசாரம், அரசியல் அபிலாஷைகள் இருப்பதை முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இரு இனக்குழுமங்களுக்கு இடையிலும் எவ்வித குறுக்கீடுகளும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்.

புதிய அரசியலமைப்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நாங்கள்; எங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளாமல், ஒற்றுமையுடன் பயணித்து இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயங்களை பின்பற்றினாலும், மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும்.

முஸ்லிம்களின் பிரதான கடமைகளில் ஒன்றான நோன்பு, அதனை நோற்பவர்களுக்கு நற்குணம், பொறுமை, நேர்மை, நன்நடத்தை, மனிதநேயம், உளத்தூய்மை போன்ற நன்னடத்தைகளுடன் அடுத்தவர் கஷ்டங்களை உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளது. 

ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் இனநல்லுறவு, சகிப்புத்தன்மையுடன்; வாழ்ந்துவந்தாலும் இன ரீதியான வன்முறைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது. இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சி அரசாங்கத்திலும் ஏற்பட்டமை வேதனைக்குரிய விடயமாகும். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தின் மனங்களை புரிந்துகொண்டு வாழ்தன் மூலமே நிலையான சகவாழ்வை ஏற்படுத்த முடியும்.

இன ஐக்கியத்தை வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்கள், புனித ரமழான் மாதத்தில் நோன்புகளை நோற்று பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் சௌபாக்கியம் நிறைந்த சகவாழ்வை நோக்கிய பயணத்தில் கைகோர்க்கவேண்டும். 

சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் முஸ்லிம்கள் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்நாளில் இருகரமேந்தி பிரார்த்திப்போம்.