ஒலுவில் துறைமுகத்திலும் அதனை அண்டிய கடலோரத்திலும் குவியும் மணலை அகழ்ந்து அகற்றுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அதற்கென பிரத்தியேகமான கப்பலொன்றை கொள்வனவு செய்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு துறைமுக அதிகார சபை முன்வந்துள்ளது. நிரந்தரமாக கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு அணை அமைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சரின் ஏனைய வேண்டுகோள்களான பிரஸ்தாப துறைமுக விஸ்தரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை மாற்றுக்காணிகளுடன், பணமாகவும் துரிதமாக வழங்குவதற்கும், அந்த பிரதேசத்தை முதலீட்டு வலையமாக அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் தொலைநோக்கு சிந்தனையின் பயனாக தோற்றுவிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகப் பிரதேசத்திலும் நிந்தவூர் முதலான அதனை அண்டிய பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் அங்கு வசிக்கும் மக்களும் மீனவர்களும் நீண்ட காலமாக பாதிப்புக்கு உள்ளாகிவருவதை கருத்திற்கொண்டு அமைச்சர் ஹக்கீமினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதை தொடர்ந்தும், அமைச்சருடன் ஒலுவிலுக்கு சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிலைமையை நேரில் கண்டறிந்ததை அடுத்தும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
கடலோரத்தை மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கும் உரிய திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கும் ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணியில் ஈடுபட்ட டென்மார்க் நாட்டின் டெனிடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதோடு, கடலோரபாதுகாப்பு திணைக்களம் அதற்க்கு ஒத்துழைப்பு வழங்கும். இவற்றுக்கு 12 மில்லியன் அமெரிக்கா டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒலுவில் கரையோரப்பகுதிகளை செப்பனிடுவதற்கும் ஒரு முதலீட்டு வலயமாக அந்தப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் மீண்டும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன. முன்னர் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏழு நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பித்திருந்த போதிலும், அவற்றில் ஒருநிறுவனம் மட்டுமே உரிய காலத்தில் முழுமையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்திருந்ததாக தெரிய வருகிறது.
அத்துடன் அமைச்சர் ஹக்கீமின் தொடரான அழுத்தத்தின் பயனாக ஒலுவில் துறைமுக காணிசுவீகரிப்பில் தமது காணிகளுக்கான உரிய இழப்பீடுகளை இதுவரை பெறாதவர்களுக்கு அவற்றுக்கான மாற்றுக்காணிகளுடன் ஒவ்வொரு பேர்ச் நிலப்பரப்புக்கும் 30 ஆயிரம் ரூபாய்களை வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை துறைமுக அதிகார சபை கேட்டுள்ளது.