A+ A-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28 வது பேராளர் மாநாடு-2018










ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28 வது பேராளர் மாநாடு கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. 

கடந்த வெள்ளிக்கிழமை(03) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்ற கட்டாய உச்சபீட கூட்டத்தில் மீண்டும் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்ட  அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தெரிவை அங்கீகரிக்குமுகமாக பேராளர்கள் ஒருமித்த குரலில் தக்பீர் முழங்கினர். 

தலைவர் ரவூப் ஹக்கீம் பேராளர்களின் அங்கீகாரத்தினை நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, அக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கட்சியின் பதவிநிலை அலுவர்களை பிரகடனம் செய்தார்.அதில் கட்சியின் தவிசாளராக ஏ.எல்.அப்துல் மஜீத், செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,பொருளாளராக எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரும் மேலும் ஏனைய பதவிநிலை அலுவலர்களும் அறிவிக்கப்பட பேராளர்கள்அதனை அங்கீகரித்தனர்.

தொடர்ந்து கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரினால் ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் பிரதானமாக கட்சி எதிர்நோக்கிய  முக்கியஅரசியல் சவால்களும்,நெருக்கடிகளும் எடுத்துரைக்கப்பட்டன. முக்கியமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் மாகாண சபை சட்டமூலத்தின் போது, அதனை சாணக்கியமாக எதிர்கொண்ட விதம் குறித்து வித்துரைக்கப்பட்டது. அத்தோடு கட்சியின் ஸ்தாபகத்தலைவர் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாறை நகரிலும் தற்போதைய தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்திலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவன்முறைகள் முஸ்லிம்களின் குரலாகிய காங்கிரசை ஒடுக்குவதற்காக செய்யப்பட்ட சதிநடவடிக்கைகள் என்பதை தெளிவு படுத்தி கூறினார். 

கடந்த ஒரு வருட காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் பலத்த சவால்களை முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுத்து சாமர்த்தியமாக வென்றெடுத்தது.சமூகம் தொடர்பில் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைவர் ரவூப் வெற்றிகண்டுள்ளார் என்கிறார். 

ஏனைய கட்சிகளை பார்க்கிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவமானது என்பதனை அதன் வெளியீடான "சாட்சியம்" சஞ்சிகையானது சான்று பகர்கின்றது. கட்சியின் எல்லா வகையான செயற்பாடுகளையும் சாட்சியம் பதிந்து வருகின்றது. இது வேறு எந்த கட்சிகளுக்கும் இல்லாத சிறப்பம்சமாகும். "சாட்சியம்" சஞ்சிகையின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களின் தனித்துவமான கட்சியானது எவ்வாறான செயற்பாடுகளை ஆண்டுதோறும் நடாத்தி வருகின்றது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது எனவும் நிஸாம் காரியப்பர் மேலும் கூறினார்.

இங்கு வரலாற்று சிறப்புமிக்க உரையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்த்தினார் 

மாகாண சபை சட்டத்திருத்தமானது ஆட்சியில் இருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் இரவோடு இரவாக பாராளுமன்ற சட்ட விதிகளை மீறி எங்களுக்கு தெரியாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமாகும். அந்த பிரேணை எங்களுக்கு தெரியாமல் தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது நாங்கள் எங்களது பலமான எதிர்ப்பினை தெரிவித்தோம். அப்போது இந்த நாட்டின் தலைமை வெளிநாட்டிலிருந்து எம்மோடு கதைத்தது இதில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவதாக வாக்களித்தது.ஆனால் இன்று அவற்றை உதாசீனம் செய்து கதைக்கின்ற போது இந்த நல்லாட்சியை கொண்டுவர ஒன்றிணைந்த சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்கு எதிரான ஆதரவினை தேடவிருக்கின்றோம். அதிலே நாங்கள் வெற்றியும் காண்போம் என்பதனை சொல்லிவைக்க விரும்புகிறோம்.

ஏனென்றால் இந்த சமூகத்தின் எதிர்காலம்,இந்த இயக்கத்தின் எதிர்காலம் என்பனவற்றை கேள்விக்குறியாக்குகின்ற விடயங்களில்  ஒருநாளும் நாம் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய தயாரில்லை என்பதனை பலமான செய்தியாக நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். மாகாண சபைகள் தொடர்பில் பிரிக்கப்பட்டுள்ள தொகுதியானது முஸ்லிம்களையும்,மலையக  தமிழர்களையும் பாதிக்கின்ற வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களினதும்,மலையக தமிழர்களினதும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவடையும் என்பதையும் மிகத்தெளிவாக நாங்கள் கூறியிருந்தும் இவற்றுக்கான தீர்க்கமான முடிவினை இந்த ஆட்சி எங்களுக்கு தர வேண்டும். 

சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் மற்றும் ஆன்மீகத்தலைமைகள் என பலதரப்பினராலும் மாகாண சபை தொடர்பிலான புதிய தேர்தல்முறையானது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை பரிசீலனை செய்யாமல் காலம் கடத்துகிறது இந்த அரசாங்கம். எங்களுக்கு அவர்சமாக தேர்தல் தேவை. இதுவரைக்கும் கலைக்கப்பட்டுள்ள பல மாகாணசபைகளின் கால எல்லையானது பல மாதங்களாக முடிவுற்ற நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் இன்னும் மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வருகின்றது. இந்த நிலையில் புதிய தேர்தல் முறையை பேசிப்பேசியே தேர்தலை பிற்போடுகின்ற வேலை செய்கிறார்கள். சில அரசியல்வாதிகள்  தங்களது அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை சமூகத்தின் மீதான அடிமை சாசனம் எழுத முனையும் இந்த வேலையை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த சூழ்ச்சியை  முறியடிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த பொது எதிர்கட்சியுடன் எதிர்வரும் வாரங்களில் பேச இருக்கின்றோம். அவர்களது ஆதரவினையும் பெற்று இந்த திட்டத்தினை  தோல்வியடைய செய்யவிருக்கின்றோம்.எங்களுக்கு வேறு மாற்று வழி கிடையாது. எமது மக்களை பலிக்கடாவாக்கவும் முடியாது. எங்களது சமூகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய தேர்தல் முறையின் மூலம் பலி கொடுக்கவும் நாங்கள் தயாரில்லை. அத்தோடு காலத்தை வீணடித்து மாகாண சபைத்தேர்தலை பிற்போடுகின்ற இந்த நிலவரத்தை இனி ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும் என்பதனை அழுத்தமாக சொல்லுகின்ற வகையில் எங்களது நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் இருக்கும்.

எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழுவில் சபாநாயகர் கடந்த வாரம் என்னையும் நியமித்துள்ளார். இது ஒரு கண்துடைப்புக்காகவும்,என்னை சமாளிக்கவும் செய்யப்பட்டதாகும்.இதற்க்கு நான் தயாராக இல்லை உடனடியாக அதிலிருந்து இராஜனாமா செய்ய நான் தயாராகிக்கொண்டு இருக்கின்றேன். இது தொடர்பில் பிரதமரிடம் நான் தெளிவாக கூறியிருக்கிறேன். இந்தக்குழுவில் இருந்து கொண்டு ஏற்கனவே பிரிக்கப்பட்ட எல்லைகள் தொடர்பில் செய்வதற்கு ஒன்றுமில்லை.ஏழு உறுப்பினர்களை மட்டுமே அம்பாறை மாவட்டத்தில் பெற முடியும், தொகுதி பிரிப்பில் குளறுபடி, இலகுவாக ஒரு உறுப்பினரை பெறக்கூடியளவில் செறிவாக வாக்குகளை கொண்ட பிரதேசங்களில் ஒரு உறுப்பினரையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை, போதியளவு தொகுதிகளை உருவாக்க முடியாத சிக்கல்,இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்ட முடியாத நிலையில் இந்த மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாயின் சிதறிவாழுகின்ற முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் பாரியளவில் தமது பிரதிநிதிகளை மாகாண சபையில் இழக்க வேண்டியிருக்கும்.