A+ A-

தேசப்பற்றென்பது அநேகமானவர்கள் வார்த்தைகளில் மட்டுமே காணப்படுகிறது அமைச்சர் ஹக்கீம் விசனம்.தேசப்பற்றென்பது அநேகமானவர்களின்  வார்த்தைகளில்  மட்டுமே காணப்படுகிறது. மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அரசியல் செய்வதில் சிலர் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.தேசப்பற்று என்பது ஒவ்வொருவரினதும் மனதிற்குள் இருக்க வேண்டிய விடயம் ஆனால் பலரின் வார்த்தைகளில்  மட்டுமே அது வாழுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்  அமைச்சர் ரவூப்  ஹக்கீம்கூறினார். 
புத்தளம்  மாவட்டம் முந்தல் மங்கள எளிய , நவன்டன் குளம் மற்றும் கட்டைக்காடு ஆகிய பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (RO Plant)  திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை  (07)  இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
புத்தளம் மாவட்ட நிலத்தடி நீரில் அதிக உவர்தன்மை காணப்படுவதால், சிறுநீரக நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறான குடிநீர் சுத்திகரிப்பு திட்டங்களின் மூலம் இனம்காணப்படாத சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும்.
2.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு RO Plant மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன இந்நிகழ்வில் .
மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், கட்சியின் உயர்பீட உறுப்பினர் பைரூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்தும் இங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் 

இன்றைய ஊடகங்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு தொடர்பில் கருத்துக்கேற்கின்றனர். அபிவிருத்தி செய்திகளைவிடவும் இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் தான் ஊடகங்களும் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றன.
இதுதொடர்பில் கூறுவதென்றால் நாள் முழுக்க கூறலாம். ஆனால் பொறுப்புவாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் என்கின்ற விதத்தில் அந்த பொறுப்பை மனதில் வைத்தே கதைக்கவேண்டியுள்ளது.ஒருவர் ஒரு கருத்தை சொல்லிவிட்டார் என்றால் அந்த கருத்து தொடர்பில் நாம் நமது நியாமான பார்வையை செலுத்தவேண்டும். கருத்து சொல்லுகின்றவரின் மனோநிலை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். அந்த வகையில் தான் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்களையும் நோக்கவேண்டியுள்ளது. அவரது கருத்துக்களுக்கு வெவ்வேறான அர்த்தங்களை கற்பித்து சிலர் தமது தேசப்பற்றை நிரூபிக்க முனைகின்றனர். உண்மையில் இவர்களது தேசப்பற்றானது வாய்களிலிலும், வார்த்தைகளிலும் மட்டுமே காணப்படுகின்றன.

கடந்த காலத்தில்  விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றபோது பிரபாகரனுடன்  உத்தியோகபூர்வமாக அரச சார்பில் பேசியவர்களில் நானுமொருவன்.எமது அரசாங்கம் நடாத்திய ஆறு பேச்சு வார்த்தைகளில் அரசின் பிரதிநியாக நானும் கலந்துள்ளேன்.தற்போதைய பாராளுமன்றத்தில் நாங்கள் மூவர் இருக்கின்றோம் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி .சில்வா ஆகியோருடன் நானும் இந்த பேச்சு வார்த்தைகளில் பிரபாகரனின் அணியினருடன் ஈடுபட்டோம். இந்த பேச்சு வார்த்தைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காலஎல்லையில் இடம்பெற்றன.பிரபாகரனுடன் நேரடியாக நெருக்குநேராக சுமார் மூன்று மணித்தியாலங்கள் நான் தனிமையில் கதைத்துள்ளேன்.பிரபாகரனின் எண்ணம் எத்தகையது என்பதனை  இந்த சந்திப்பின் பின்னர் நான் தெளிவாக உணர்ந்தேன்.பிரபாகரன் ஒருபோதும் இலங்கை அரசின் கீழ் இணங்கி செயற்பட விரும்புகின்றவராக இல்லை என்பதனை அவரது பேச்சுக்கள் வலியுறுத்தின.இலங்கை அரசோடு பிரபாகரன் ஒத்துப்போக விரும்பவில்லை என்பதனை அன்றைய அரச தலைமைக்கு நாங்கள் தெரிவித்தோம்.

இருந்தும் தற்போது மக்களை குழப்பும் விதத்தில் அவர்களின் மனத்தில் பொய்யான சந்தேகங்களை உண்டுபண்ணும் நோக்கில் ஊடகங்கள் முன்னின்று செயற்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.எதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறான ஒரு கருத்தை சொல்லியிருக்க முடியும்.இதற்காக ஒவ்வொரு சந்திகளிலும் போராட்டங்களை நடத்த பொதுமக்கள் தூண்டப்படுகின்றனர். சில பிரதேசங்களில் சிறுசிறு குழுக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் வியாபாரிகள் இருக்கின்றார்கள். அவர்களது தேவையும் எப்போதும் இந்த நாட்டை ஒரு குழப்பமான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே. தெற்கிலுள்ள மக்களின் மனங்களில் சந்தேகங்களை விதைத்து மீணடும் வடக்கையும் தெற்கையும் துருவபடுத்துகின்ற செயற்பாடாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

நான் ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவன் என்ற வகையில் உங்களுக்கு தெரியும் எனது சமூகம் விடுதலைப்புலிகளினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தது. பல்லாயிரம் உயிர்கள், சொத்துக்கள்,வியாபார ஸ்தலங்கள் என்று முஸ்லிம் சமூகத்திற்கு அவர்கள் செய்த அநியாயங்கள் இலகுவில் கடந்து போய்விடமுடியாதது. இருந்தும் நாம் இப்போது தேசிய ஒற்றுமை பற்றியும் இந்நல்லிணக்கம் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படவேண்டிய இந்தநேரத்தில் தெற்கில் நடத்தப்படுகின்ற இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இனங்களுக்கிடையில் இன்னும் விரிசலை மட்டுமே ஏற்படுத்தும்.

எதிர்பாராமல் ஒருவார்த்தை பிழையாக வெளிவந்தமைக்காக அவரை தூக்கிலிட்டு கொல்லவா? இவர்கள் சொல்கிறார்கள்.தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். ஆனால் இப்போது வடக்கில் இருக்கின்ற நிலவரத்தை நாம் சிந்திக்கவேண்டும். அங்கே  சட்டமும் ஒழுங்கும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றன.  அண்மையில் யாழ்ப்பாணத்தில்  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உறவுக்கார பெண் தனது கணவரின் முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை அங்கு உணரப்படுகின்றது.சட்டவிரோத குழுக்களின் ஆளுகையும். செயற்பாடும் அங்கு மிகையாக இருப்பதனை உணரமுடிகிறது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மிக நீண்ட உரையின் ஒரு சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாக இருக்கின்றது. அவர் என்ன பேசினார் எவ்வாறான நிலையில் பேசினார் என்கின்ற அடிப்படை அறியாதவர்களே இப்போது வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிகோலுகின்றனர்.

இந்த பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுக வேண்டும். இதனை இலகுவில் தீர்த்துக்கொள்ள வழி இருக்கின்றது.அவருக்கென்று ஒரு கட்சி இருக்கின்றது.கட்சி ரீதியாக அவரை விசாரணை செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவார்கள். அதற்குள் இப்போது அவர் தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளார். இப்போது பிரதமரின் தலைக்கு குறிவைக்கின்றனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என கோஷமிடுகின்றனர். ஐ.தே.கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைத்திருந்தால் பிரபாகரன் கேட்டதை கொடுத்திருக்க முடியும்.பிரபாகரனின் கோரிக்கைகக்கு இணங்காத காரணத்தினால் தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியடைய வேண்டி ஏற்பட்டது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் விடுதலை புலிகளிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு தகவல் வந்தது எங்களுக்கு  சுயாட்சி தருவதாக இருந்தால் உங்களுக்கு வாக்களிப்போம் என்று அதனை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்வில்லை. அப்படியென்றால் இந்த நாட்டை ரணில் விக்ரம சிங்க காப்பாற்றியுள்ளார்.இதனால் விடுதலை புலிகள் வடக்கு மக்களை பலவந்தமாக வாக்களிப்பதிலிருந்து தடுத்தனர். அந்த தேர்தலில் அவர் தோல்வியுற்றார். இந்த விடயத்தை நன்கறிந்தவன் நான்.அன்று தேர்தல் வெற்றியை விடவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த நாட்டின் இறைமையை காப்பாற்றவேண்டும் என்கின்ற எண்ணமே இருந்தது அதனால் அன்றைய தேர்தலில் தோல்வியுற்றார்.

அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதும்,இந்த நாடு யுத்தமற்ற பூமியாக மாறியதும் நன்றியோடு நினைவுகூறத்தக்கது. அவரது காலத்தில் யுத்தம் நிறைவுக்கு வந்திருக்கா விட்டால் இன்னும் நாம் துன்பத்தை தான் அனுபவித்துக்கொண்டுதான் இருப்போம்.என்னை பொறுத்தமட்டில் எல்லா அரச தலைவர்களும் எனக்கு ஒன்றுதான். ஒரு நாட்டின் தலைவர் அந்த நாட்டை காட்டிக்கொடுக்கின்ற ஒருவராக இருக்கமாட்டார். அவர் அந்த நாட்டை பாதுகாக்கின்ற ஒருவராகவே இருப்பார் அந்தவகையில் ரணில் விக்ரம சிங்கவாகட்டும் அல்லது மகிந்த ராஜபக்ஷவாகட்டும் இவர்கள் நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படவில்லை.எங்களுக்குள் இருக்கும் அரசியல் முரண்பாடுகளுக்காக உண்மைகளை மறுக்கமுடியாது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் நாம் கைத்தசாத்திட்டத்தை நாட்டை காட்டிக்கொடுத்ததாக சிலர் பேசுகின்றார்கள். உண்மையில் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முக்கிய காரணமே யுத்த நிறுத்த ஒப்பந்தம் தான். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னரே கருணா அம்மான் விடுதலைப்புலிகளை விட்டும் பிரிந்தார். அரசுடன் இணைந்து செயற்பட்டார். அது புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தவெற்றியை தனியொருவர் கொண்டாட முடியாது இதன் பின்னணியில் முப்படைகளின் தியாகம் இருக்கின்றது. அதனை அதனை கௌரவிக்க வேண்டும்.அரசியல் ரீதியாக தீர்மானங்கள் எடுக்கின்றபோது சில நேரங்களில் சிறு தவறுகள் ஏற்படுவதுமுண்டு ஆனால் அவை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுவதில்லை சர்வதேச ரீதியாகவும் இலங்கையில் சாமாதனத்தை ஏற்படுத்த பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவைகள் இராஜதந்திர ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் பார்க்கப்படவேண்டியவை.

எனவே விஜயகலா மகேஸ்வரின் விடயத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என ஊடகங்களை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அதைவிடவும் முக்கிய பிரச்சினைகள் இந்த நாட்டில் இருக்கின்றன. என அவர் கூறினார்.

நாச்சியாதீவு பர்வீன்