A+ A-

ஒற்றுமையாக செயற்பட்டால் நுவரெலியாவில் ஒரு ஆசனத்தைப் பெறலாம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்
நுவரெலியா மாவட்டத்தில் சிறு தொகையான வாக்குகளை வைத்துக்கொண்டு பல கட்சிகளாக பிரிகின்றபோது மாகாணசபையில் ஒரு உறுப்பினரை பெறுவதென்பது இயலாத காரியம். ஆனால், ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக செயற்பட்டால் அதனை சாத்தியமாக்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஹபுகஸ்தலாவ குளத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (13) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது;

நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற ஹபுகஸ்தலாவ பிரதேசத்திலிருந்து பிரதேச சபைக்கான உறுப்பினரை தெரிவு செய்வதற்கு அப்பால், எதையும் சாதித்துக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் இருந்தாலும் நாங்கள் கடந்த காலங்களில் மத்திய மாகாண சபைக்கு இந்த ஊரைச் சேர்ந்த சகோதரர் நயீமுல்லாவை ஒரு உறுப்பினராக தெரிவு செய்வதற்கான வாய்ப்பு, கண்டி மாவட்டத்திலிருந்து கிடைத்தபோது அதனூடாக ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.

எதிர்காலத்தில் நாங்கள் ஏனைய கட்சிகளோடு மலையகக் கட்சி, ஐ.தே.க. மற்றும் எங்களுடைய சகோதர கட்சிகளோடு தொடர்புபட்டு எப்படியாவது, மாகாண சபைக்கான பிரதிநிதித்துவத்தை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான முயற்சியில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு பங்களிப்புச் செய்ய வேண்டும்.

சிறு தொகையான வாக்குகளை வைத்துக்கொண்டு நான்கு, ஐந்து கட்சிகளாக பிரிகின்றபோது இந்த நுவரெலியா மாவட்டத்தில் ஒரு உறுப்பினரை பெறுவதென்பது இயலாத காரியம் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே அது சம்பந்தமாக நாங்கள் எல்லோரும் ஒரு கூட்டு முயற்சியை செய்ய முடியுமாக இருந்தால் சாலச்சிறந்ததாக இருக்கும்.

கண்டி மாவட்ட வாக்குகளில் மாத்திரம் தங்கியிருக்காமல், நுவரெலியா மாவட்டத்தில் எங்களுக்கென்று ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஏனைய மலையக தமிழ் கட்சிகளையும் நாங்கள் அரவணைத்துக்கொண்டு ஏதாவது உடன்பாட்டோடு செயற்பட முடியுமாகவிருந்தால் சாதித்துக்கொள்ள முடியும்.

செப்டம்பர் மாதம் மத்திய மாகாண சபை கலையவுள்ளது. மாகாண சபைக்கான தேர்தல் மிக விரைவில் வரவுள்ள சூழலில், அதிலும் புதிய தேர்தல் முறையை புறந்தள்ளிவிட்டு பழைய முறைக்கு போக முடியுமாகவிருந்தால், இந்த மூன்று விருப்பு வாக்குகளும் இருக்கின்ற நிலையில் இங்கிருக்கின்ற பிரதான கட்சிகளின் அபேட்சகர்களையும் கவனத்திற்கொண்டு எங்களுக்கென்று ஒரு உறுப்பினரை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 6.7 ஏக்கர் பரப்பில் ஹபுகஸ்தலாவ குளம் புனரமைக்கப்படுவதுடன், அதனை அண்டிய குளக்கரை பிரதேசமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

ஹபுகஸ்தலாவ குளத்தை புனரமைப்பு செய்கின்ற இந்த பணியையும், குளத்தை சூழவுள்ள பிரதேசங்களை மக்கள் ஓய்வெடுக்ககும் பிரதேசமாகவும், இயற்கை வனத்தை இரசிக்கக்கூடிய வகையில் ஒரு நடைபாதையும் உள்ளடக்கியதாக அமைத்துக்கொள்வதற்கு பாரிய நிதி ஒதுக்கீட்டை என்னுடைய அமைச்சினூடாக செய்திருக்கின்றோம்.
 
நீர்ப்பாசனத் திணைக்களத்தினூடாகத்தான் இதை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், திட்டமிடல்களையும் செய்வதற்கு இந்த திணைக்களத்தின் அனுசரணை திறம்பட செய்து முடிக்கலாம். இதை சிறிய குளம் என்று அவர்கள் மறுத்த நிலையில், மத்திய மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எங்களது வேண்டுகோளையேற்று முன்வந்தமைக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும்.

இந்த குளத்தின் புனரமைப்பின் மூலம் இந்த கிராமத்தின் பண்டையகால முக்கியமான சொத்தை நாங்கள் மீளமைத்துக் கொள்கின்றோம். இதுதவிர அம்பலத்து கடையிலிருந்து தக்கிய வரையும் முழுப்பாதையும் சீரமைப்பது மாத்திரமல்லாம் வடிகான்னையும் ஒழுங்காக செய்து முடிப்பதற்காக மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு 30 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளேன். தக்கியாவிலிருந்து பெரிய பள்ளி வரையிலான பாதை தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக  அவசரமாக முடித்துத்தருமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.. 

அம்பலத்து கடையிலிருந்து தக்கிய வரையிலான பாதைகளுக்கும் நவீன தெரு விளக்குகளை அமைத்து தருகின்ற மேலதிகமாக செய்துதருவேன்.

ஹபுகஸ்தலாவ ஊரைப் பொறுத்தவரையில் இங்கிருக்கின்ற தேசிய பாடசாலையில் பௌதீக வள அபிவிருத்தி தேவைப்பாடுகளின் துரித பல தேவைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பாடசாலை இந்த கிராமத்துடைய முக்கியமான கலங்கரை விளக்கமாக இருந்து கொண்டிருப்பதையிட்டு, அந்த பாடசாலையில் நான் ஆறு மாதங்களாவது படித்தவன் என்பதில் நான் மிகவும் சந்தோசப்படுகின்றேன். இந்த பாடசாலையின் மேலதிக தேவைப்பாடுகளையும் என்னால் இயன்ற உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

இப்போது பாரிய முதலீடுகளை நீர் வழங்கல் திட்டங்களுக்கு செலவிடுகின்றபோது எனது தாயாரின் சொந்த ஊரான இந்த ஊருக்கு ஒரு நீர் வழங்கல் தொகுதியை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற முயற்சியில் எல்லோம் ஆர்வமாக இருக்கின்றார்கள். இது குறித்து கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபாவை நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். 

சூழவுள்ள மூன்று குளங்களிலிருந்து நீரைப்பெற்று இந்த கிராமத்துக்கான நீர் வழங்கல் திட்டத்துக்கான முழு திட்டமிடலையும் செய்து அதற்கான திட்டமிடல் அறிக்கையையும் நாங்கள் வெளிநாட்டு வழங்கல் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளோம். மிகவிரைவில் அதற்கான வெளிநாட்டு உதவியை பெறுவதற்கான முயற்சியில் நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றோம். மிக விரைவில் அது சாத்தியமாகும்.

கொத்மலை தொகுதியில் பல கிராமங்களுக்கு 700 மில்லியனுக்கு மேல் நாங்கள் நிதி ஒதுக்கியிருக்கின்றோம். சிறு சிறு கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அவற்றை மிகவிரைவில் செய்து முடித்து அவற்றை திறப்பதற்கான ஒழுங்குகளையும் செய்யுமாறு என்னுடைய செயலாளருக்கு பணித்தருக்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான அசோக ஹேரத், குமார தஸநாயக்க, அமைச்சின் செயலாளர் ஹப்புஆராச்சி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏக.ஏ.அன்சார், அமைச்சரின் பிரத்தியேச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் எம்.அனஸுல்லாஹ், அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.