A+ A-

முஸ்லிம் காங்கிரஸுடன் முன்னாள் ஜனாதிபதி?


இலங்கை அரசியலில் தற்போதைய சூழ்நிலையில் பரபரப்பான செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான செய்தியாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்ட செய்தி இன்று பெரும் பரப்பாக மாறி இருக்கிறது.

இந்த இப்தார் நிகழ்வுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர்களான பௌசி, ஹிஸ்புள்ளாஹ் ஆகியோரும் முன்னாள் அமைச்சர்களான பஸீர் சேகுதாவூத், அதாவுள்ளாஹ் போன்றோரும் கலந்து கொண்ட போதிலும், ரவூப் ஹக்கீம் அவர்களின் வருகையே இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர், முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவைப்பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்பதால் இவரின் வருகை ஆச்சரியமாகவும் மாறியுள்ளது.

ஆட்சி மாற்றம் தொடர்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்தச்சந்திப்பு முக்கியத்துவமுள்ளதாக அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகிறது.

கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டாலும், அபிவிருத்தி மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் விடயங்களில் மாற்றாந்தாய் மனநிலையிலேயே மஹிந்த அரசால் நோக்கப்பட்டது. மாறாக, தங்களின் விசுவாசிகளாக தங்களைத்தாங்களே தலைவர் எனக்கூறிக் கொள்ளும் நபர்களை வளர்த்து விட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய இனவாதச்செயற்படுகளால் அந்த ஆட்சியில் நம்பிக்கையிழந்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்காக மைத்திரி அணியுடன் இணைந்து நல்லாட்சியை உருவாக்கிய போதும், முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச்செயற்பாடுகள் மைத்திரி ஆட்சியிலும் அதிகரித்தே வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் பலர் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்படலாம்அல்லது ஏற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்ற வேளையிலேயே இந்த முக்கியத்துவமுள்ள சந்திப்பு தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித்தேர்தலின் போது மஹிந்த அரசாங்கத்தில் செல்லப்பிள்ளைகளாக முஸ்லிம் காங்கிரஸுக்கெதிராக வளர்க்கப்பட்டவர்கள் மகிந்தவுக்கு துரோகமிழைத்து, முனாபிக் பட்டத்துடன் மைத்திரி அணியுடன் இணைந்த போது, முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்புக்களை கோரிக்கையாக வைத்து பேச்சுவார்த்தை நடாத்தி, அதில் உடண்பாடுகள் எட்டப்படாத நிலையில், கௌரவமான முறையில் வெளியேறி மைத்திரி அணியுடன் இணைந்து கொண்டார்கள்.

இதனாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறார் என்பதுடன், கடந்த ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரவில்லாமல் போனது,
இதுதான் தனது தோல்விக்குக்காரணம் என்பதை உணர்ந்து, எதிர்காலத்தேர்தல்களில் வெற்றி பெற முஸ்லிம் காங்கிரஸுடாக முஸ்லிம்களின் ஆதரவு அவசியமென்பதால், முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாண்மை ஆதரவைப்பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ரவூப் ஹக்கீம் அவர்களுடனும், முஸ்லிம் சமூகத்துடனும் நல்ல முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கிறார்.

அதன் வெளிப்பாடுகளாக முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை தாங்கள் உறுதிப்படுத்துவதாகவும், முஸ்லிம் சமூகத்தில் அக்கறையுடன் இருப்பதாகவும் இவர்களின் நடவடிக்கை அமைந்திருப்பதுடன், ரவூப் ஹக்கீம் அவர்களுடனும் நல்லெண்ண சமிஞ்சைகளும் காட்டப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயார் மரணித்த போது, உடனே அவரின் இல்லம் விரைந்து ஆறுதல் கூறினார், அதே போலே உள்ளூராட்சி மன்ற ஆட்சியமைப்பதில் அவரது கட்சியான பொது ஜன பெரமுன சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு வழங்கியது. அதே போன்றே இந்த இப்தார் சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனலாம்.

இந்த இப்தார் நிகழ்வு பலரையும் கிலி கொள்ளச்செய்திருக்கிறதென்பதை அவர்கள் சார்பு ஊடக, சமூக வலைத்தள எழுத்தாளர்கள் கற்பனையில் எழுதி வருவது எடுத்துக்காட்டுகிறது.

எனவே, முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பேரியக்கம் என்பதால் அதன் தலைமை எடுத்தோம் கவுத்தோம் என்று செயற்பட முடியாது. தம்மை அணுகும் முன்னாள் ஆட்சியாளர்களின் நோக்கம் தொடர்பிலும், அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிக கவனஞ்செலுத்த வேண்டும். ஏனென்றால், "ஆற்றைக்கடக்கும் வரை அண்ணண் தம்பி. ஆற்றைக்கடந்த பின் நீ யாரோ, நான் யாரோ" என்ற நிலை மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்கு வந்து விடக்கூடாது.

நம்மைப்யன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், நமக்கெதிரான சட்டங்களையும் தேர்தல் முறை மாற்றங்களையும் உருவாக்கி நம்மை அரசியலரங்கில் செல்லாக்காசாக மாற்றும் கைங்கரியத்தை இவர்கள் செய்யலாம். உதாரணமாக, தங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்க உள்ளூராட்சித்தேர்தல் திருத்தம் உட்பட இவர்கள் மேற்கொண்ட எல்லை நிர்ணயத்தை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

எனவே, தற்போதிருக்கும் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்த வேண்டும். அவர்களுடனும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது விடத்து, பரந்துபட்ட ஆலோசனையின் பிரகாரம் தக்க சமயத்தில் இருவரில் யார் ஆட்சி முஸ்லிம்களுக்கு சிறந்தது? பாதுகாப்பானது? என்ற முடிவை தலைமைத்துவம் மேற்கொண்டு மக்களை அதன் பால் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், சமூகப்பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி அதற்கான உத்தரவாதங்களுடன் ஆதரவுகளை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
   ஓட்டமாவடி,(கல்குடா).