மத்திய மலைநாட்டில் நாவலப்பிட்டி நகருக்கு அண்மையில் செண்பகச்சோலை என்றழைக்கப்படும் ஹபுகஸ்தலாவை கிராமத்தில் அமைந்துள்ள தொன்மையான குளத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் அவ்வூரை பிறப்பிடமாகக்கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நாளை வெள்ளிக்கிழமை பி.ப. 4 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது .
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 93 மில்லியன் முதலீட்டுத்தொகையை பயன்படுத்தி நீர்பாசனத் திணைக்களத்தினால் இந்த குளம் அமைந்துள்ள பிரதேசம் 6.7 ஏக்கர் பரப்பில் புனரமைக்கப்பட்டு அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு இதன் அபிவிருத்தி வேலைகள் முழுமையாக நிறைவடைந்ததும் இக்கிராமத்தின் நீர்வளத்தை பேணுவதற்கும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கும், அதனை சூழ அமைக்கப்படும் நடைபாதையில் பிரதேச மக்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும், தேவையை பொறுத்து அதிலிருந்து குழாய்நீரை பெறுவதற்கும் இயலுமாக இருக்கும்.
கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கருகில் அமைந்துள்ள மலைகளால் சூழப்பட்டுள்ள இயற்கை வளம்கொழிக்கும் ஹபுகஸ்தலாவைக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப்பயணிகளை வெகுவாக ஈர்ப்பதற்கும் இக்குளம்ஒரு பிரதான காரணமாக அமையும் என முன்னர் மத்திய மாகாண சபை உறுப்பினராக பதவிவகித்த காலத்திலிருந்து இதற்கான முயற்சிகளில் பங்கெடுத்த அமைச்சர் ஹக்கீமின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ் நம்பிக்கை தெரிவித்தார்
இக்குளத்தின் அபிவிருத்திப்பணியின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்வர்.