A+ A-

மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.


மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது பல குளறுபடிகளை கொண்டது. முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கக்கூடியது. எனவே பழைய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கட்டுகஸ்தொட்டையில் அமைக்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்திற்கான அமைச்சரின்  ஒருங்கிணைப்பு அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை (13) அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பிரதித்தலைவர் எம்.எச்.எம்.சல்மான், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லாஹ்,தேசிய ஒற்றுமை முன்னணியின் செயலாளர் மஹியலால் சில்வா  மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இங்கு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரைநிகழ்த்திய அவர் 

இந்த அரசாங்கத்தின்  அபிவிருத்தி தொடர்பில் எவ்விதமான குறைகளையும் சொல்லமுடியாது காரணம் நான் இதுவரை பல அமைச்சுப்பொறுப்புக்களை வகுத்துள்ளேன் அந்த அமைச்சுக்களின் மூலம் செய்ய முடியாத அபிவிருத்தியை இந்த அரசாங்கத்தின் மூலம் எனது அமைச்ச்சுக்கூடாக செய்துள்ளேன். பாரிய பல அபிவிருத்திகள் கடந்த மூன்று வருடங்களில் இடம் பெற்றுள்ளன. எனது அமைச்சை பொறுத்தமட்டில் சுமார் 15 வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஒன்பது வேலைத்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.நீர் வழங்கல் திட்டங்களுக்காக மட்டும் இந்த அரசாங்கம் 300 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. வரலாற்றில் இதற்க்கு முன்னர் எந்த அரசும் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 3.5 மில்லியன் பொதுமக்கள் பயனடைய உள்ளனர். 

அதுமட்டுமல்ல கண்டியில் மட்டும் இரண்டு நீர் வழங்கல் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். ஓன்று சீன அரசின் நிதியுதவியுடன் மற்றையது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த இரண்டு அரசாங்கத்திற்குமிடையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல உறவு கிடையாது என்பது உலகறிந்த விடயம்.இருந்தும் இவ்விரு அரசாங்கமும் நமக்கு உதவி புரிகின்றன. 

அவ்வாறே சமூக நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 1000 சங்கங்களுக்கூடாக நீர் வழங்கல் திட்டத்தினையும் கொண்டு நடத்த திட்டமிட்டுள்ளேன். தற்போது புதிதாக வந்துள்ள எமது இராஜாங்க அமைச்சரின் ஊடாக இந்த திட்டத்தை நடத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இந்த திட்டங்களின் மூலமும் அத்தோடு அரசின் நிதி ஒதுக்கீட்டையும் எடுத்துக்கொண்டு நாங்கள் இந்த சமூக நீர் வழங்கல் திட்டத்தினை வலுவானதாக ஆக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். அவ்வாறே  இந்த அரசின்  "கம்பரலிய"  வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச காரியாலத்திற்கூடாகவும் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு குறித்த பிரதேச செயலகத்திற்குற்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்கின்ற வேலைத்திட்டங்களை ஆராய்ந்து அவற்றை செயற்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. அவை இந்த வருட இறுதிக்குள் நடாத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த மக்கள் தொடர்பாடல் பணிமனை மக்களுக்கும் எங்களுக்குமான தொடர்பாடலை தொடர்ச்சியாக பேணுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். கண்டி மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 14 ஆசனங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இது இதற்க்கு முன்னர் நாம் பெற்றுக்கொள்ளாத அளவாகும். எனவே கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தியில் இன்னும் அவதானத்தைதை செலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.   

மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது பல குளறுபடிகளை கொண்டது. முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கக்கூடியது. எனவே பழைய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடத்தவேண்டும். பழைய முறையில் விருப்பு வாக்கு தொடர்பிலான மதபேதங்கள் ஏற்பட்டாலும் அதைவிடவும் பெரிய பிரச்சினை புதிய முறையில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புதிய தேர்தல்முறையை ரத்து செய்துவிட்டு அவசரமாக பழைய முறைப்படியே மாகாண சபைகள் தேர்தலை நாடாத்துவதே நல்லது.

 இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இந்த குளறுபடியை நாம் அவதானித்தோம். சபையில் ஆட்சி அமைப்பதில் பலத்த சவாலும், குழப்ப நிலையும் ஏற்பட்டது. சபையின் தலைவரை தெரிவு செய்வதில் இழுபறிநிலை ஏற்பட்டது.அதுமட்டுமல்ல பெருமளவில் பணப்பரிமாற்றமும் இடம்பெற்றது. சிலஉறுப்பினர்கள் தலைவர் தெரிவுக்கு வாக்களிக்க நேரடியாக பணத்தினை கேட்டனர். இன்னும் சிலர் விலைபேசப்பட்டனர். இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லோருக்கும் தெரிந்த விடயமது. எல்லா கட்சி தலைவர்களுக்கும் இது பெரும் தலையிடியாக அமைந்தது. இவ்வாறான ஒரு குழப்பகரமான போக்கு புதிய தேர்தல் முறையினால் உருவாகியதை நாம் அனைவரும் மறந்திருக்க முடியாது.இந்த முறையில் இருந்து நாம் தூரமாகி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

இப்போது மாகாண சபை தொகுதி பிரிப்பானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விரைவில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என எல்லா இடங்களிலும் கூறுகிறார். நானும் அதையேதான் சொல்கிறேன் தேர்தலை பிற்போடாமல் நடத்துங்கள் பழைய முறைப்படி.ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஆங்காங்கே உளறிக்கொண்டு திரிகிறார். அவர் சொல்வது போல ஒருநாளும் மாகாண சபை தேர்தலை அங்கீகரிக்க முடியாது. தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்தவர்களுக்கு இதுபற்றி எதுவும் விளங்காது.புண்ணியத்திற்கு பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்துவிட்டு எங்களை குறைகூறுகின்றார்கள். விருப்பு வாக்கு முறைமைக்கு மீண்டும் செல்ல முடியாதாம், புதிய தேர்தல் முறைக்கு தான் செல்ல வேண்டுமாம். இது தேர்தலை பிற்போடும் உபாய மார்க்கமாகும்.தேர்தலுக்கு முகம் கொடுக்க இவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தத்தை குறைப்பதற்கு இவ்வாறான காரணங்களை கூறுகின்றனர். 

மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ள நிலையில் இதனை மட்டும் காரணம் காட்டுவது வேடிக்கையான விடயமாகும்.ஒரு தேர்தல் முடிவானது தீர்க்கமானதாக இருக்கவேண்டும். வெற்றி பெற்றவர்கள் சபையை அமைப்பதற்கு இடையூறாக எந்தக்காரணமும் இருக்க முடியாது. அவ்வாறு இருக்குமாயின் அந்த தேர்தல் முறையில் பிழை உள்ளது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு நடத்துமாறு நாம் கோருகின்றோம். இதுதொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் தெளிவான ஒருநிலைபாட்டில்தான் இருக்கிறார்.பழைய விருப்புவாக்கு முறைப்படி தேர்தலை  விரைவில் நடத்த வேண்டும் என அவரும் கூறியுள்ளார். எனவே உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கு நான் சவால் விடுகின்றேன் தேர்தலை பிற்போடுவதற்கான தந்திரோபாயங்களை கைவிட்டுவிட்டு முடிந்தால் பழைய முறைப்படி இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்திக்காட்டுங்கள் எனக்கூறினார்.

நாச்சியாதீவு பர்வீன்.